நீதிமன்ற தீர்ப்பின்படி அ.தி.மு.க பொதுச்செயலாளர் என்ற அங்கிகாரத்துடன் தஞ்சை சென்ற எடப்பாடி பழனிசாமி-க்கு மிகப்பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுக்கூட்டம் நடந்த இடம் வரை கட்சித் தொண்டர்கள் திரளாக திரண்டிருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் வைத்தியலிங்கம் எம்.எல்.ஏ., சொந்த தொகுதி ஒரத்தநாடு.
தஞ்சை என்றாலே சசிகலா குடும்பம்தான் என்பதை உடைக்கும் வகையில் அ.தி.மு.க-வினர் எழுச்சியுடன் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு ஏற்றாற் போலவே, வைத்திலிங்கம், டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என்று அத்தனை பேரையும் வறுத்தெடுத்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
எம்.ஜி.ஆர். தோற்றுவித்த, ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் சேகர் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் இணைந்ததை வரவேற்கிறேன். துரதிருஷ்டவசமாக அ.ம.மு.கவுக்கு சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கத்தில் இணைந்து உள்ளனர். ஒவ்வொரு தொண்டர்களும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
கட்சியில் நிர்வாகியாக, எம்.எல்.ஏ.வாக., அமைச்சராக, எம்.பி.யாக இருந்த வைத்திலிங்கத்திற்கு அந்த எண்ணம் இல்லை. 20 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதில் இருந்து வைத்திலிங்கம் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
என்னை திட்டுவதற்கு ஒரு கூட்டம் எல்லா அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு ஏதாவது செய்து தாருங்கள் என்று கூறுவார்கள். ஆனால் யாருக்கும் எதுவும் செய்யக்கூடாது என்று கூறியவர் தான் வைத்திலிங்கம். இப்படிப்பட்டவரை நான் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது.
திருச்சியில் ஒரு கூட்டத்தை கூட்டி ஓ.பன்னீர்செல்வமும், வைத்திலிங்கமும் என்னைத்தான் திட்டினார்கள். என்னை திட்டி எந்த பிரயோஜனமும் இல்லை. நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன். நான் மட்டும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இல்லை. இங்கு வந்திருக்கும் அனைத்து அ.தி.மு.க.வினரும், பொதுச்செயலாளர்கள் தான். ஓராயிரம் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் வந்தாலும் அ.தி.மு.க.வில் துரோகிகளுக்கு இடம் இல்லை.
ஜெயலலிதா சட்டசபையில் பேசும் போது எனக்கு பின்னால் இந்த இயக்கம் நூறாண்டுகளுக்குமேல் இருக்கும் என்று கூறினார். அவர் மறைவுக்குப்பின்னர் எவ்வளவோ சோதனைகளை நாம் சந்தித்தோம். அதற்கு யார் காரணம்?.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். பின்னர் அ.தி.மு.கவில் இணைந்தார். ஜெயலலிதா இரவு, பகலாக உழைத்து 2016-ல் அ.தி.மு.க. ஆட்சியை உருவாக்கினார் ஆனால் அந்த ஆட்சியை கலைக்க, எதிர்த்து வாக்காளித்தார். அவரை அ.தி.மு.க. தொண்டர்கள் எவரும் மன்னிக்க மாட்டார்கள்.
நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், கட்சி வலிமையோடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி, துணை முதலமைச்சர் பதவி கொடுத்தோம். இதைவிட வேறு என்ன செய்ய வேண்டும். எப்படி விசுவாசமாக இருக்க முடியும்?
டி.டி.வி. தினகரன் 10 ஆண்டு காலம் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர். ஓ.பன்னீர்செல்வத்தை அவர் துரோகி என்றார். தி.மு.க. எங்கள் எதிரி, டி.டி.வி. துரோகி என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். துரோகிகள் என மாறி, மாறி கூறியவர்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளனர். கட்சி, ஆட்சியை டி.டி.வி.தினகரனால் கைப்பற்ற முடியாது.
முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது விசாரிக்க வேண்டும் என்றார். நம்மை உருவாக்கிய தலைவர் ஜெயலலிதா. அவருடைய மறைவு தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமா? என நாங்கள் கேட்டோம். ஆனால் விசாரணை கமிஷன் அமைத்தால் தான் நாங்கள் இணைவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தி.மு.க. எதிரி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் துரோகி என்று கூறிய இரண்டு துரோகிகளுமான டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இன்று நண்பர்களாகி விட்டனர். ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை. அ.தி.மு.க.வை ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனால் கைப்பற்ற முடியாது. அ.தி.மு.க. தொண்டர்கள் இருக்கும் வரை யாரும் கைப்பற்ற முடியாது.
அ.தி.மு.க. 1½ கோடி தொண்டர்களின் சொத்து என்று நீதிமன்றம் கூறி விட்டது. அதில் இருந்து ஒரு செங்கலை கூட பிடுங்க முடியாது. அ.தி.மு.க.வின் கோவிலான தலைமைக்கழகத்துக்குள் புகுந்து ஆவணங்களை திருடியவர்களை மக்கள் மன்னிப்பார்களா? நாம் நீதிமன்றம் சென்று அவற்றை திரும்ப பெற்றோம். அ.தி.மு.க. என்றால் நாம் தான்.
நமக்கு எதிரி தி.மு.க. தான். தமிழகத்தில் தி.மு.க.வை அழிக்க அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார். அதை கண் இமைபோல ஜெயலலிதா காத்தவர்.
அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் தமிழகத்தில் கள்ளச்சாராயம், போலி மது, கஞ்சா போன்ற பேதைப்பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. தி.மு.க. ஆட்சி என்றாலே மக்கள் அவதிப்படுகிறார்கள். இன்று கள்ளச்சாராயம் குடித்ததினால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே முதலமைச்சர் பதவி விலக வேண்டும். இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி விலக்க வேண்டும். இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் எண்ணுகிறார்கள்.
அ.தி.மு.க. கட்சி தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து 2026 சட்டமன்றத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினர்.
விழாவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெள்ளி வீரவாள், செங்கோல் பரிசாக வழங்கப்பட்டன.

