கர்நாடக சட்டமன்ற தேர்தலில் சிவாஜி நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ரிஸ்வாந்த் ஹர்ஷத் அவர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று (6.5.2023) சனிக்கிழமை காலை 11 மணியளவில் வாக்கு சேகரித்தார்.
அவருடன் அகில இந்திய காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை பொதுச் செயலாளர் மோகன் நாயுடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்கள் ஆ. கோபண்ணா, பொன். கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்டத் தலைவர்கள் செங்கம்குமார், எம்.எஸ். திரவியம், எஸ்.கே. அர்த்தனாரி, செயலாளர்கள் அக்ராவரம் பாஸ்கர், ரஞ்சித்குமார் மற்றும் ஓ.வி. ரஞ்சித்குமார் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
தேர்தல் பரப்புரையில் தலைவர் கே.எஸ்.அழகிரி, “கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்படப்போகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. வின் வரலாறே நச்சுக் கருத்துகளை பரப்பி, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, பயங்கரவாதத்திற்குத் துணைபோவது என்பது கடந்தகால வரலாறு. எனவே, பயங்கரவாதத்தை ஆதரித்து ஊக்கப்படுத்துகிற பிரதமர் மோடி காங்கிரஸின் மீது கூறுகிற குற்றச்சாட்டை மதநல்லிணக்கத்தில் நம்பிக்கை உள்ள கர்நாடக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடியின் அவதூறுப் பிரச்சாரத்திற்கு உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்பது உறுதி.”” என்று வலியுறுத்தினார்.

