’’2024 பாராளுமன்றத் தேர்தலில், கோவை பாஜகவின் கோட்டை என்று நிரூபிக்கும். கோவை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றியடையச் செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பி, நமது பிரதமர் மோடி கரத்தை வலுப்படுத்த வேண்டும்’’ என்று கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவையில் என் மண் என் மக்கள் பயணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
’’என் மண் என் மக்கள் பயணம், பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் இதயத்துக்கு நெருக்கமான கோவை தெற்கு தொகுதியில் சிறப்புடன் நடைபெற்றது. கோவை ‘பாஜகவின் கோட்டை’ என்பதை, மீண்டும் ஒருமுறை பெருந்திரளெனக் கூடி, ஐந்து மணி நேரம் 15 நிமிடம் உடன் நடந்து, கோவை சகோதர சகோதரிகள் நிரூபித்திருப்பதில் மகிழ்ச்சி.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், சினிமா மோகத்தைப் புறக்கணித்து, கோவை தேசியத்தின் பக்கம், ஆன்மீகத்தின் பக்கம், உண்மையின் பக்கம் என்று, சகோதரி வானதி சீனிவாசனை வெற்றிபெறச் செய்தது, பாஜகவின் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி. தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் உத்வேகம் அளித்த வெற்றி.
எந்த அரசு, எந்தக் கட்சி, எந்தத் தலைவர் தமிழகத்துக்காக, மக்களுக்காக இருக்கிறார்கள் என்பதில் கோவை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். குட்டி இந்தியா என்று கோவையை அழைக்கலாம். இங்கு ராஜஸ்தான், பெங்காலி, மராட்டி, இஸ்லாம் என அனைத்து சமூக மக்களும் சகோதரர்களாக அன்புடன் வசிப்பது இந்தியாவைப் பிரதிபலிக்கிறது. திமுகவைப் போல அல்லாமல், அனைவரும் வேண்டும், அனைவரும் இணைந்து வலிமையான தமிழகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பதே பாஜக மற்றும் பாரதப் பிரதமர் மோடி விருப்பம்.
நாட்டின் 50 சதவீத வெட் கிரைண்டர் உற்பத்தி, தமிழகத்தின் 80% இருசக்கர வாகனங்களின் உதிரிப் பாகங்கள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறுகுறு நிறுவனங்கள் என, கோவை தமிழகத்தின் தொழில்முகமாக இருக்கிறது. பாரதத்தின் பெருமையான சந்திராயன் 3 திட்டத்தின் முக்கியமான பகுதிகள், கோவையில் சக்ரதாரா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்தது. கோவை தெற்கு தொகுதியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி மற்றும் வானதி சீனிவாசன், என டபுள் இஞ்சின் அரசு நடக்கிறது. பிரதமரின் முத்ரா திட்டத்தின் மூலம், கோவை, திருப்பூர் தொழிற்சாலைகள் உத்வேகத்துடன் இயங்கி வருகின்றன. வானதி சீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர் என்பதைத் தாண்டி, உண்மையான சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.
அமுதம் திட்டத்தின் பால் ஊட்டும் தாய்மார்களுக்கான குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை இலவச பசும்பால் திட்டம் வீடு தேடி வருகிறது. இளம்பெண்களுக்கு சானிட்டரி நாப்கின், ஞாயிறுதோறும் இலவச மருத்துவ முகாம், பெண் குழந்தைகளுக்கு மோடியின் மகள் திட்டத்தின் மூலம் பத்தாயிரம் ரூபாய், நலிவடைந்த ஆலயங்களை மேம்படுத்தும் திட்டம், பெண்களுக்கு சுயம் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து திட்டம், ஏடிஎம் மெஷினில் சுத்தமான குடிநீர் வழங்குவது என ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் பாஜக ஆட்சி வரும்போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், வானதி சீனிவாசனைப் போல மக்கள் நலன் சார்ந்து செயல்படுவார்கள்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், காங்கிரஸில் சேர்வதா திமுகவில் சேர்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறார். கமல் முகமூடியை கிழித்து கோவை மக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட கோவை கம்யூனிஸ்ட் எம்பியை யாருமே பார்த்ததில்லை. என் மண் என் மக்கள் பயணம் கோவை வருகிறது என்பது தெரிந்ததும்தான் அவர் தொகுதிக்கே வருகிறார். கோவை, திருப்பூர் போன்ற வளர்ச்சி நகரங்களுக்கு கம்யூனிஸ்ட் எம்பி பொருத்தமே இல்லை. பொதுமக்கள், வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், கம்யூனிஸ்டுகளை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைப்பார்கள்.
மகளிர் உரிமைத் தொகை என்பது குடும்பத் தலைவிகள் அனைவருக்குமான உரிமை. சிலருக்கு மட்டுமே கொடுக்க அது உதவித் தொகை அல்ல. தமிழகத்தில் 2 கோடியே 27 லட்சம் குடும்பத் தலைவிகளில் 60 சதவிகித குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றியிருக்கிறார்கள். உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்கிறார். அவரது தந்தை, நிறைந்த அமாவாசை அன்று, மகளிர் உரிமைத் தொகை வழங்குகிறார். இதுதான் இவர்கள் இரட்டை வேடம்.
பாரதப் பிரதமர் மோடி, மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு, எப்போது, எப்படி கொடுக்கப்படவிருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த மசோதா தாக்கலின் போது, பாராளுமன்றத்தில், அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த நம் நாட்டின் சாதனைப் பெண்கள் பாராளுமன்றத்துக்குச் சென்றார்கள்.
இன்று நமது பயணத்துக்கு, குடும்பத் தலைவிகள், தாய்மார்கள், சகோதரிகள் வீதிக்கு வந்து, சனாதன தர்மத்தின் மூலம் நமக்கு ஆசி வழங்குகிறார்கள். இந்து மதத்தை இழிவு படுத்தினால், மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற செய்தியினை திமுகவுக்குச் சொல்லியிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மக்கள் கோபத்தைத் தணிக்க, முதலமைச்சர் ஸ்டாலின், வரும் அக்டோபர் மாதம் கையில் வேல் எடுப்பார். பவரும் 2024 ஆம் ஆண்டு, பாராளுமன்றத் தேர்தல் மட்டும் வருமா அல்லது சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து இரண்டு தேர்தல்கள் வருமா என்பது தெரியாது. ஆனால் எத்தனை தேர்தல் வந்தாலும், மக்கள் தாமரையில் வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கை கிடைத்திருக்கிறது. நமது பாரதப் பிரதமர் மோடி, நமக்காக உழைக்கும் மனிதர்.
குஜராத் முதல்வராக 14 ஆண்டுகள், பாரதத்தின் பிரதமராக 9 ஆண்டுகள் என 23 ஆண்டுகளாக, நாடு வளர வேண்டும் என்ற ஆசையில் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு, அவர் தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வரும்போது, உலகப் பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்தில் இருந்த நமது நாடு, இன்று 6 இடங்கள் முன்னேறி, உலக அளவில் 5 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில், உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். வரும் 2047 ஆம் ஆண்டுக்குள், உலகத்தின் முதன்மையான நாடாக பாரதம் மாற வேண்டும் என்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர். உலக நாடுகள் பலவற்றுக்கும் நமது நாட்டின் மீது பொறாமை வந்திருக்கிறது.
142 கோடி மக்கள் கொண்ட நாட்டில், 70% மக்கள் ஏற்றுக் கொண்ட தலைவராக மோடி அவர்கள் இருப்பதால், அவர் மீது பொய்ச் செய்திகள் பரப்புகிறார்கள். அதனை நாம் உடைக்க வேண்டும். தமிழகம், 2019 தேர்தலில் செய்த தவறை செய்யக் கூடாது. திமுக செய்த தவறுகளுக்கு எல்லாம் பாஜக மீது குற்றம் சொல்வார்கள். இதனை உடைக்க, ஒவ்வொருவரும் நரேந்திர மோடியாக வேலை செய்ய வேண்டும். பொய்களைக் கடந்து போகக் கூடாது. உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும். கோவையின் பாராளுமன்ற உறுப்பினராக பாஜக கட்சி வரும்போது, உண்மையான வளர்ச்சியை கோவை மக்கள் உணர்வார்கள். வளர்ச்சியின் பக்கம் இருக்கும் கோவை மக்கள் பாஜக பக்கம் இருக்க வேண்டும்.
நமது பிரதமர் மீது பொய் ஊழல் குற்றச்சாட்டு வைத்த காங்கிரஸ் கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது. தற்போது முதலமைச்சர் ஸ்டாலின், நமது பிரதமர் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். நிச்சயம் திமுக தோல்வி அடையும். நமது பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கோவை மாநகர பாஜக மாவட்டத் தலைவரும் தொண்டர்களும் இந்த என் மண் என் மக்கள் பயணத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மக்கள் எழுச்சியை உணர முடிகிறது. தொண்டர்களின் அன்பை உணர முடிகிறது. கோவை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், கோவை பாஜகவின் கோட்டை என்று நிரூபிக்கும். கோவை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றியடையச் செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பி, நமது பிரதமர் மோடி கரத்தை வலுப்படுத்த வேண்டும்.