ஐபிஎல் 2023 போட்டியில் மும்பை, பெங்களூர் உள்பட 5 அணிகள் தலா 10 புள்ளிகளுடன் பிளேஆஃப் போட்டியில் உள்ளன. புள்ளிகள் பட்டியலில் ஏற்பட்டுள்ள இந்த நெரிசலில் இருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயத்துடன் தான் மும்பையும் பெங்களூரும் இந்த ஆட்டத்தில் களமிறங்கின.
மும்பையின் வான்கடேவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். காயம் காரணமாக ஆர்ச்சர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலக, அவருக்குப் பதிலாக கிறிஸ் ஜோர்டான் மும்பை அணியில் இணைந்தார். அதேபோல, கரண் சர்மாவுக்குப் பதிலாக வைஷாக் பெங்களூர் அணிக்குத் திரும்பினார்.
பெஹ்ரன்டார்ஃப் அட்டகாசமாக முதல் ஓவரை வீசினார். நான்காவது பந்திலேயே டு ப்ளஸியின் கேட்ச்சைத் தவறவிட்டார் வதேரா. அதற்கான பலனை மும்பை அணி அனுபவித்தது. எனினும் அதே ஓவரில் ஒரு ரன்னில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கோலி.
சாவ்லா வீசிய 2-வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை டு ப்ளஸி விளாசினார். அதற்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் 3-வது ஓவரில் ராவத்தை ஆட்டமிழக்கச் செய்தார் பெஹ்ரன்டார்ஃப்.
கிரீனின் 4-வது ஓவரில் டு ப்ளஸி 2 பவுண்டரிகளை அடிக்க, பவர்பிளேயில் 56 ரன்களை எட்டியது பெங்களூர். பவர்பிளே முடிந்தாலும் அடுத்தடுத்த ஓவர்களிலும் மேக்ஸ்வெல் – டு பிளஸி இணையின் அதிரடி தொடர்ந்தது. ஜோர்டான் வீசிய 7-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை அடித்தார் மேக்ஸ்வெல். 25 பந்துகளில் மேக்ஸ்வெல் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.
10 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 104 ரன்கள் எடுத்தது. டு ப்ளஸி 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். 62 பந்துகளில் 120 ரன்களைக் குவித்து மும்பை பந்துவீச்சைப் பந்தாடியது இந்தக் கூட்டணி. ஐபிஎல் 2023 போட்டியில் இருவரும் நான்கு முறை 100+ ரன்கள் கூட்டணி அமைத்துள்ளார்கள்.
33 பந்துகளில் 68 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, கார்த்திகேயா வீசிய 14-வது ஓவரில் 1 ரன்னுடன் விக்கெட்டைப் பறிகொடுத்தார் லோம்ரோர். மற்றொரு பக்கம் நிலைத்து ஆடிய டு ப்ளஸி 65 ரன்களில் கிரீன் ஓவரில் ஆட்டமிழந்தார்.
நீண்ட காலத்துக்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்குத் திரும்பிய கேதார் ஜாதவ் பவுண்டரியுடன் தனது இன்னிங்ஸை தொடங்கினார். கார்த்திகேயா வீசிய 18-வது ஓவரில் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசிய தினேஷ் கார்த்திக் 30 ரன்களில் அவுட் ஆனார்.
19-வது ஓவரில் ஹஸரங்கா 2 பவுண்டரிகளை அடித்தார். பெங்களூர் 200 ரன்களை எட்டுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி ஓவரை அட்டகாசமாக வீசிய மத்வால் 6 ரன்களை மட்டுமே கொடுத்தார். இறுதியில் 199 ரன்களைக் குவித்தது பெங்களூர்.
சிராஜ் வீசிய முதல் ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் இஷான் கிஷன். கடந்த இரண்டு ஆட்டங்களிலும் டக் அவுட்டான ரோஹித் இந்த ஆட்டத்தில் தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்.
ஹேசில்வுட் வீசிய ஓவரில் இரண்டு பவுண்டரிகளையும், சிராஜ் வீசிய 3-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும் பறக்கவிட்டார் இஷான் கிஷன். 5-வது ஓவரில் இஷான் கிஷன், ரோஹித் சர்மாவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹஸரங்கா.
அதன் பின்னர் பெங்களூரின் சோதனைக்காலம் தொடங்கியது. சூர்யகுமார் யாதவ் – வதேரா இணை அமர்க்களமாக விளையாடியது. 10 ஓவர்கள் முடிவில் 99 ரன்களை எடுத்தது மும்பை.
ஹஸரங்கா வீசிய 11-வது ஓவரில் ஆளுக்கொரு சிக்ஸரை விளாசினர். அடுத்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். 10 ஓவர்களுக்குப் பிறகு பவுண்டரிகளும் சிக்ஸர்களும் தொடர்ந்து அடிக்கப்பட்டன. சூர்யகுமாரின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் பெங்களூர் பந்துவீச்சாளர்கள் திணறினர். 26 பந்துகளில் அரை சதம் எடுத்தார் சூர்யகுமார்.
11 -16 ஓவர்களில் எடுக்கப்பட்ட ரன்கள்
15, 10, 17, 13, 20, 19 (16-வது ஓவர்).
35 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் மறக்க முடியாத ஐபிஎல் ஆட்டத்தை வழங்கி 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ். டிம் டேவிட் டக் அவுட் ஆனாலும் மும்பை அணி, 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வதேரா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறியது மும்பை. மேலும் கடந்த 4 ஆட்டங்களில் 3 முறை 200+ ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

