சீர்மிகு நகர திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தினால் வழங்கப்படும் விருதுகளில், தமிழ்நாட்டிற்கு இந்திய அளவில் இரண்டாவது சிறந்த மாநிலத்திற்கான விருதும், கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளுக்கு சிறந்த மாநகரங்களுக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளன.
நகர்ப்புர பகுதிகளில் முக்கிய உட்கட்டமைப்பை வழங்குவது, சுத்தமான மற்றும் நிலையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களுடன் ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் சீர்மிகு நகரத் திட்டம், ஜூன்,
2015-இல் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில், சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு ஆகிய 11 மாநகராட்சிகள் சீர்மிகு நகரங்களாக தேர்வு செய்யப்பட்டன.
சீர்மிகு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் முன்னோடி நகர உத்திகள், திட்டங்கள் மற்றும் புதுமையான யோசனைகளை அங்கீகரித்து வெகுமதி அளிக்கும் நோக்கத்துடன் ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் இந்திய சீர்மிகு நகர விருது போட்டி (Indian Smart Cities Award Contest) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியின் கீழ், பல்வேறு கருப்பொருள்கள் மற்றும் அளவுருக்களின் அடிப்படையில் சிறந்த மாநிலம் மற்றும் நகரங்களை ஒன்றிய அரசு அங்கீகரித்து விருது அளிக்கிறது.
சீர்மிகு நகர திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கான 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய சீர்மிகு நகர விருது போட்டியில் இந்திய அளவில், தமிழ்நாடு இரண்டாவது சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் அனைத்து சீர்மிகு நகரங்களுக்கு இடையேயான போட்டியில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு தென் மண்டல அளவிலான நிதி மற்றும் செயல்திறனில் முதல் இடத்திற்கான விருது மற்றும் மாதிரி சாலைகள், ஏரிகள் புனரமைப்பிற்காக இந்திய அளவில் முதல் இடத்திற்கான விருது; கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மறு சீரமைப்பு மற்றும் நகரத்தின் அடையாளத்தை மேம்படுத்தும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு இந்திய அளவில் மூன்றாவது இடத்திற்கான விருது; மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்திய அளவில் மூன்றாவது இடத்திற்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டிற்கான இந்திய சீர்மிகு நகர திட்ட விருது போட்டியில், இந்தியாவின் இரண்டாவது சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான விருதினை, செப்டம்பர் 27, 2023 அன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர், தா.கார்த்திகேயன், பெற்றுக்கொண்டார். மேலும், சிறந்த சீர்மிகு நகரங்களுக்கான விருதுகளை மாநகராட்சியின் மேயர்கள் மற்றும் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.