’’செத்தும் கொடுத்த சீதக்காதி மரபில் உறுப்பு தானம் செய்த பாபுவின் தம்பிக்கு அரசு வேலை வழங்கிடுக’’ என்று துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிக்கை:
செத்தும் கொடை கொடுத்தான் சீதக்காதி. அதேபோல பாரதத்தில் கர்ணன் மார்பில் அம்பு பாய்ந்து தேர் சக்கரத்தில் கிடந்தபோது, கண்ணன் மாறு வேடத்தில் வந்து தானம் கேட்டான். கொடு்ப்பதற்கு ஒன்றும் இல்லாத நிலையில், நீ செய்த தான தர்மங்கள் அத்துனையும் எனக்குத் தருவாயாக என கேட்டபோது தந்தவன் கர்ணன்.
அதனால் கொடையில் சிறந்தவன் கர்ணன் என பெருமை பேசுகிறோம். அந்த வரிசையில் அண்மையில் விபத்தில் உயிரிழந்த திருச்சியைச் சேர்ந்த இளைஞர் பாபு அவர்கள் மூளைச் சாவு அடைந்த நிலையில், அவருடைய உறுப்புகள் அனைத்தையும் தானம் வழங்கிய அக்குடும்பத்தின் தயாள குணத்தைக் கண்டு பெருமையடைகின்றேன்.
திருச்சி தெற்கு உக்கடை அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த முடிதிருத்தும் ஏழைத் தொழிலாளி பிச்சை. இவர் மறுமலர்ச்சி திமுகவில் முப்பதாண்டுகளாகப் பணியாற்றிடும் தீவிரத் தொண்டர். மாவட்டப் பிரதிநிதியாகவும் இருக்கின்றார்.
இவருக்கு விஜயா என்ற மனைவியும், பிரபு, பாபு, மனோவிஜய், சசிகுமார் என்ற நான்கு ஆண் பிள்ளைகள். இதில், இரண்டாவது மகன் பாபு 38 வயது, ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சத்தியா. குழந்தைகள் இல்லை.
இவர் கடந்த மாதம் 24-ந் தேதி இரவு பால்பண்ணை அருகில் நடந்த விபத்தில் காயமுற்று, திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தலைவர் வைகோ அவர்களின் உதவியாளர் வெ.அடைக்கலம் அவர்கள் டீன் மற்றும் கண்காணிப்பாளரிடம் பேசி மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டும் பாபுவைக் காப்பாற்ற இயலாது என கைவிரித்தனர். காரணம் அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டதாகக் கூறினார்கள்.
இந்நிலையில் பாபுவின் தந்தை பிச்சை – தாய் விஜயா, மனைவி சத்தியா, சகோதரர்கள் மூவர் என ஆறு பேரும் பாபு இறந்து விடுவார். அவர் உறுப்புகள் மற்றவர்களுக்கு பயன்படட்டும் எனக்கூறி முழு உடல் தானம் செய்ய சம்மதித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், உடல் தானம் செய்வோர்க்கு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்த சில நாட்களில், பாபுவின் குடும்பம் இத்தகைய அருஞ்செயலைச் செய்தது.
மறைந்த பாபுவின் உடலுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ், பொன்மலை உதவி காவல் ஆணையர் காமராஜ், அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவானந்தம், வெ.அடைக்கலம் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அரசு மரியாதையும் வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து இம்மாதம் ஞாயிற்றுக்கிழமை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பாபுவின் இல்லம் சென்று துக்கம் விசாரித்தார்.
நானும், மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, திருச்சி மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, டி.டி.சி.சேரன், மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோருடன் திங்கள்கிழமை பாபுவின் இல்லம் சென்று, அவர் படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறினேன்.
அப்போது, பாபுவின் தாய் விஜயா கண்ணீர் மல்க ஒரு வேண்டுகோள் வைத்தார். தனது கணவர் மிகுந்த சிரமத்திற்கு இடையே நான்கு பிள்ளைகளை வளர்த்தார்.
அதில், ஒருவனை இழந்துவிட்டோம் என்றார். கடைசிப் பையன் சசிகுமார் வங்கிக் கடன் பெற்று மெக்கானிக்கல் என்ஜீனியர் படித்துள்ளார். வங்கி கடனைக் கட்டிட அழுத்தம் தருகிறது. சசிகுமாருக்கு ஏதாவது அரசு வேலை பெற்றுத்தருவதற்கு ஆவண செய்யுங்கள் என்றார்.
கோடிக் கணக்கில் பணம் உள்ளவர்களுக்குக் கூட மனம் வராது. ஆனால், தன் பிள்ளை மூளைச் சாவு அடைந்த மறுநிமிடமே, அவன் உறுப்புகள் மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்று முழு உடல் தானம் செய்த உங்களுக்கு நான் மட்டுமல்ல, இந்த சமூகமே நன்றிக்கடன் பட்டுள்ளது. கவலைப்பட வேண்டாம். தலைவர் வைகோ பரிந்துரையுடன், உங்களது கடைசிப் பிள்ளை சசிகுமாருக்கு அரசுப் பணி பெற்றுத் தருவதற்கு முதலமைச்சரிடம் வலியுறுத்துவோம்.
மேலும், உங்கள் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சகோதரர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி -யிடமும், நான் பேசி சசிகுமாருக்கு அரசுப் பணிவாய்ப்பு வழங்கிட முயற்சிக்கிறேன் என உறுதி கூறினேன்.
இதுதவிர பாபுவின் மனைவி சத்தியா எதிர்காலத்திற்கும், நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றேன்.
இதிகாசங்களிலும், வரலாறுகளிலும் வள்ளல் தன்மை உடையவர்களைப் படித்து இருக்கின்றோம். சமகாலத்தில் தம்மிடம் ஏதும் இல்லை என்ற நிலையிலும், பிள்ளையை இழந்த துக்கம் கவ்விய போதும், மற்ற உயிர்களுக்கு இந்த உறுப்புகள் பயன்பட வேண்டும் என்று தீரத்துடன் முடிவெடுத்த பாபுவின் குடும்பத்தினர் ஆறு பேர் தான், ஆண்டவன் என்பதை உணர்ந்து சிலாகித்தேன்.
இத்தகைய அரும்பெரும் தியாகத்தைச் செய்த பாபு அவர்களுக்கு தமிழ்நாடு அரசு, அரசு மரியாதை செய்ததற்கு மறுமலர்ச்சி திமுக குடும்ப உறவு என்ற அடிப்படையில் நன்றி தெரிவிக்கிறேன். அதேநேரத்தில் அவர்கள் வைத்துள்ள கோரிக்கையான, பாபுவின் கடைசித் தம்பி சசிகுமாருக்கு உடனடியாக அரசு வேலை வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
இதுகுறித்து (18.10.2023) இன்று காலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சகோதரர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம், தொலைபேசி வழியாக பாபுவின் குடும்பச் சூழல் குறித்து தெரிவித்தேன்.
மறைந்த பாபுவின் தம்பி சசிகுமார் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லையென்றாலும், ஏதாவது ஒரு அரசு வேலை உடனடியாகக் கிடைப்பதற்கு தாங்கள் ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அமைச்சர், அவசியம் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன். இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பேசுகிறேன் என உறுதியளித்தார்.