30 வருடங்களுக்கு முன்பு ஆஷஸில் தனது முதல் பந்தை வீசுகிறார் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன். ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்ற ஆட்டத்தில் மைக் கேட்டிங் ஸ்டிரைக்கில் இருக்க, ஓவர் த விக்கெட்டிலிருந்து வார்ன் பந்தைச் சுழற்றிவிட்டார். பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்று பிட்ச் ஆனது. பிட்ச் ஆன பந்து கடுமையாகத் திரும்பி, கேட்டிங்கினுடைய பேட்டின் வெளிப்பக்க விளிம்பைக்கூட தொடாமல் ஆஃப் ஸ்டம்பைத் தகர்த்தது. ஆஷஸிலும், கிரிக்கெட்டிலும் புதிய அத்தியாயம் பிறந்தது.

அன்றைய தினமும், வார்ன் வீசிய அந்தப் பந்தும் வரலாற்றில் பொறிக்கப்பட்டது. வார்னின் இந்த மாயாஜாலப் பந்துக்கு இன்று 30 வயது ஆகிறது.

இந்தப் பந்து கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே, கிரிக்கின்ஃபோவில் கூறியதாவது:
இந்தப் பந்தை நான் பிற்பாடுதான் பார்த்தேன். அந்தச் சமயத்தில் நான் எங்கேயோ விளையாடியிருக்கக்கூடும் என நினைக்கிறேன், சரியாக நினைவில்லை. இங்கிலாந்தில் அப்போதுதான் அவர் முதல்முறையாக விளையாடுகிறார். இங்கிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய பேட்டரான மைக் கேட்டிங்குக்குப் பந்துவீசுகிறார் வார்ன்.
பந்து லெக் ஸ்டம்ப் வெளியே பிட்ச் ஆகி, அப்படியே ஆஃப் ஸ்டம்ப் பக்கம் திரும்பி, ஸ்டம்பைத் தகர்ப்பதெல்லாம், லெக் ஸ்பின்னருக்கான மிகச் சரியான பந்து. எந்தவொரு சுழற்பந்துவீச்சாளராக இருந்தாலும், அது மிகச் சரியான பந்து.
இது, அந்த ஓர் ஆட்டத்தில் மட்டும் தாக்கத்தை உண்டாக்கவில்லை. அன்றிலிருந்து வார்னை எதிர்கொள்ளும்போதெல்லாம் இங்கிலாந்து பேட்டர்கள் மனதிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியது என்றார்.
எந்தவொரு அம்சம் இந்தப் பந்தை இத்தகைய சிறப்புடையதாக மாற்றியது என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், “இது அவருடைய முதல் ஆஷஸ் பந்து. ஓர் இங்கிலாந்து வீரருக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் வீசும் பந்து. ஆஷஸ் என்பதால் இது உண்மையிலேயே சிறப்பான பந்து. மிக நீண்ட தூரத்துக்குப் பந்தைச் சுழற்றிவிட்டார் வார்ன்” என்றார்.

லெக் ஸ்பின்னின் எழுச்சியில் இந்தப் பந்தினுடைய தாக்கம் எந்தளவுக்கு முக்கியமானது?
வார்ன், முத்தையா முரளிதரன் உள்ளிட்டோருடன் நிறைய முறை பேசியிருக்கிறேன். முஷ்டாக் அஹமதுவிடமும் உரையாடல்கள் நடந்துள்ளன. நான் விளையாட வருவதற்கு முன்பே இந்தியாவின் பொற்காலத்திலிருந்தே இந்தியாவில் சுழற்பந்துவீச்சு மீது ஒரு பார்வை இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளில் சுழற்பந்துவீச்சு ஆதிக்கம் இந்தளவுக்கு இருந்ததா என எனக்குத் தெரியவில்லை. ஷேன் வார்ன்தான் இதை அங்கு கொண்டு வந்தார். இதில் வார்னுக்குப் பெரும் பங்கு உண்டு. சக லெக் ஸ்பின்னராக எனக்கும் அது படிப்பினைதான். வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் வார்ன் பந்துவீசுவதைப் பார்ப்பேன் என்றார்.
இதுதவிர வார்னின் மற்றொரு சிறப்பான தருணம் அல்லது பந்து ஏதேனும் இன்றும் நினைவில் நிற்கிறதா? என்கிற கேள்விக்கு கும்ப்ளே அளித்த பதில்:
நிச்சயமாக நிறைய மறக்க முடியாத பந்துகள் உள்ளன. நிறைய பேட்டர்களை ஏமாறச் செய்து 700-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். பேட்டர்களின் கால்களைச் சுற்றியே எப்படி பந்துவீசுகிறார் என்பதுதான் வார்னிடம் உள்ள சிறப்பான அம்சம். இது மாதிரியான பந்துகளை அடிக்கடிப் பார்த்ததாக நினைவில்லை. என்னைப் பொறுத்தவரை இதுதான் வார்னின் உண்மையான பிம்பம்” என்றார் கும்ப்ளே.

