கடந்த வருடம் எங்கள் ஊரில் #பன்னம்பாறை (தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள ஊர்) 70 வயதான கம்பு ஊன்றி நடக்கும் பெரியவர் ஒருவருக்கு அரசு வழங்கும் #OAP (Old Age Pension) முதியோர் உதவித்தொகை மாதம் ₹1000 கிடைக்க முயற்சி எடுத்தேன்.
இ-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பித்தது, கிராம நிர்வாக அலுவலரை நேரடியாக விண்ணப்பதாரரின் வீட்டிற்கு அழைத்து அவருடைய சிறிய ஓட்டு வீடை காட்டி நிலவரத்தை சொன்னது, சமூக பாதுகாப்பு திட்ட இளநிலை உதவியாளர், தாசில்தார் உள்ளிட்டோரை நேரடியாக சந்தித்து பேசி பல்வேறு முயற்சிகள் எடுத்தேன்.
ஆனால் இறுதியாக அவருக்கு மகன் இருக்கிறான் என்பதால் அந்தப் பணம் கிடைக்காமல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அவருடைய மகன் திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார். ஒரு சிறிய வேலையில் பணிபுரியும் அவர், அவருடைய குடும்பத்தை மட்டுமே கவனிக்கும் திறனில் உள்ளார், தந்தைக்கு சிறிய அளவில் உதவி செய்கிறார். அதனால் இந்த OAP-க்கு இவர் தகுதி வாய்ந்தவர் என்று எடுத்துச் சொல்லியும் கிடைக்கவில்லை.
ரேஷன் கார்டில் மகனுடைய பெயர் உள்ளது. அதை நீக்கிவிட்டு வாருங்கள் பார்ப்போம் என்று சொல்லி நிராகரித்து விட்டார்கள்.
இது போன்ற விளிம்பு நிலை மக்கள் பலர், முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் இன்று திராவிட முன்னேற்றக் கழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறது!! கூடவே பெட்ரூம் வீடு, ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ் என ஒரு நல்ல வாழ்க்கை வாழ்பவர்களும் சேர்ந்தே இந்தத் திட்டத்தில் பயன் பெறுகிறார்கள்!!
பெரும் கடனில் இருக்கும் நம் தமிழ்நாடு அரசு, தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டோம் என்று மிகவும் சிரமப்பட்டு இன்று இந்த திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.
இப்படியே அனைவருக்கும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்காமல்,
வரும் காலங்களில் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக மேலே வந்தவர்களை இந்த திட்டத்தில் இருந்து நீக்கம் செய்வது, தகுதியானவர்களை சேர்ப்பது என்று தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு மாதம் தோறும் தவறாமல் ₹1000 ரூபாய் சென்று சேர வேண்டும் என்பதே நமது விருப்பம்.
–ஆ.கோமதிநாயகம் விசு
#kalaignarmagalirurimaithittam | #கலைஞர்உரிமைத்தொகை1000 | #TNEmpowersWomen