’’சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் இட ஒதுக்கீடு ஆகிய பிரச்னைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினை கோட்டையில் சந்தித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
இதுகுறித்து, பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 35 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது மருத்துவர் அய்யா அவர்களுடன் பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அவர்களும், அரசுத் தரப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், இராஜகண்ணப்பன் ஆகியோரும், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, முதலமைச்சரின் செயலாளர்கள் முருகானந்தம், சண்முகம் ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் விரிவாக விளக்கினார். ஆங்கிலேயர் ஆட்சியில் 6 முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய மருத்துவர் அய்யா அவர்கள், அதற்குப் பிறகு சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்; அந்த வாய்ப்பை பிகார், கர்நாடகம், ஒதிஷா, ஆந்திரம் போன்ற மாநிலங்களிடம் நாம் இழந்து விட்டோம் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதை சுட்டிக்காட்டிய மருத்துவர் அய்யா அவர்கள், அதற்காகவாவது தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரும் கடிதத்தையும் முதல்வரிடம் அவர் வழங்கினார். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 20 மாதங்கள் ஆகும் நிலையில், அதற்கான சட்ட முன்வரைவு இன்னும் நிறைவேற்றப்படாததையும் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு மருத்துவர் அய்யா அவர்கள் கொண்டு சென்றார். ஊமைசனங்களின் சமூக நிலை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மருத்துவர் அய்யா அவர்கள் முன்வைத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ஆகியவை குறித்த கருத்துகளை கூர்ந்து கவனித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவற்றை ஆய்வு செய்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.