நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஜுரம் இப்போதே நாடு முழுவதும் தொடங்கி விட்டது. பாட்னாவில் முதல் கூட்டத்தை நடத்திய எதிர்கட்சிகள், இரண்டாவது கூட்டத்தை ஜுலை 18-ம் தேதி செவ்வாய்கிழமை பெங்களூருவில் நடத்தியது. கூட்டணிக்கு பெயரையும் வைத்து விட்டார்கள்.
இந்நிலையில் ஆளும் பாஜகவும் உஷார் ஆகி இருக்கிறது. அவர்களும் டெல்லியில் ஜுலை 18-ஆம் தேதி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்கள். அதில், 38 கட்சிகள் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் காலத்தில் கூட 28 கட்சிகள்தான் கூட்டணியில் இருந்தன; ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில் அதைக்காட்டிலும் அதிகமாக 38 கட்சிகள் இருப்பதாக பாஜக கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் அதிமுக-வைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு அழைப்பு அனுப்பி, ஓ. பன்னீர்செல்வத்தை அழக்காமல் விட்டு விட்டனர். ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியில், துண்டாடப்பட்ட 2 பிரிவுகளுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி-யை விட்டு வெளியேறி விட்டதாக பாமக அறிவித்திருந்த நிலையில், அந்தக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ள பாஜக, தங்களோடு தொடுக்கிக் கொண்டுள்ள தேமுதிக -வை கைவிட்டுள்ளது.
புதிய தமிழக டாக்டர் கிருஷ்ணசாமி, தாங்கள் வென்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு தயங்கி ஒதுங்கிக் கொண்ட ஜி.கே. வாசன் தலைமையிலான தமாகா ஆகிய கட்சிகளுக்கும் பாஜக அழைப்பில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.ஏசி.சண்முகம், தேவநாதன் யாதவ், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாரிவேந்தர் என்று தமிழ்நாட்டில் மேலும் சில கட்சிகளுக்கு அழைப்பு இருந்தது.

பஞ்சாப்பில் அகாலிதளத்தின் ஒரு கோஷ்டி, மகாராஷ்டிராவில் யாருக்குமே தெரியாத பிஜேபி (PJP), ஆர்எஸ்பி (RSP), ஜேஎஸ்எஸ் (JSS), மணிப்பூரின் குக்கி மக்கள் முன்னணி, மேகாலயாவின் யுடிபி, எச்பிடி, உ.பி.யைச் சேர்ந்த நிஷாத் கட்சி, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ், பீகார் அவாமி மோர்ச்சா, ஆந்திரா-வில் பவண் கல்யாணின் ஜனசேனா, கேரளாவில் பாரத் தர்ம சேனா, கேரளா காமராஜ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் 38 கட்சிகள் கூட்டணி பட்டியலில் பாஜக காட்டியுள்ளது.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால், இந்த 38 கட்சிகளில் 24 கட்சிகளுக்கு மக்களவையில் ஒரு எம்.பி. கூட இல்லை. 9 கட்சிகளுக்கு மட்டும்தான் எம்.பி.க்கள் உள்ளனர். 27 கட்சிகளுக்கு மாநிலங்களவையிலும் ஒரு எம்.பி. கூட இல்லை. 7 கட்சிகளுக்கு எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. இது தான் பாஜக கூட்டியிருக்கும் 38 கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் செல்வாக்கு ஆகும் என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

