ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆனது தோனி தலையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 15 வது ஐபிஎல் தொடரில் சாம்பியனான குஜராத் அணியை அவர்களது சொந்த மண்ணிலேயே துவம்சம் செய்தது தல தோனி அன் கோ. மழை மிரட்டலுக்கு இடையே சந்தோஷ வெற்றி மழையில் சென்னை அணி குளித்தது. சென்னை அணி ரசிகர்கள் அரங்கத்தில் அடித்த விஷில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காதில் விழுந்து அதிர்ந்தது.
16 வது ஐபிஎல் இறுதி போட்டியில் தீபக் சஹார் வீசிய முதல் ஓவர், பவுண்டரிகள் எதுவும் இல்லாமல் அமைதியாகக் கடந்தது. பந்தில் வேகம் இல்லையென்றாலும், ஸ்விங் ஆனது. துஷார் தேஷ்பாண்டே ஓவரில் மூன்று ரன்களிலிருந்த ஷுப்மன் கில்லின் கேட்ச் வாய்ப்பை தீபக் சஹார் தவறவிட்டார்.
கேட்ச் வாய்ப்புக்குப் பிறகு, தீபக் சஹார் வீசிய முதல் பந்தை சஹா, சிக்ஸருக்கு அனுப்பினார். சஹா இறங்கி விளையாடுவதைப் பார்த்த தோனி, ஸ்டம்புக்கு அருகே வந்து சஹாருக்கு உதவப் பார்த்தார். ஆனால், ஃபீல்டிங்குக்கு ஏற்ப விளையாட முடியும் என கால்பக்கம் ஒரு பவுண்டரியும், ஆஃப் பக்கம் ஒரு பவுண்டரியும் அடித்து சென்னை மீதான நெருக்கடியை அதிகரித்தார் சஹா. இந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள்.
தேஷ்பாண்டேவின் அடுத்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார் கில். கேட்ச் தவறவிடப்பட்ட பிறகு மொமண்டமை சென்னை பக்கம் நகராமல் பார்த்துக்கொண்டார்கள்.
ஐந்தாவது ஓவரின் முதல் பந்தை குறைவான வேகத்தில் வீசினார் தீபக் சஹார். சரியாகக் கணிக்காத சஹா, பேட்டை முன்கூட்டியே விட்டார். பந்து தீபக் சஹாருக்கு வைடாக சென்றது. அவரும் கையைவிட்டார். இந்த முறையும் பந்து கையில் சிக்கவில்லை. இது சற்று கடினமான கேட்ச் வாய்ப்பு. இந்த ஓவரிலும் 11 ரன்கள். தீக்ஷனா வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரிலும் எந்த மாற்றமும் இல்லை. கில் ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க, குஜராத்துக்கு அட்டகாசமான தொடக்கம் அமைந்தது. 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்தது குஜராத்.
பவர்பிளேவுக்குப் பிறகும் அதிர்ஷ்டக் காற்று குஜராத் பக்கமே இருப்பதாகத் தெரிந்தது. பந்துவீச்சு முனையில் தேஷ்பாண்டே வீசிய த்ரோவை சரியாகப் பிடிக்காத ஜடேஜா, வெறும் கையால் ஸ்டம்புகளைத் தகர்த்தார். பந்தை சரியாகப் பிடித்து தகர்த்திருந்தால், சஹா ரன் அவுட் ஆகியிருந்திருப்பார். இதே ஓவரில் சஹாவை அவுட் செய்ய மற்றொரு ரன் அவுட் வாய்ப்பு கிடைத்தது. ஜடேஜா வீசிய த்ரோ ஸ்டம்புகளைத் தொடாமல் சென்றது.
ஆனால், ஜடேஜாவின் கடைசிப் பந்து வழக்கம்போல ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி, வெளிப்பக்கமாக நன்கு திரும்பியது. முன்சென்று விளையாடப் பார்த்த கில், பந்தைத் தவறவிட்டார். பந்து தோனியிடம் சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வேக ஸ்டம்பிங், கில் அவுட். சென்னைக்குத் தேவையான விக்கெட்டை ஜடேஜா உதவியுடன் வீழ்த்தினார் தோனி.
இந்த விக்கெட்டுக்குப் பிறகு, எதிர்பார்த்ததைப்போல ஆட்டத்தில் வேகம் குறைந்தது. அடுத்த மூன்று ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்கள். 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது குஜராத்.
11-வது ஓவரிலிருந்து சஹா – சாய் சுதர்சன் இணை அதிரடிக்கு மாறியது. மூன்று ஓவர்களில் 38 ரன்கள் விளாச, குஜராத்தின் ரன் ரேட், ஓவருக்கு மீண்டும் 9-ஐ தாண்டியது. சஹா அரை சதம் அடித்தார்.
14-வது ஓவரில் தனது கடைசி ஓவரை வீச வந்த தீபக் சஹார், முதல் ஐந்து பந்துகளில் பவுண்டரி கொடுக்காமல் வீசினார். கடைசிப் பந்தில் வேகத்தைக் குறைத்து சஹாவை அவுட்டாக்கினார். சஹா 39 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் எடுத்தார்.
15-வது ஓவரில் தீக்ஷனா தனது கடைசி ஓவரை வீசினார். விக்கெட் விழுந்ததால், ரன் வேகம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு சாய் சுதர்சனிடம் இருந்தது. இவரும் தீக்ஷனா ஓவரில் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ஸ்டிரைக் ரேட்டை உயர்த்தினார். 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது குஜராத்.
கடைசிக் கட்ட ஓவர்களில் பாண்டியா அதிரடி காட்டுவார் எனப் பார்த்தால், சாய் சுதர்சன் மிரட்டலைத் தொடர்ந்தார். பதிரனா ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து 33 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
தேஷ்பாண்டே வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரும், அடுத்த மூன்று பந்துகளில் ஃபீல்டிங்குக்கு ஏற்ப இடைவெளியில் மூன்று பவுண்டரிகளும் விளாசினார் சாய் சுதர்சன். மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் இதே சாய் சுதர்சன்தான் ரிடையர்ட் அவுட் ஆனார். 17 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்த குஜராத்தின் ரன்ரேட் ஓவருக்கு 10-ஐ தாண்டியது.
18-வது ஓவரை வீசிய பதிரனா பவுண்டரிகளைக் கொடுக்கவில்லை. ஆனால், தேஷ்பாண்டே வீசிய 19-வது ஓவரை சிக்ஸர் அடித்து வரவேற்ற ஹார்திக் பாண்டியா, சிக்ஸருடனே நிறைவு செய்தார். இடையில் சாய் சுதர்சனும் ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள். குஜராத் 200 ரன்களைத் தொட்டது. தேஷ்பாண்டே 4 ஓவர்களில் 56 ரன்கள் கொடுத்தார்.
குவாலிஃபையர் 2-வில் கடைசி ஓவருக்கு முன்பு ரிடையர்ட் அவுட் ஆனார் சாய் சுதர்சன். இந்த முறை கடைசி ஓவரில் ஸ்டிரைக்கில் இருந்த சாய் சுதர்சன், முதலிரண்டு பந்துகளில் ஆஃப் பக்கம், கால் பக்கம் என இரண்டு சிக்ஸர்களை அடித்தார். சதமடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பதிரனாவின் சிறப்பான யார்க்கரில் எல்பிடபிள்யு ஆனார். சாய் சுதர்சன் 47 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 96 ரன்கள் குவித்தார்.
ஓவரை மோசமாக தொடங்கியிருந்தாலும், சிறப்பாகவே நிறைவு செய்த பதிரனா கடைசிப் பந்தில் ரஷித் கானையும் ஆட்டமிழக்கச் செய்தார்.
குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. ஆட்டமிழக்காமல் இருந்த ஹார்திக் பாண்டியா 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் இதுவே அதிகபட்ச ஸ்கோர்.
சிஎஸ்கே ஆட்டம்
தொடக்கம் சிறப்பாக அமைய வேண்டும் என்கிற பொறுப்புடன் ருதுராஜ் கெயிக்வாட், டெவான் கான்வே களமிறங்கினார்கள். முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தை ருதுராஜ் பவுண்டரி அடித்தார். பவுண்டரியுடன் மழையும் வந்தது. ஆட்டம் தடைபட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 12.10 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. நேரம் வீணானதால் ஆட்டம் 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. சென்னைக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.
ஓவர்கள் குறைக்கப்பட்டதால் அதிரடியுடன் விளையாட வேண்டும் என்கிற பொறுப்பு தொடக்க பேட்டர்களுக்கு மேலும் அதிகரித்தது. முதல் ஓவரிலேயே நோக்கம் வெளிப்பட்டது. ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசிப் பந்தில் சிறப்பான பவுண்டரி அடித்தார் ருதுராஜ். ஹார்திக் பாண்டியா வீசிய இரண்டாவது ஓவரில் கான்வேவும் இறங்கி வந்து ஆஃப் பக்கம் சிக்ஸர் அடித்து அதிரடி முனைப்பை வெளிப்படுத்தினார்.
இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் எடுத்தது சென்னை. ஷமியின் இரண்டாவது ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் அடித்து குஜராத்துக்கு நெருக்கடியை அதிகரித்தார் கான்வே.
ரன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, பவர்பிளேயின் கடைசி ஓவரான நான்காவது ஓவரில் ரஷித் கானை அழைத்தார் ஹார்திக் பாண்டியா. கான்வே, இவரையும் பவுண்டரி அடித்தே வரவேற்றார்.
ரஷித் கானுக்கு எதிராக நல்ல ஸ்டிரைக் ரேட் வைத்துள்ள ருதுராஜ், இந்த ஓவரின் கடைசி இருபந்துகளில் அவர் பங்குக்கு அற்புதமான சிக்ஸரும், பவுண்டரியும் அடித்தார்.
நான்கு ஓவர்களில் சென்னை விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்து வெற்றிக்குத் தேவையான அடித்தளத்தை அமைத்தது.
ஹார்திக் பாண்டியா எதிர்பார்த்தது நூர் அஹமது வீசிய ஐந்தாவது ஓவரில் நடந்தது. பவுண்டரிகளைக் கொடுக்கவில்லை. ஜோஷ் லிட்டில் ஓவரில் இரண்டு முறை புல் ஷாட் விளையாடப் பார்த்த கான்வேவுக்கு பந்து சரியாகப் படவில்லை. கடைசிப் பந்தில் விளையாடிய புல் ஷாட்டில் பந்து சரியாகப் பட, மிட் விக்கெட் திசையில் சிக்ஸர். ஆறு ஓவர்களில் சென்னை 72 ரன்கள் எடுத்தது.
சென்னை நல்ல நிலையில் சென்றுகொண்டிருந்தபோது, நூர் அஹமதுவின் கூக்ளியைக் கணிக்காமல் தூக்கி அடித்தார் கெயிக்வாட். பேட்டின் விளிம்பில்பட்டு மேலே செல்ல, ரஷித் கானிடம் கேட்ச் ஆனார். இவர் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.
இதே ஓவரின் கடைசிப் பந்தில் கடினமான ஷாட்டை விளையாடப் பார்த்த கான்வே, லாங் ஆஃபிடம் கேட்ச் ஆனார். இவர் 25 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய அஜின்க்யா ரஹானே, மொமண்டம் குஜராத் பக்கம் திரும்பாதவாறு லிட்டில் ஓவரில் முதலில் மிட் விக்கெட் பக்கம் ஒரு சிக்ஸர் அடித்தார். ஐந்தாவது பந்தை லாங் ஆஃப் பக்கம் அழகான டிரைவ் மூலம் ஒரு சிக்ஸர் அடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்த அடுத்த ஓவரில் சென்னை 16 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து மூன்றாவது ஓவரை வீசிய நூர் அஹமது இதிலும் பவுண்டரி கொடுக்காமல் வேகத்தடையாக இருந்தார். ஐபிஎல் முழுக்க சுழற்பந்துவீச்சை நொறுக்கித் தள்ளி வந்த துபேவுக்கும் இன்று பந்து சரியாகப் படவில்லை. 10-வது ஓவரை வீசிய ரஷித் கானும் முதல் நான்கு பந்துகளில் ஐந்து ரன்கள்தான் கொடுத்தார்.
ஆனால், ரஹானே கடைசி இருபந்துகளில் இருபவுண்டரிகள் அடித்து நெருக்கடியைத் தணித்தார். 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்த சென்னைக்குக் கடைசி ஐந்து ஓவர்களில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.
நடப்பு ஐபிஎல் முழுக்க கடைசிக் கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த மோஹித் சர்மா, 11-வது ஓவரில் ரஹானேவை ஆட்டமிழக்கச் செய்தார். ரஹானே 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.
ரஹானே ஆட்டமிழந்தவுடன் துபேவுக்கு பந்து சரியாகப்படத் தொடங்கியது. 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்த துபே, ரஷித் கான் ஓவரில் கடைசி இருபந்துகளில் இருசிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
கடைசி மூன்று ஓவர்களில் 38 ரன்கள் தேவைப்பட்டன. தனது கடைசி ஐபிஎல் ஆட்டத்தில் களமிறங்கிய அம்பதி ராயுடு, மோஹித் சர்மா ஓவரில் சிக்ஸர், பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஆட்டத்தின்போக்கை மாற்றினார். 14 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஆனால், மோஹித் சர்மா மாற்று திட்டத்தை வைத்திருந்தார். வேகத்தைக் குறைத்து வீசி வந்த மோஹித், வேகத்தை அதிகரிக்க புல் ஷாட் விளையாடப் பார்த்து அவரிடமே கேட்ச் ஆனார் ராயுடு. இவர் 8 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்.
அடுத்து யார் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோது எம்.எஸ்.தோனி களமிறங்கினார். முதல் பந்தை எக்ஸ்ட்ரா கவர் பக்கம் அடிக்கப் பார்த்து, மில்லரிடம் கேட்ச் ஆனார். ஆட்டத்தில் மீண்டும் குஜராத்தின் கை ஓங்கியது. 13-வது ஓவரை வீசிய ஷமி பவுண்டரி கொடுக்காமல் கச்சிதமாக வீசினார். 8 ரன்கள் மட்டுமே எடுத்ததால், கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன.
அட்டகாசமாக வீசிய மோஹித் சர்மா முதல் நான்கு பந்துகளில் நான்கு யார்க்கர் பந்துகளை சரியாக செயல்படுத்தினார். கடைசி இரு பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட, ஸ்டிரைக்கில் ஜடேஜா இருந்தார். 5-வது பந்தில் லெங்த்தை கடுகளவில் தவறவிட்டார் மோஹித். இந்த சிறிய தவறைப் பயன்படுத்திய ஜடேஜா, லாங் ஆன் பக்கம் சிக்ஸர் அடித்தார். கடைசிப் பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டன. ஃபைன் லெக் ஃபீல்டர் வட்டத்துக்குள் இருக்க, கால்பக்கமாக லோஃபுல் டாசாக வீசினார். பந்து பின்பக்கமாக பவுண்டரிக்குச் சென்றது.
ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆனது சென்னை சூப்பர் கிங்ஸ். தோனியே ஜடேஜாவைத் தூக்கிக் கொண்டாடக்கூடிய அளவுக்குக் கடைசிப் பந்து வரை த்ரில்லாகச் சென்ற ஆட்டத்தில் மறக்க முடியாத வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இப்போது, ரசிகர்கள் விசில் மழை. தோனி ஆனந்தக் கண்ணீருடன் 5 வது முறையாக சென்னை அணியின் சாம்பியன் கோப்பையுடன் தனது சகாக்களுடன் வெற்றி கொண்டாட்டத்தை பகிர்ந்து கொண்டார்.