ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு அனுப்பும் வீரர்களை கடலிலிருந்து மீட்கும் குழுவில் முதல் குழுவினர் கொச்சியில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி நிலையத்தில் தங்களது முதற்கட்டப் பயிற்சியை முடித்தனர்.
அதிநவீன வசதிகளைப் பயன்படுத்தி, இந்திய கடற்படை நீச்சல் வீரர்கள் மற்றும் கடற்படை கமாண்டோக்கள் அடங்கிய குழு பல்வேறு கடற்பகுதியில் மீட்புப் பயிற்சியை மேற்கொண்டது.
இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில், விண்கல கேப்சூலின் செயல்பாடு, மருத்துவ உதவி தேவைப்படும் போது செய்ய வேண்டியவை மற்றும் பல்வேறு விண்கலங்கள், அவற்றின் மீட்பு உபகரணங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்திய கடற்படை மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கிய வழிமுறைகள் இந்த பயிற்சியில் சரிபார்க்கப்பட்டது. பயிற்சியின் இறுதி நாளில், இஸ்ரோவின் டாக்டர் மோகன் பயிற்சிக் குழுவினருடன் உரையாடினார். வரும் மாதங்களில் இஸ்ரோவால் திட்டமிடப்பட்ட ககன்யான் சோதனையின்போது விண்வெளி வீரர்களை மீட்டெடுப்பதில் இந்த பயிற்சி பெற்ற வீரர்கள் ஈடுபடுவர்.