”2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிப்படி, மாணவர்களின் கல்விக் கடனை உடனடியாக ரத்து செய்திட நடவடிக்கை எடுத்து, அவர்களின் துயர் துடைக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழகக் கல்லூரிகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை திரும்பச் செலுத்த இயலாவிட்டால், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடனை அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும்’ என தேர்தல் வாக்குறுதியளித்த, திமுக அரசின் முதலமைச்சரே மாணவர்களின் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த ஏதேனும் முயற்சிகளை செய்தீர்களா?
நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் தான் என்பதை அறிந்திருந்தும், அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், நீட் விவகாரத்தில் அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது தொடங்கி, கல்விக் கடன் ரத்து செய்வது வரை, மாணவர்களை ஏமாற்றி அவர்களின் எதிர்காலத்தை வஞ்சிக்கிறது திமுக அரசு.
2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிப்படி, மாணவர்களின் கல்விக் கடனை உடனடியாக ரத்து செய்திட நடவடிக்கை எடுத்து, அவர்களின் துயர் துடைக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்.
நூறு சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், எந்தெந்த தேதிகளில், எந்தெந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன என்ற விபரத்தை அறிக்கை மூலம் திமுக அரசின் முதலமைச்சர் அறிவிப்பாரா ? சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?

