சென்னை வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
வித்யோதயா பள்ளிகள், பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டில், 100 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டதை நினைவுகூறும்விதமாக, இந்திய அஞ்சல் துறை, சென்னை நகர மண்டலம், ஒரு சிறப்பு அஞ்சல் உறையை 24.02.2024 அன்று வெளியிட்டது.
வித்யோதயா பள்ளிகள் திருமதி E.S.அப்பாசாமி அவர்களால் பெண்கள் கல்வி கற்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1924-ல் இப்பள்ளி தொடங்கப்பட்டது. ஆறு மாணவிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட வித்யோதயா பள்ளிகள் இன்று 2500 மாணவிகளைக் கொண்ட தலைசிறந்த பெண்கள் பள்ளியாக வளர்ந்துள்ளது. இந்தப் பள்ளிகள் பல தலைவர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் மற்றும் தொழில் முனைவோரை பல்வேறு துறைகளில் உருவாக்கியுள்ளன.

நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்ற நிறைவுவிழாவில், அஞ்சல் சிறப்பு உறையை சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் க.நடராஜன் அவர்கள் வெளியிட்டார். விழாவிற்கு, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் M.K.நாராயணன் தலைமை தாங்கினார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி R.N.மஞ்சுளா, மற்றும் வித்யோதயா பள்ளிகளின் நிர்வாகக் குழு தலைவி ஒய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, திருமதி ஜெயந்தி அவர்கள் மற்றும் Dr. பிரபா அப்பாசாமி, வித்யோதயா பள்ளிகளின் ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் V. நாகப்பன், வித்யோதயா பள்ளிகளின் ஆட்சிக்குழு பொருளாளர் மற்றும் பள்ளியின் தாளாளர், R. நிரஞ்சனி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

