Home செய்திகள் ’’கர்நாடகாவைப் போல பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் ஜெயிப்பது உறுதி..!’ கே.எஸ்.அழகிரி உற்சாக பேட்டி

’’கர்நாடகாவைப் போல பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் ஜெயிப்பது உறுதி..!’ கே.எஸ்.அழகிரி உற்சாக பேட்டி

0
’’கர்நாடகாவைப் போல பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் ஜெயிப்பது உறுதி..!’ கே.எஸ்.அழகிரி உற்சாக பேட்டி

சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. தலைவர்கள், தொண்டர்கள் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம். இன்று காலையிலேயே சத்தியமூர்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றி அறிவிப்புகள் வரவர காங்கிரசார் துள்ளிக் குதித்தனர். பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கினார்கள்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

கர்நாடகத்தில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும் என்பதை தேர்தல் பிரசாரத்தின் போதே உணர்ந்தோம். ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்துள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அல்ல. மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கத்தான் ராகுல் காந்தி தன்னை வருத்தி அந்த நடைபயணத்தை மேற்கொண்டார். அதன் பலன்தான் இப்போது கர்நாடகத்தில் கிடைத்திருக்கும் வெற்றி.

பாஜக மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டார்கள். கடந்த 7, 8 ஆண்டுகளில் வளர்ச்சியை நோக்கிய அரசியலை அவர்கள் முன்னெடுக்கவில்லை. எதிர்மறையான அரசியலை, சின்ன சின்ன பிளவுகளை மையப்படுத்தி அரசியல் செய்தார்கள். அது ஆரம்பத்தில் வெற்றியை கொடுத்தாலும் காலப்போக்கில் வெற்றி பெறாது என்பதை ராகுல் உணர்ந்தார்.

அதனால்தான் காந்திய வழியில் அதிகாரத்தை நோக்கிய அரசியல் இல்லாமல் மக்களிடையே ஒற்றுமையை நோக்கிய அரசியலை கையில் எடுத்தார். அதன் முதல் வெற்றிதான் இது. நாட்டில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி எல்லாவற்றிலும் மோடி அரசு தோற்று விட்டது. விலைவாசி உயர்வும், வரி விதிப்பும் மக்களை வாட்டி வதைக்கிறது.

இந்த நெருக்கடியில் இருந்து நாட்டையும், மக்களையும் ராகுலால்தான் காப்பாற்ற முடியும் என்று மக்கள் உணர்ந்து விட்டார்கள். இந்த வெற்றிக்கு மல்லிகார்ஜூன கார்கே மிகப்பெரிய தூணாக விளங்கினார். ராகுலின் இளமை வேகம். கார்கேவின் நீண்ட அரசியல் அனுபவம் ஆகிய இரண்டும் வெற்றிக்கு முக்கிய காரணம். பாஜக-வை மக்கள் நிராகரிக்க தொடங்கி விட்டார்கள். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்றமும் காங்கிரஸ் வசம் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here