கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. ஆளும் பாஜக 66 இடங்களிலும், மாநில கட்சியான ஜனதாதளம்(எஸ்) 19 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் கர்நாடகத்தின் புதிய முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோரில் யார் முதலமைச்சர் என்பதுதான் இப்போது முக்கிய கேள்வி.
இருவரும் முதலமைச்சர் பதவியை பெறுவதில் விடாப்பிடியாக உள்ளனர். அவரவர் ஆதரவாளர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் காங்கிரஸ் சட்டசபை குழு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில், முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கு கட்சி மேலிடத்துக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய முதலமைச்சர் யார் என்பது என்று இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், நேற்று பெங்களூருவில் டி.கே.சிவக்குமார் சார்ந்த ’ஒக்கலிகர்’ சமூகத்தின் கூட்டம் நடந்தது. அப்போது, டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
சித்தராமையா சார்ந்த ’குருபா’ சமூகமும் சித்தராமையாவுக்கு முதலமைசர் பதவி வழங்க வேண்டும் என்று காங்கிரசிடம் வலியுறுத்தி உள்ளது. இக்கூட்டத்தில், ’குருபா சமூகத்தில் இருந்து 14 பேர் காங்கிரசில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளவர்கள் உள்பட 100 எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையா முதலமைச்சராக ஆதரவு தெரிவிக்கிறார்கள். சித்தராமையாவை அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், தனது பிறந்தநாளை பெங்களூரூவில் தொண்டர்கள், குடும்பத்தினருடன் கொண்டாடிய டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், ‘’கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தான் காரணம். அவர்களை நான் பாராட்டுகிறேன். மக்கள், எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். கூட்டு தலைமையின் கீழ் நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றினோம். அதனால் எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.
கர்நாடகத்தில் வெற்றி பெறுவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரிடம் நான் கூறினேன். பாஜக என்னை சிறையில் வைத்தபோது, என்னை சோனியா காந்தி சந்தித்து ஆறுதல் கூறியதை என்னால் மறக்க முடியாது. காந்தி குடும்பம், காங்கிரஸ் மற்றும் நாட்டு மக்கள் என் மீது காட்டிய அன்பு தான் எனக்கு நம்பிக்கையை அளித்தது. சித்தராயைா உள்பட கட்சியின் அனைத்து தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்று கூறினார்.
இதற்கிடையில் நேற்று டெல்லி சென்ற சித்தராமையா, ‘’கட்சி மேலிடம் முடிவு செய்யும்’’ என்று ஒற்றை வரியில் முதலமைச்சர் தேர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
இந்த நிலையில், அவர் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவர் புறப்படும் முன் நிருபர்களிடம் பேசும்போது, ’’கட்சி விரும்பினால் அவர்கள் எனக்கு பொறுப்பை வழங்கலாம். எங்களுடையது ஒற்றுமையான ஒரு வீடு. எங்களுடைய எண்ணிக்கை 135. யாரையும் பிரிக்க நான் விரும்பவில்லை. அவர்கள் என்னை விரும்புகிறார்களா அல்லது இல்லையா என்பது விஷயமல்ல. நான் பொறுப்புள்ள நபர். நான் மிரட்டமாட்டேன்’’ என கூறினார். இதனை தொடர்ந்து, இன்று மதியம் டெல்லி வந்து சேர்ந்தார்.
இதன்பின், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை முடிவு செய்யும் கட்சியின் தலைமையுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகம் பரபரப்புடன் காணப்படுகிறது. கர்நாடக காங்கிரஸ் தொண்டர்கள் பலர் அங்கு குவிந்துள்ளனர்.

