இங்கிலாந்துக்கு 6 நாள் பயணமாக சென்றுள்ள மத்திய அறிவியல் & தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் (மே 1-ம் தேதி) லண்டனில், ஜம்மு & காஷ்மீர் சமூக குழுக்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில், அமைச்சரின் சொந்த மக்களவைத் தொகுதியான உதம்பூர் உள்பட யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் லண்டனில் உள்ள ஜம்மு & காஷ்மீர் ஆய்வு மையக் கிளையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். டோக்ரா அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
ஜம்மு காஷ்மீரில் குடியேறிய பாகிஸ்தான் அகதிகளுக்கும், அரசியலமைப்பு உரிமைகள் பறிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் மகள்களுக்கும் நீதி வழங்கியதற்காக பிரதமர் மோடி வரலாற்றில் இடம் பெறுவார் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
பிரதமர் மோடி மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாக, உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்றும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு & காஷ்மீர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை பொருத்தவரையில் எந்த தெளிவின்மையும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார். .
இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களை கையாண்டது போல், ஜம்மு காஷ்மீரைக் கையாள அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் படேலை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மட்டும் அனுமதித்திருந்தால், இன்று பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். ஜம்மு & காஷ்மீர் பிரச்சினை ஒருபோதும் எழுந்திருக்காது. சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை மீண்டும் இந்தியாவுக்கு மீட்டெடுக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.
மத்திய அமைச்சருடன் உரையாடிய பல்வேறு குழுக்கள், இந்தியாவின் நடவடிக்கைகளைப் பாராட்டினர். பிரதமர் மோடியின் கீழ், இந்தியாவின் கண்ணோட்டத்தைக் கேட்க உலகம் தயாராக உள்ளது என்றும், இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு யாராலும் தீங்கு இழைக்க முடியாது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.