மணற்கேணி ஆய்விதழ் சார்பில் வழங்கப்படும் ‘எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது-2023 ’ தமிழ்நாடு அரசு மின் நூலக உதவி இயக்குநர் முனைவர் செ.காமாட்சி -க்கு வழங்கப்படுகிறது.
இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பிறகு 1948ஆம் ஆண்டு பொது நூலக சட்டம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. அப்படியொரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று பாடுபட்டவர் பொதுநூலக இயக்கத்தின் தந்தை என்று சொல்லப்படுபவரும், தமிழ் நாட்டைச் சேர்ந்தவருமான சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன் என்னும் எஸ்.ஆர்.ரங்கநாதன் (1892-1972) ஆவார். நூலகம் பற்றி அவர் உருவாக்கிய ஐந்து அடிப்படை விதிகள் உலக அளவில் நூலக இயக்கத்தின் புனிதக் கட்டளைகளாகக் கருதப்படுகின்றன.
திரு எஸ்.ஆர்.ரங்கநாதனின் ஐந்து விதிகளைப் பின்பற்றுகிற நூலகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மணற்கேணி ஆய்விதழின் சார்பில் ‘ எஸ்.ஆர்.ரங்கநாதன் விருதை’ கடந்த சில ஆண்டுகளாக அளித்து வருகிறோம். 2023 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழ்நாடு அரசு மின் நூலக உதவி இயக்குநர் முனைவர் செ.காமாட்சி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். விருது வழங்கப்படும் நாளும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.
முனைவர் செ. காமாட்சி,
உதவி இயக்குநர், மின்நூலகம்,
தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை – 25.
மற்றும்
நூலகர் மற்றும் தகவல் அலுவலர்,
அண்ணா நூற்றாண்டு நூலகம்,கோட்டூர்புரம், சென்னை.
கல்வி
1997 – இளங்கலை அறிவியல், ஜி.வி.என்.கல்லூரி, கோவில்பட்டி.
1999- முதுகலை நூலக அறிவியல், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை.
2010 – யு.ஜி.சி யின் NET தேர்ச்சி
2013- முனைவர் பட்டம் (நூலக அறிவியல்), அண்ணா பல்கலைக் கழகம்.
2017 – MBA (HR) Anna University
மின்நூலக பணிகள்
90,000 க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு, தமிழ் மின் நூலகம் உருவாக்கத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர்.
மின்னுருவாக்கம் மற்றும் தரவு மேலாண்மைப் பணிகளில் தொழில்நுட்ப ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட தொடர் பங்களிப்பு.
பணி
02.02.2016 முதல் உதவி இயக்குநர், மின்நூலகம் (மு. கூ. பொ.),
தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை – 25.
07.10.2010 முதல் நூலகர் மற்றும் தகவல் அலுவலர், அண்ணா நூற்றாண்டு நூலகம்.
நூலகராக பணி அனுபவம்
21 ஆண்டுகள்.
*அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கீழ்கண்ட பிற திட்டங்களில் ஒருங்கிணைப்பாளராக தொடர்ச் செயல்பாடுகள்
1. பொது நூலக நூற் பட்டியல் தயாரிப்பு
2. சென்னை உட்பட பொருநை, வைகை, காவிரி, சிறுவாணி இலக்கியத் திருவிழாக்கள்
3. நூலக மின்னுருவாக்கம், மின் நூலகம் உருவாக்குதல்.
2019 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் நூலகர் திரு நரேந்திரன் அவர்களும்; 2020 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு உ.வே.சா நூலகத்தின் காப்பாட்சியர் திரு உத்திராடம் அவர்களும் தேர்வு செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். 2021 ஆம் ஆண்டில் கோவிட் காரணமாக விருது வழங்கப்படவில்லை. 2022 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் முன்னூர் கிளை நூலகர் ராஜேஷ் தீனா தேர்வு செய்யப்பட்டார்
‘ எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது’ பாராட்டுப் பட்டயமும், 10 ஆயிரம் ரூபாய் பண முடிப்பும் கொண்டது.
– ரவிக்குமார்
ஆசிரியர், மணற்கேணி


