பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செம்மண் அள்ளிய திமுகவினரைத் தடுத்த துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் அவரின் கூட்டாளிகளான மணி, தனபால் ஆகியோர் கல்லைக் கொண்டு கடுமையாகத் தாக்கி, கொல்ல முயன்றுள்ளனர்.
பொதுமக்களால் மீட்கப்பட்ட பிரபாகரன், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாரிகள் கொல்லப்படுவதும், கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்கிறது.
மணல் கொள்ளையர்களால் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்படுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க வேண்டியதும், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதும் தமிழக அரசின் கடமை.