பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் கடந்த 43 ஆண்டுகளாக தொடரும் துயரம் நடப்பாண்டிலும் 44-ஆவது ஆண்டாக தொடருவது தான் வருத்தம் அளிக்கிறது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 1980-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இன்று வரை 44 ஆண்டுகளாகவே வட மாவட்டங்கள் கடைசி இடங்களைத் தான் பிடித்து வருகின்றன.
இம்மாதத் தொடக்கத்தில் முடிவுகள் வெளியிடப்பட்ட 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வட மாவட்டங்கள் தான் கடைசி இடத்தை பிடித்திருந்தன. இப்போது வெளியிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளிலும் அதே நிலை தான் தொடர்கிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடைசி 10 இடங்களை பிடித்துள்ள இராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், நீலகிரி, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள ஏழு மாவட்டங்கள் வட மாவட்டங்கள் ஆகும்.
கடைசி 11 முதல் 15 வரையிலான இடங்களைப் பிடித்த கள்ளக்குறிச்சி, தருமபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தேனியைத் தவிர மீதமுள்ள 4 மாவட்டங்களும் வட மாவட்டங்கள் ஆகும். கல்வியில் வட தமிழகம் பின்தங்கியிருக்கிறது என்பதற்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கடைசி 15 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வட மாவட்டங்கள் என்பதை விட வேறு சான்று தேவையில்லை.
வட மாவட்டங்கள் தொடர்ந்து கடைசி இடத்தில் வருவது உள்ளங்கை நெல்லிக் கனியாக தெரியும் போது, அரசு அதில் தலையிட்டு அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்திருக்க வேண்டும். ஆனால், தேர்ச்சி விகிதம் குறைவதற்கான காரணங்களை பட்டியலிட்டு அரசுக்கு தந்தாலும் கூட, அதன் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு விருப்பமில்லை என்றால், யார் என்ன செய்ய முடியும்?
தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவை வட மாவட்டங்களில் எவ்வளவு உள்ளன? தென்மாவட்டங்களில் எவ்வளவு உள்ளன? வட மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் தொடக்கப் பள்ளிகளிலும், நடுநிலைப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வகுப்புக்கும் எவ்வளவு ஆசிரியர்கள் உள்ளனர்?
வட மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு ஆசிரியர்கள் உள்ளனர்? வடக்கு மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் ஆசிரியர்கள்: மாணவர்கள் விகிதம் எவ்வளவு? வடக்கு மாவட்டங்களில் உள்ள ஓராசிரியர் பள்ளிகள் எவ்வளவு? பிற மாவட்டங்களில் உள்ள ஓராசிரியர்கள் பள்ளிகள் எவ்வளவு? என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இந்த சிக்கலில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளை அறிக்கையில் தெரியவரும் குறைகள் அனைத்தையும் காலவரையறை நிர்ணயித்து சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்; செய்வார்கள் என்று நம்புகிறேன்.

