எட்ஜ்பாஸ்டன் வரலாற்றைத் திருத்தி எழுதினார் கம்மின்ஸ். முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா ‘த்ரில்’ வெற்றியடைந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் எட்ஜ்பாஸ்டன் வரலாற்றை 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தி எழுதியிருக்கிறார்.
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற ஆஷஸ் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஜோ ரூட் களத்திலிருந்தபோதும் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 393 ரன்கள் எடுத்திருந்தபோது துணிச்சலாக முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். உஸ்மான் கவாஜாவின் சிறப்பான சதத்தால் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.
2005 ஆஷஸ் டெஸ்ட் தொடரின்போது எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 282 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டி விளையாடிய ஆஸ்திரேலியா 279 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் ஆட்டத்தில் 281 ரன்கள் வெற்றி இலக்கு என்பதால், ரசிகர்களால் மறக்க முடியாத அந்த டெஸ்ட் நினைவுக்கு வந்தது.
4-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. கவாஜா 34 ரன்களுடனும், போலண்ட் 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஐந்தாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமானது. உணவு இடைவேளையும் முன்கூட்டியே எடுக்கப்பட்டது. ஆட்டம் தொடங்கியவுடன் போலண்ட் விக்கெட்டை ராபின்சன் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை மொயீன் அலி கைப்பற்றினார்.
இதையடுத்து, கவாஜா அரை சதம் அடித்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த கேம்ரூன் க்ரீன் கூட்டணியை அமைத்தார். இந்த இணை 49 ரன்கள் சேர்த்திருந்தபோது ராபின்சன் பந்தில் 28 ரன்களுக்கு போல்டானார் க்ரீன். இவரைத் தொடர்ந்து 65 ரன்களில் விளையாடி வந்த கவாஜாவை போல்ட் செய்தார் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ்.
கவாஜா ஆட்டமிழந்தபோது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 79 ரன்களும், இங்கிலாந்து வெற்றிக்கு 3 விக்கெட்டுகளும் தேவை என்ற நிலை இருந்தது. அலெக்ஸ் கேரி அச்சுறுத்தலாகத் தெரிந்தார். இவர் 20 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோ ரூட் பந்தை விளாசப் பார்த்தார். ஆனால், பந்து நேராக ரூட் கைக்கே செல்ல, தவறான நேரத்தில் விக்கெட்டை இழந்தார்.
ஆட்டம் விறுவிறுப்பு இன்னும் அதிகரித்தது. இதுவரை நிதானம் காட்டி விளையாடி வந்த கம்மின்ஸ், வெற்றி இலக்கை நெருங்கச் செய்வதற்கானப் பொறுப்பை ஏற்றார். 51 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது ரூட் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்து மிரட்டினார். பிராட் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். கடினமான கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்குத் தேவையான ரன்கள் 30-க்குக் கீழ் குறைந்தது. பழைய பந்திலும், ஷார்ட் பந்திலுமே இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மிரட்டினார்கள். கம்மின்ஸ், லயான் இணை அங்கும் இங்குமாக ரன்களை எடுக்க, இடையில் பவுண்டரிகளும் அடித்தார்கள். புதிய பந்தை மாற்றிய பிறகு, ரசிகர்களின் ஆதரவையும் கோரினார் பிராட். ஆனால், முழு நீளப் பந்துகளை சிறப்பாகக் கணித்து விளையாடினார்கள். குறிப்பாக லாங் ஆன் திசையில் லயான் அடித்த பவுண்டரி அட்டகாசமானது. இதன்மூலம், வெற்றிக்குத் தேவையான இலக்கு 10-க்குக் கீழ் குறைந்தது.
இதையடுத்து, மீண்டும் ஷார்ட் பிட்ச் பந்துக்குத் திட்டத்தை மாற்றியது இங்கிலாந்து. முடிந்தளவுக்கு பந்தைத் தொடாதவாறு பார்த்துக்கொண்டு கவனமுடன் விளையாடினார்கள் கம்மின்ஸும், லயானும். வெற்றிக்குத் தேவையான ரன்கள் குறைய குறைய 3 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, ராபின்சனின் ஷார்ட் பிட்ச் பந்து வெளிப்பக்க விளிம்பில்பட்டு தேர்ட் மேன் திசைக்குச் சென்றது. ஃபீல்டர்கள் முயற்சித்தும் பந்து பவுண்டரியை அடைந்தது.
2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது. 18 வருடங்களுக்கு முன்பு எட்ஜ்பாஸ்டனில் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு 2 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. 18 வருடங்களுக்குப் பிறகு இதே எட்ஜ்பாஸ்டனில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா. இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் எட்ஜ்பாஸ்டன் வரலாற்றை 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தி எழுதியிருக்கிறார்.

