முதலமைச்சாரக சித்தராமையா பதவி ஏற்கும் விழா பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நடக்கிறது. இந்த விழாவில் அகில இந்திய அளவில் முக்கியமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், 6 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். பெங்களூருவுக்கு வருகை தரும் இந்த தலைவர்களுக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
பெங்களூரு விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கர்நாடக மின் ஆளுமைத் துறை செயலாளர் பொன்ராஜ் ஐ.ஏ.எஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஓசூர் எம்.எல்.ஏ பிரகாஷ், பர்கூர் எம்.எல்.ஏ மதியழகன், கர்நாடக திமுக அமைப்பாளர் ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
விழா நடைபெறும் கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த ஸ்டேடியமே போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்டேடியத்தின் உள்ளே வெடிகுண்டு பிரிவு போலீசார் அங்குலம், அங்குலாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு தனித்தனியாக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தலைமை செயலாளர் வந்திதா சர்மா கவனித்து வருகிறார்.
இந்த பதவி ஏற்பு விழா ஒரு மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா நடைபெறும் ஸ்டேடியத்திற்குள் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள், தீ பற்றும் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், கூர்மையான ஒளியை ஏற்படுத்தும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

