”பள்ளி விழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் திடக்கழிவு மேலான்மை, மற்றும் குப்பைகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்” என்று சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் ஈசன் இளங்கோ வலியுறுத்தினார்.
சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் ஜனவரி 31-ஆம் தேதி நடந்தது. ஆணையர் பாலசந்தர், துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் சேலம் மாவட்டத் திட்டக்குழு உறுப்பினரும் 34 வது கோட்ட மாமன்ற உறுப்பினருமான ஈசன் இளங்கோ பேசியதாது:
சேலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த முள்ளுவாடி மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வந்தமைக்கும், அடுத்து முள்ளுவாடி இரண்டாவது பாலம் அமைக்கும் பணி உடனே துவங்கப்படும் என அறிவித்தமைக்கும்
மாண்புமிகு முதல்வருக்கும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் அத்திட்டத்தை துவக்கி வைத்த மாண்புமிகு நகர்புற வளர்ச்சி துறைஅமைச்சருக்கும், உயர்திரு சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினருக்கும், வணக்கத்திற்குரிய சேலம் மாநகராட்சியின் மேயருக்கும், நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடுகளை முற்றிலும்
ஒழிப்பதற்காக தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
மண்ணில் மக்காத பிளாஸ்டிக் கேரி பேக்குகளை வணிக ரீதியாக பயன்படுத்துவோர், விற்பனை செய்வோர் மீது அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் மாநகராட்சியில் மாடித்தோட்டம் அமைத்து உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாநகராட்சி நுண்னுயிர் உரம் தயாரிக்கும் மையங்களில் பெறப்படும் உரங்களை விலையில்லாமல் வழங்க வேண்டும்.
மாநகராட்சி பள்ளி விழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் திடக்கழிவு மேலான்மை, மற்றும் குப்பைகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என அவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.
75-வது குடியரசு தினவிழாவை கொண்டாடிய நம் நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் நலத்திட்டங்களுக்கும் முடிவுகளுக்கும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வரும் தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ பேசினார்.