தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை:
சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு வழிகாட்டியாகவும், அரசியல் அடையாளமாகவும் திகழ்ந்தவர் அமரர் ஐயா இளையபெருமாள் அவர்கள்.
சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோயிலில் 1924 ஆம் ஆண்டு, ஜூன் 26ஆம் தேதி பிறந்த இளையபெருமாள் அவர்கள் சிறுவயது முதலே சுயமரியாதையும் சமத்துவ உணர்வும் கொண்டவராகத் திகழ்ந்தார், அறிவாற்றலும் துணிச்சலும் நிரம்பிய ஐயா இளையபெருமாள் அவர்கள், தமிழகத்தில் சமூக சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாக இருந்த தலைவர்களான அயோத்திதாச பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, சுவாமி சகஜானந்தா ஆகியோரின் வழிவந்தவர்.
1940 முதல் 1970 வரை அன்றைய தென் ஆற்காடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இளையபெருமாள் பல சமூகப் போராட்டங்களை நடத்தியுள்ளார். 1952 ஆம் ஆண்டு, தனது 27வது வயதில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பட்டியலின மக்களுக்காக ஆற்றிய பணிகளுக்காக, அண்ணல் அம்பேத்கரால் பாராட்டப்பட்டார்.
மூன்று முறை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். 1980-84 ஆண்டுகளில் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
1965ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பட்டியலினச் சாதியினரின் பொருளாதாரம், கல்வி மேம்பாடு மற்றும் தீண்டாமை குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஐயா இளையபெருமாள் அவர்கள் ஆற்றிய பணி மகத்தானது.
அகில இந்திய தீண்டாமை எதிர்ப்பு கழகத்தின் தலைவராக, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சாதி அமைப்பையும் தீண்டாமையின் தீமையையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார். விருப்பத்துக்கு மாறான தொழில்களை ஒருவர் மீது திணிப்பது தவறு என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியவர். பட்டியல் சமூக மக்களின் பண்பாட்டு மூலதனத்தை மீட்பதற்காக ஐயா இளையபெருமாள் நடத்திய போராட்டங்கள் அவரது முதன்மையான அரசியல் பங்களிப்பாக விளங்கின.
தென்னாட்டு அம்பேத்கர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட சமரசமற்ற போராளி, சமூகத்தை முன்னேற்ற அயராது உழைத்த தலைவர் அமரர் ஐயா இளையபெருமாள் அவர்களது பிறந்த தினமான இன்று, அவரது கனவான ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்போம்.