நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அன்புச்சகோதரி ஜன்னத் அவர்களை கடந்த 24 ஆம் நாள் இரவுநேரப் பணியின்போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பை கழற்ற வேண்டுமென கூறி பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
நாகை மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அல்லது உத்தரபிரதேசத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டை ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா? என்று சந்தேகப்படும் அளவுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகளின் மதவெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மதவெறியர்களின் மனிதவெறுப்புச் செயல்களை தடுத்து நிறுத்தாமல், அதற்கு துணைபோகும் திமுக அரசின் ஆர்எஸ்எஸ் ஆதரவுப்போக்கு வன்மையான கண்டத்திற்குரியது.
உணவு, உடை, வழிபாடு உள்ளிட்டவை அடிப்படை தனிமனித உரிமையாகும். அதில் தலையிடுவதென்வது அருவறுக்கத்தக்க மனித வெறுப்பின் உச்சமாகும். வட இந்தியாவிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மட்டுமே நிகழ்ந்த அத்தகைய மதவெறுப்பு கொடுஞ்செயல்கள் தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருப்பது வெட்கக்கேடானது.
ஆகவே, அடிப்படை மனித உரிமைக்கு எதிராக மதவெறியுடன் இழிசெயலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராமிற்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

