சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா 28.04.2023 தொடங்கி மே மாதம் 14 ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் .உதயநிதி ஸ்டாலின் சென்னை விழா – சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா அரங்கங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தமிழ்நாட்டை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ள சென்னை விழாவில் 10 வெளிநாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் 30 அரங்கங்களில் இடம் பெறுகின்றன. 20 வெளிமாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகள் 83 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணிவகைகள், பட்டு சேலைகள், கோ – ஆப் டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் 70 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியால் சென்னை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கைவினை கலைஞர்களின் படைப்புகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது.
சென்னை விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோடம்பாக்கம் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், ராசிபுரம் தாழம்பூ பட்டு புடவைகள், ஆர்கானிக் கைத்தறி சேலைகள், நெகமம் கைத்தறி சேலைகள், பவானி ஜமக்காளம், படுக்கை விரிப்புகள், அலங்கார கைத்தறி துணிகள், மேஜை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், செட்டிநாடு சுங்கடி புடவைகள், ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர் அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப்பட்ட கலை பொருட்கள், துணிப்பைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பத்தமடை பாய் உள்பட ஏராளமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தென்னக கலைபண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாட்டின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மயிலாட்டம், ஒயிலாட்டம் என தினந்தோறும் 5 க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள் பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன.
சென்னை விழா – கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.

