2024-ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு இணங்க 2024 – ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று இந்திய உணவுக்கழகத்தின் சென்னைக் கோட்ட மேலாளர் திரு தேவேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஆசியாவிலேயே 2-வது பெரிய கிடங்கு அமைந்துள்ள ஆவடியில் இந்திய உணவுக்கழக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ஆந்திரா, சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறினார். பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் கோதுமை ஆவடிக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் கிடங்கில் இருந்து சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் ரேஷன் கடைகளுக்கான அரிசி அனுப்பப்படுவதாக குறிப்பிட்ட அவர், ஒன்றரை கோடி பயனாளிகளுக்கு ரேஷன் அரிசி வழங்கப்படுவதாக கூறினார்.
83 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆவடிக் கிடங்கில் 1,71,000 மெட்ரிக்டன் அரிசி இருப்பு வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தஞ்சாவூர், வேலூர், கடலூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி, சென்னை ஆகிய ஆறு இடங்களில் கிடங்குகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக அமிர்தகால மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்திய உணவுக்கழகத்திற்கு உணவு தானியங்கள் கொண்டுவரப்படுவது மற்றும் இங்கிருந்து வெளியே அனுப்பப்படுவது பற்றி செய்தியாளர்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.