மீனவர் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் சாகர் பரிக்ரமா எனும் மீனவர்களை சந்திக்கும் பயணத்தை தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் மத்திய அமைச்சர்கள் தொடங்கினர்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாகர் பரிக்ரமா எனும் கடலோரப் பயணத்தின் எட்டாவது கட்டத்தினை மத்திய அமைச்சர்கள் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று தொடங்கினர். இந்தப் பயணம் மீனவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட பயணமாகும்.
இந்த எட்டாவது கட்ட கடலோரப் பயணத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மூன்று நாட்கள் மீனவ மக்களை சந்திக்கின்றனர். இந்நிகழ்ச்சிகளின் தொடக்கமாக தேங்காப்பட்டனம் மீன்பிடித் துறைமுகத்தில் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் மீனவச் சங்கங்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றனர்.
கடல்சார் அவசர மருத்துவ ஊர்தி (மரைன் ஆம்புலன்ஸ்), ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை மீட்கும் வசதி, மீனவர்களுக்கான காப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், மீன்பிடிப்புக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர்களிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் ரூபாலா, ’’மீனவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேங்காப்பட்டனம் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே நேரடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் சாகர் பரிக்ரமா பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2019-இல் தேர்தல் பிரச்சாரத்தின் போது மங்களூரில் பிரதமர் பேசிய போது, மீனவர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படும் எனக் கூறினார். அதன்படி இரண்டாவது முறையாக பிஜேபி ஆட்சி அமைந்ததும், இந்த அமைச்சகம் அமைக்கப்பட்டது.
கடந்த 9 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சுதந்திர தின விழாவில் பங்கேற்க, முதல் முறையாக நாடு முழுவதிலுமிருந்து 60 மீனவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
நாட்டின் வளர்ச்சிக்கு மீன்வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி 8 சதவீதம் பங்களிப்பு அளிக்கிறது. கடல்சார் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் நாம் 4-இடத்தில் உள்ளோம் என்றும் மீனவர் நலனுக்காக தமிழகத்திற்கு மட்டும் 1800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காசிமேடு உள்ளிட்ட பல்வேறு மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்படும் என்றும் மீனவர்களுக்கான உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் எல். முருகன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தூத்தூர், வள்ளவளை, குளச்சல், முட்டம் ஆகிய மீனவக் கிராமங்களில் மீனவர்களுடன் மத்திய அமைச்சர்கள் கலந்துரையாடினர். இப்பகுதி மீனவர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர்களிடம் முன்வைத்தனர்.