சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் நிலைத்தன்மைக்கான பள்ளியைத் தொடங்கியுள்ளது.
நிலைத்தன்மை, ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பான இடைநிலைப் பாடங்களை ‘நிலைத்தன்மைக்கான பள்ளி’ புதிதாகக் கற்றுக் கொடுக்கும். அத்துடன் நடைமுறையிலும், கொள்கை அளவிலும் இயக்க உதவும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தவும், நிகழ்ச்சிகளை நடத்தவும் ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
நாடாளுமன்ற உறுப்பினரும், நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவருமான ஜெயந்த் சின்ஹா, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, நிலைத்தன்மைக்கான பள்ளியின் தலைவர் பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் முன்னிலையில் இப்பள்ளியின் தொடக்கவிழா 7 அக்டோபர் 2023 அன்று நடைபெற்றது.
தொடக்க விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரைநிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினரும், நிதித்துறை நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான ஜெயந்த் சின்ஹா கூறுகையில், ”இன்று உலகம் பற்றி எரிகிறது… 2023 ஆம் ஆண்டில் மிக வெப்பமான ஆண்டை நாம் அனுபவித்து வருகிறோம். கனடாவில் ஏற்பட்ட தீ விபத்து முதல் சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வரை இந்த ஆண்டு உலகை உலுக்கிய தீவிர வானிலை நிகழ்வுகளில் நாம் பார்த்தோம். எனவே, நிலைத்தன்மை குறித்த பாடத்தில் ஒரு பல்துறை முதுகலை திட்டத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கும் ஆன்லைனிலும் நேரிலும் பல்வேறு நிலைத்தன்மை தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வழங்கவும் பள்ளி திட்டமிட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, “ஐ.நா.சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது உலகம் முழுமைக்குமான கூட்டுப் பொறுப்பாகும். இப்பள்ளியின் மூலம் நிலையான வளர்ச்சியை இலக்காக கொண்டு தீர்வுகள் குறித்து கலந்தாலோசிக்க, விவாதிக்க, மேம்படுத்த, தீர்வுகளை உருவாக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையினரைக் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம். நிலைத்தன்மை தொடர்பான மனிதத் திறன் மேம்பாட்டைக் கட்டமைப்பது இப்பள்ளியின் முதன்மை நோக்கமாக இருக்கும்” என்றார்.