திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத சூழலில், பெருகவாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்த சிங்கப்பூர் வாழ் தமிழர்களான அன்பழகன், தனசேகரி ஆகியோரின் மகன்கள் பொறியாளர்கள் இளங்கோவன்(64), முத்தழகன்(59), ஆடிட்டர் ராஜகோபால்(55) ஆகியோர் தற்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டித் தந்துள்ளனர். இவர்கள் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள்.
தமிழக அரசின் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்டம்’ என்ற திட்டம் மூலம் தங்கள் பயின்ற பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தங்களது தாயாரின் பெயரில் ரூ.1 கோடி மதிப்பில் 3 அடுக்குகள் கொண்ட 9 வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்டித் தந்துள்ளனர்.
கடந்த 2018-ல் தங்கள் சொந்த ஊருக்கு வந்தபோது கஜா புயலில் பள்ளி மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததால் அதற்காக எதையாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து மூவரும் இணைந்து பணம் சேர்த்து, இதை செய்திருப்பதாக சகோதரர்கள் தெரிவித்தனர்.

தங்களது தாயாரின் பெயரில் ‘தனசேகரி அம்மாள் அறிவரங்கம்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள கட்டிடத்தை தனது தந்தை அன்பழகன் கரங்களால் திறக்கச் செய்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ முன்னிலையில் சகோதரர்களான அ.இளங்கோவன், அ.முத்தழகன், அ. ராஜகோபால் ஆகியோர் இணைந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் அ.புகழேந்தியிடம் ஒப்படைப்பு செய்தனர்.
இந்த நிகழ்வில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்எல்ஏ மாரிமுத்து, பி.டி.ஏ.தலைவர் வி.எஸ்.ஆர்.தேவதாஸ், மாவட்ட கல்வி அலுவலர் இ.மாதவன், ஊராட்சி தலைவர் ஆர்.பி.ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சகோதரர்களின் இந்த போற்றுதலுக்குரிய செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
முதலமைசர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ”திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தில், கஜா புயலினால் சேதமடைந்த 60 ஆண்டுகால அரசுப் பள்ளியை, அந்தக் கிராமத்தில் வசித்த தாய் தனசேகரி அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, சிங்கப்பூர் வாழ் சகோதரர்களான இளங்கோவன், முத்தழகன், இராஜகோபால் ஆகியோர் நம்ம பள்ளி திட்டத்தின்படி செப்பனிட்ட செய்தியறிந்து முதல்வராக மட்டுமல்ல, திருவாரூர்க்காரனாகவும் உள்ளம் நெகிழ்ந்து போனேன்.
பள்ளியைச் செப்பனிட்டதோடு, தனசேகரி அம்மாள் அறிவரங்கம் என மறைந்த தங்களது தாயின் பெயரை அரசின் அனுமதியோடு அப்பள்ளிக் கட்டடத்திற்குச் சூட்டிய அந்தச் சகோதரர்கள், அந்த ஊரின் பெயர்போல் பெருகவாழ்வார்கள்” என்று கூறியுள்ளார்.


