‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பேசிய திருவள்ளுவரை பிராண்டிக் கொண்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி இப்போது வள்ளலார் மீதும் கல்லெறியத் துவங்கியிருக்கிறார். வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200 ஆவது ஆண்டு விழாவில் இவர் பேசியது உளறலின் உச்சம்.
வெறித்தனத்தின் வெளிப்பாடு
‘மருட்சாதி சமயங்கள், மதங்கள், ஆச்சிரம வழக்க மெல்லாம் குழிவெட்டி, மண்மூடி போட்டு தூர்க்க வேண்டும்’ என்றும், ‘நால்வர்ணம், ஆசிரமம், ஆசாரம் முதலா நவின்ற கலை சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே’ என்றும் பாடிய வள்ளலாரை தன்னு டைய சிறுபிள்ளை விளையாட்டிற்கு ஜோடி சேர்க்க முயன்றிருக்கிறார் ரவி. சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று இவர் பேசியிருப்பது அறியாமை மட்டுமல்ல. அனைத்து நன்னெறிகளையும் சனாதனத்துக்குள் போட்டு மூடிவிடத் துடிக்கும் வெறித்தனத்தின் வெளிப்பாடும் ஆகும். ஆளுநர் ரவி நாளொன்றுக்கு நான்கு முறை சனாதனம் என்று உருட்டிக் கொண்டிருக்கிறார். இவர் கூறும் சனாதனம் என்பதன் பொருள், என்ன என்று கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒருவர் வழக்காடு மன்றம் சென்றிருக்கிறார். நீதிமன்றமும் இவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறது.
சங்கராச்சாரியாரின் ஒப்புதல் வாக்குமூலம்
சனாதனம் என்றால் ஆதி அந்தம் இல்லாதது, அநாதியானது, அதற்கு கால எல்லை தீர்மானிக்க முடியாது என்கின்றனர். ஆனால் இவர், 10 ஆயிரம் ஆண்டுகால வரலாறு உடையது சனாதனம் என்கிறார். ஆதியும் அந்தமும் இல்லாதது என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக் கொண்டால், சனாதனத்தின் வயது 10 ஆயிரம் என்று இவர் எப்படி கண்டுபிடித்தார். எல்லா மதங்களுமே குறிப்பிட்ட காலப் பின்னணியில் உருவானவைதான். தனித்தனியாக இருந்த பல்வேறு வழிபாட்டு முறைகளை உள்ளடக்கியே இந்து மதம் என்று வரையறுக்கப்பட்டது. இதற்கு இந்து மதம் என்று பெயர் வைத்தது வெள்ளைக்காரன் தான். அதனால் பிழைத்தோம் என்று காஞ்சி சங்கராச் சாரியாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். வேதக்கல்வி என்பது பிராமண ஆண்களுக்கே உரியது. புத்தர், குருநானக், கபீர், ரவிதாஸ், நாராயண குரு, வள்ளலார், வைகுண்டசாமி போன்றவர்களுக்கு வேதக் கல்வி பெறும் வாய்ப்பு கிடையாது. இவர்களது குரு மரபை சனாதனம் ஒரு போதும் ஏற்காது என்கிறார் பேராசிரியர் நா.முத்துமோகன். வைதீகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டவரான ராமலிங்க வள்ளலார் சனாதனத்திற்கு எதிராகவே தன்னுடைய சமரச சுத்த சன்மார்க்க நெறியை முன் வைத்தார். இன்னும் சொல்லப்போனால், சனாதனம் முன்வைத்த அத்தனைக்கும் எதிராகப் பாடியவர் மட்டுமல்ல, இயங்கியவர் வள்ளலார்.
காந்தியையும் விட்டு வைக்கவில்லை
வடலூர் விழாவில் பேசிய ஆளுநர் மகாத்மா காந்தியையும் விட்டு வைக்கவில்லை. காந்தி தன்னை ஒரு சனாதன இந்து என்றுதான் சொல்லிக் கொண்டார் என்கிறார். காந்தியடிகள் இவ்வாறு கூறியது உண்மைதான். ஆனால் அவரை சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக் கோட்சே, சனாதன தர்மத்தை பாதுகாப்பதற்காகவே காந்தியைக் கொன்றேன். கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்ற பகவத் கீதைதான் எனக்கு வழிகாட்டியது என்று கூறியுள்ளான். ரவி முன்வைத்தது காந்தியடிகளின் சனாதனம் அல்ல; கோட்சேயின் சனாதனம். காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ‘சனாதன தர்மத்தை ஊதி ஊதி எல்லோரிடமும் பரவச் செய்யலாம் என்பது என்னுடைய பேராசை. சனாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ண தர்மம் இருப்பதால்தான், இன்று வரை நிலைத்திருக்கிறது. வர்ணதர்மம்தான் நமக்கு மட்டும் பிரத் யேகமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார். சங்கராச்சாரியார் கம்பி கட்டும் வர்ண தர்மம் என்பது பிறப்பினால் ஒருவருடைய தகுதி, தொழில் அறிவு தீர்மானிக்கப்படும் என்பதுதான். தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் போன்ற கொடுமை கள் இதன் பெயரால்தான் இன்றுவரை அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. பகவத் கீதையில்கூட நான்கு வர்ணங்களையும் நான்தான் படைத்தேன். ஆனால், நான் நினைத்தால்கூட இதை மாற்ற முடியாது என்று பகவான் கிருஷ்ணன் சொல்வதாக எழுதி வைத்திருக்கிறார்கள்.
வருணாசிரம மயக்கத்தை தெளிவித்த வள்ளலார்
சங்கராச்சாரியார் விழாவுக்கு போய் ஆளுநர் சனாதனத்தின் பெருமையைப் பேசி புல்லரித்து புல்வெளியில் கிடந்து புரண்டால் யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஆனால் சனாதன எதிர்ப்பில் கனன்று கனிந்த வள்ளலாரின் கருத்தியல் மீது வாய் வைப்பதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை. வள்ளலாருடைய சிந்தனைகளை எல்லாம் கரைத்துக் குடித்து விட்டவர் போல, வாந்தி எடுத்திருக்கிறார் ஆளுநர் ரவி. ‘சாதி சமயங்களிலே வீதி பலவகுத்த சாத்திரக் குப்பைகளெல்லாம் பாத்திரம் அன்று’ என்றவர் வள்ளலார். ஆனால் அந்த மக்காத குப்பையை தூக்கிக் கொண்டு வந்து, ஆலவட்டம் சுற்றுகிறார் ஆளுநர். ‘சாதியும், மதமும், சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி’ என்று கடவுளைக் கூட சாதி, சமயம் பொய்யென தமக்கு உணர்த்தியதாகப் பாடுகிறார். ‘மதித்த சமய மத வழக்கமெல்லாம் மாய்ந்தது, வருணாசிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது’ என்று ஆளுநர் தூக்கிச் சுமக்கும் வர்ணாசிரமத்தையே தூக்கிப் போட்டு மிதித்திருக்கிறார் வள்ளலார். பிறப்பினால் பேதம் பிரிக்கும் பிறழ்நெறிக்கு மாறாக, ‘எத்துணையும் பேதம் உறாது; எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி, உள்ளே ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார்’ என்கிறார் வள்ளலார். தோழர் சு.வெங்கடேசன் கூறியது போல, மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்ற வள்ளலாரின் மீதே, சனாதனம் எனும் பேயை ஏவி விடுகிறார் ஆளுநர் ரவி.
சனாதனக் குப்பைக்குள் தள்ளும் முயற்சி
‘சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்; சாத்திரக் குப்பையும் தணந்தேன்’ என்ற வள்ளலாரை, ‘சாதியிலே, மதங்களிலே, சமயநெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானித்து அலைகின்றீர் உலகீர், அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகல்லவே’ என்று பாடியவரை சனாதனம் எனும் குப்பைக் கிடங்குக்குள் தள்ள முயல்வது ஆளுநருக்கு அழகல்லவே. கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்; மனைவி இறந்தால் கணவன் மறு மணம் செய்ய வேண்டாம்; கருமாதி, திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டாம்; உருவ வழிபாடு கூடாது; வேத ஆகம இதிகாச புராணச் சாத்திரங்களும் முடிவான உண்மையை தெரிவிக்காது என்பதெல்லாம் வள்ளலாரின் வாக்கு. அண்மையில், நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை புறக்கணித்து விட்டு, மடாதிபதிகளை அழைத்து கும்மியடித்து குதியாட்டம் போட்டார்கள். ஆனால், வள்ளலார் மடங்களை உருவாக்கியவர் அல்ல. மாறாக, சர்வசமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று தன்னுடைய நெறிக்கு பெயரிட்டவர். வடலூரில் அவர் அமைத்த வழிபாட்டுத் தலத்தை சத்திய ஞானசபை என்றே அழைத்தார். அன்னதான கூடத்திற்கு ‘சத்திய தர்மசாலை’ என்று பெயரிட்டார். ஆனால் உயர்சாதியினர் என்று கூறப்படுபவர்கள் சாப்பிடுவதை பார்த்தால்கூட பாவம் என்று சொல்லும் கூட்டத்தைச் சேர்ந்த ரவி, வள்ளலாரை வம்புக்கு இழுக்கக்கூடாது.
பிறப்பிலே கற்பித்த பேதமே காரணம்
சமரச சுத்த சன்மார்க்கம் பேசியவர் மண்ணில் நின்று கொண்டு தன்னுடைய வெறுப்பு அரசியலை விதைத்து இருக்கிறார் ஆளுநர். கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்கள் மீது வெறுப்பைக் கக்கியிருக்கிறார். ‘இந்தியாவில் பல வழிபாட்டு முறைகள் இருந்தாலும், ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதில்லை. புதிதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் மேம்பட்ட மதம் என்று சொன்ன போதுதான், முதன்முதலாக இங்கே பிரச்சனை வந்தது. கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் மொழி மாற்றம் செய்யும் போது, நூல்களிலிருந்த இறைக் கருத்துகளை வெளியில் எடுத்துவிட்டனர்’ என்று கூறியிருக்கிறார். ‘பிற்சமயத்தார் பெயரும் அவர் பெயர் கண்டார்’ என்றும், எம்மத நிலையும் நின்அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன், எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன், அல்லால் தனித்துவேறு எண்ணியது உண்டோ?’ என்று சமய நல்லிணக்கம் பேசியவர் வள்ளல் பெருமான். கிறிஸ்துவமும், இஸ்லாமியமும் வருவதற்கு முன்னால் சைவத்திற்கும் வைணவத்திற்கும் நடந்த மோதல்கள் கொஞ்ச நஞ்சமா? வைண வத்துக்குள்ளேயே வடகலை, தென்கலை என்று மோதல் நடப்பதற்கு பிற மதங்களா காரணம்? சிறு தெய்வங்கள் என்று இழிவு செய்யப்படும் குல தெய்வங்களுக்கு பெருந்தெய்வக் கோவில்களில் இடம் உண்டா? ஆடு, கோழி பலியிடும் வழக்கம் எல்லோரிடமும் ஒரே மாதிரி இருந்ததா? பிறப்பிலேயே பேதம் கற்பித்து விட்டு, இதற்கெல்லாம் காரணம் பிற மதத்தவர்தான் என்று பேசலாமா? ஒருமைப்பாட்டை பேசிய வள்ளலார் பெயரால் வெறுப்பை வீசலாமா?
ஆங்கிலேயருக்கு உதவியவர்கள் உங்கள் குலகுருக்களே!
ஆளுநர் ரவிக்கு அன்றாடம் எரிச்சல் ஏற்படுத்தும் இன்னொரு பெயர் காரல் மார்க்ஸ். வடலூரில் நின்று கொண்டு, மாமேதை மார்க்சுக்கும் மாசு கற்பிக்க முயன்றிருக்கிறார். ‘காரல் மார்க்ஸ் என்று இன்னோர் அறிஞர் இருக்கிறார். அவரும் ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்வதற்காக பல கட்டுரைகள் எழுதினார். 1852 இல் சில கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் பிரிட்டிஷாருக்கு சொல்லும் ஆலோசனை என்ன வென்றால், சமூக கட்டமைப்பு என்று ஒன்று இருக்கக் கூடாது. இந்தியர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை. காரல் மார்க்ஸ் போன்றவர்கள் நம்மைப் பற்றி மோசமாக பேசிக் கொண்டிருந்த போதுதான், வள்ளல் பெருமான் என்ற ஞான சூரியன் தோன்றினார்’ என்று அங்கே சுற்றி, இங்கே சுற்றி கடைசியில் மார்க்சுக்கு எதிராக வள்ளலாரை நிறுத்திவிட்டதாக மகிழ்ந்து, நாக்பூரில் பெற்ற பயிற்சி நல்லவிதமாய் முடிந்தது என மங்கலம் பாடிவிட்டு புறப்பட்டிருக்கிறார் ஆர்எஸ்எஸ் ரவி. அருட்பிரகாச வள்ளலாரையும் மாமேதை மார்க்சையும் புரிந்து கொள்ள சனாதன மூளை போதாது. ஆளுநர் என்ற நிர்ப்பந்த நியமனப் பதவியால் மேடை கிடைக்கிறது என்பதற்காக வாயில் வந்ததை யெல்லாம் உளறிவிட்டு தனக்குத்தானே கைதட்டிக் கொள்ளக் கூடாது. ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்வதற்காக இந்தியாவில் அநேக காரியங்களைச் செய்தவர்கள் ரவியின் குலகுருக்கள்தான். இங்கிலாந்து உட்பட அன்றைய காலனியாதிக்க நாடுகளின் சுரண்டலுக்கு எதிராக சிம்ம கர்ஜனை புரிந்ததால், சொந்த மண் உட்பட எந்த மண்ணிலும் வாழ முடியாமல் விரட்டப் பட்டுக் கொண்டே இருந்தவர் மாமேதை மார்க்ஸ். அவர் எப்போது ஆங்கிலேயர்களுக்கு ஆலோசனை வழங்கினார்?. அவர் பெயர் ஒன்றும் சாவர்க்கர் அல்லவே.
கட்டமைப்பு தகர்ப்பு- ரவியின் கயிறு திரிப்பு
இவரைப் போன்றவர்களை மனதில் வைத்துத் தான் வள்ளலார் அன்றே, ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்’ என்று பாடியிருக்கிறார். வள்ளலார் ஒரு சிறந்த பொதுவுடமைவாதி. அவர் காட்டிய வழியை பலர் திருத்திக் கூறுவதை நாம் அனுமதியோம் என்று அன்றே முழங்கியுள்ளார் தோழர் ஜீவா. இந்தியாவின் சமூக அமைப்பு என்பது வணிக வர்க்கம், கீழ்நிலை வர்க்கங்கள், தீண்டத்தகாதவர்கள் என பிளவுபட்டு இருப்பதாக மார்க்ஸ் எழுதினார். இந்த சமூக கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என்பதே மார்க்சின் கருத்து. ஆனால் சமூக கட்ட மைப்பு என்று ஒன்றே இருக்கக் கூடாது என்று மார்க்ஸ் சொல்லியிருப்பதாக ஆளுநர் ரவி கயிறு திரிக்கிறார். சனாதனத்தின் பெயரால் அழுகிக் கிடந்த சமூக அமைப்பை மார்க்ஸ் சரியாக உணர்ந்திருக்கி றார். சாதி அடிப்படையிலான உழைப்புப் பிரிவினை இருப்பதையும், இந்தியக் கிராமங்கள் சாதிய மேலாண்மையின் இருப்பிடங்களாக இருப்பதையும் அங்கிருந்தே மார்க்ஸ் உணர்ந்திருக்கிறார். ஆங்கிலேயர்களுக்கு மார்க்ஸ் ஆலோசனை சொன்னார் என்று கூறும் அரைவேக்காட்டு அறி வாளிக்கு மார்க்ஸ் இவ்வாறு கூறியுள்ளது தெரி யுமா? ‘பிரிட்டிஷாரால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் துன்ப, துயரம் அது முன்பு அனுபவித்த வேதனையின் சாராம்சத்திலிருந்து மாறுபட்டதாகவும், அதைவிட பன்மடங்கு புதியதாகவும் இருக்கிறது, என்று கூறிய மார்க்ஸ், ‘பிரிட்டிஷாரின் அடக்குமுறையின் காரணமாக இந்திய மக்கள் ஒற்றுமையுடன் போராட, ஒரு பாதையையும் பிரிட்டிஷார் ஏற்படுத்திவிட்டார்கள்’ என்று அந்நிய சுரண்டலுக்கு எதிராக உருவான ஒற்று மைப் பாதையை வரவேற்றிருக்கிறார். ‘தீர்க்க முடியாத முரண்பாடுகள், இனங்கள், பழங்குடி மக்கள், சாதி-சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பூகோள ஒற்றுமையைத்தான் இந்தியா என்கிறோம்’ என்றெல்லாம் எழுதியுள்ளார் மார்க்ஸ்.
மார்க்சின் குரலிலேயே அன்றி மனுவின் குரலில் அல்ல
‘ஒத்து உரிமை யுடையவராய் உவக்கின்றார்’ என்றும், ‘உயிர் எலாம் பொதுவில் உளம்பட நோக்குக’ என்றும், ‘ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்த வேண்டும்’ என்றும், ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ என்றும் வள்ளலார் பேசியுள்ளது மார்க்சின் குரலிலேயே அன்றி, மனுவின் குரலில் அல்ல. இந்தியாவின் உழைக்கும் மக்களுக்கு போர்க் கருவிகள் செய்து கொடுத்தவர் மார்க்ஸ். விடுதலைப் போராட்டத்தை வாழ்த்தி வரவேற்றவர். சனாதனம் என்ற கிணற்றுக்குள் கிடந்து கத்துகிற வறட்சித் தவளை க்கு மார்க்ஸ் என்கிற பெயரை உச்சரிக்கும் தகுதிகூட இல்லை. மார்க்ஸ், வள்ளலார் ஆகிய இருவரும் பசியில்லாத உலகை படைக்க சிந்தித்தவர்கள். அன்ன சாலை அமைப்பது வள்ளலார் வழி.சோசலிசம் சமைப் பது மார்க்சின் மார்க்கம். இருவருமே மானுட நேயர்கள். ரவி வகையறா பசி தத்துவத்தின் பங்காளிகள். கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்றார் வள்ளலார். ஆளுநரோ, அவர் பெயரால் ஒரு கலப்படக் கடையை ஆரம்பித்து கள்ள வணிகம் செய்ய முயல்கிறார். அன்பெனும் பிடியில் வள்ளலார் அகப்படுவாரே அன்றி, சனாதனப் பெருச்சாளிகளின் பசிக்கு அவர் ஒருபோதும் விருந்தாக மாட்டார்.