ஐபிஎல் 2023 சாம்பியன் கோப்பை போட்டி முடிவடைந்ததும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை, நினைவுகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஐ.பி.எல் தொடரில் அதிமானோர் தோனியை பற்றியே பேசியும் எழுதியும் வருகிறார்கள். இந்நிலையில், ‘ரெஸ்டாரென்ட் செப் பிள்ளை’ என்ற உணவகத்தை கேரளாவில் நடத்தி வரும் சுரேஷ் பிள்ளை தனது டுவிட்டர் பக்கத்தில் தோனி-யை சந்தித்த பசுமையான தருணங்களை எழுதியுள்ளார். அந்தப் பதிவு இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. உலகம் முழுவதும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதன் விபரம்:
‘’ஐபிஎல் 2023 இறுதி ஆட்டத்துக்குப் பிறகு முழு உலகமும் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சாதனையாளரான தோனியைக் கொண்டாடும் போது, 5 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு உணவு பரிமாறும் பாக்கியம் எனக்கு கிடைத்ததைப் பிரமிப்போடு நினைத்துப் பார்க்கிறேன். அக்டோபர் 31, 2018. இந்தியா – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
நான் பணிபுரிந்து வந்த ஹோட்டலில் தான் வீரர்கள் தங்கியிருந்தனர். பேருந்திலிருந்து வீரர்கள் இறங்கியபோது எனது கண்கள் அவரைத் தான் தேடின. தனக்கே உரித்தான புன்னகையுடன் எங்களைக் கடந்து தனது அறைக்குச் சென்றார் தோனி. தனது ஹீரோவைப் பார்த்த குழந்தை போல மாறியிருந்தேன் நான். தோனியைப் பார்த்த யாருக்குத்தான் அப்படி இருக்காது?
ஓய்வுக்குப் பிறகு வீரர்கள் இரவு 7 மணி முதல் தங்களுக்கான உணவு ஆர்டர்களை அளித்தனர். பெரும்பாலும் கடல்சார் உணவுகளைக் கேட்டிருந்தார்கள். இரவு 9.30 மணிக்குள் கிட்டத்தட்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஆனால் நான் காத்திருந்த அழைப்பு 10 மணிக்கு வந்தது. தோனி அறையில் எனக்காகக் காத்திருப்பதாக என்னிடம் கூறப்பட்டது.
ஒரு கணம் உறைந்து போனேன். தொலைக்காட்சியில் அவரைப் பார்த்து சந்தோஷப்படும் என்னைத் தனது அறைக்கு அழைத்தார் தோனி. லிஃப்ட்டுக்குக் கூடக் காத்திராமல் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு மூன்றாவது மாடியில் இருந்த அவரது அறைக்கு ஓடினேன். என்னை அமைதிப்படுத்திக் கொள்ள ஒரு கணம் எடுத்துக்கொண்ட பிறகு, கதவைத் தட்டினேன்.
ஹாய், எப்படி இருக்கிறீர்கள், சாப்பிட என்ன இருக்கிறது என ஹிந்தி கலந்த தமிழில் கேட்டார். கடல் உணவு வகைகளை அவருக்கு விளக்கினேன். அப்போது, என்னால் கடல் உணவு சாப்பிட முடியாது. எனக்கு அதில் ஒவ்வாமை உண்டு. சிக்கன் குழம்பும் சாதமும் கிடைக்குமா? எனக்குத் தொண்டை வலி இருப்பதால் காரமான ரசம் வேண்டும் என்றார். பூண்டு ரசம் கிடைக்குமா எனத் தமிழில் கேட்டார்.
சுமார் 20 நிமிடங்களில் அறை எண் 302-க்கு உணவுடன் திரும்பினேன். செட்டிநாடு சிக்கன், பாசுமதி அரிசி, அப்பளம், ரசம் ஆகியவை பரிமாறப்பட்டன. மறுநாள் காலை, ஜிம்முக்குச் செல்லும் வழியில், என்னைப் பார்த்து இரவு உணவு பிடித்திருந்ததாகக் கூறினார். நான் விண்வெளியில் இருப்பதைப் போல உணர்ந்தேன். அந்த உணர்வை விவரிக்கவே முடியாது.
நான்கு நாள்கள் தான் என்றாலும், நான் பெரிதும் மதிக்கும் என்னுடைய நாயகனுக்கு உணவு பரிமாறவும் அதன்மூலம் அவரை மகிழ்ச்சியடையச் செய்யவும் முடிந்தது. இது என்னுடைய சமையல் வாழ்க்கையில் என்றென்றைக்குமான சிறப்பம்சமாக இருக்கும். நேற்று இன்று மட்டுமல்ல என்றும் எங்களுடைய தல நீங்கள். உங்களுக்கு வாழ்த்துகள். மீண்டும் உங்களுக்கு உணவு பரிமாறக் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தல தோனியை விரும்பாதவர்கள் யாருமுண்டோ..!