பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவை நேற்று வெளியிட்ட பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
‘’அரசாங்கத்தின் சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அடங்கிய உயர்கல்வி வழிகாட்டி குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு உயர்கல்விக்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும் மாணவர்கள், பெற்றோருக்கு வழங்கும். கிராமப்புற பெற்றோருக்கு இதுபோன்ற வழிகாட்டும் நிகழ்வு பிரயோஜனமாக இருக்கும்.
வருகிற 17-ந்தேதி பிளஸ்-1 மாணவர்களுக்கும், 19-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கும் தேர்வு முடிவை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டு இருக்கிறோம். இதனை ஒரே நாளில், அதாவது 19-ந்தேதி வெளியிடலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களின் விவரங்களை நாம் சொல்வது கிடையாது. தனியார் பள்ளி மாணவர்களின் புகைப்படத்துடன் அதிக மதிப்பெண் பெற்றவர் என்று வைப்பதில் நாங்கள் தலையிடுவது கிடையாது.
ஆனால் அந்த மாணவரின் பெற்றோர் அனுமதியுடன் அதை வைப்பது நல்லது. தனியார் பள்ளிகளை சில விதிகளின் கீழ்தான் கட்டுப்படுத்த முடியும். ஜனநாயக நாட்டில் இந்த பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று யாரையும் வற்புறுத்த முடியாது. அரசு பள்ளிகளை தேடி மாணவர்கள் வர வேண்டும் என்று சொன்னால், அதற்கேற்றாற்போல், நாங்கள் உள்கட்டமைப்பு வசதிகள், பயிற்சிகள், தேர்ச்சி சதவீதத்தை அளிக்க வேண்டும்.
அந்த வகையில் நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக பணியாற்றி வருகிறோம். இதன் பயனாக நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் சேருவதற்கு 70 ஆயிரம் விண்ணப்பங்களை பெற்றோர் வாங்கி சென்றுள்ளனர். இது பெரிய எண்ணிக்கை. இந்த விதத்தில்தான் நாங்கள் ‘மார்க்கெட்டிங்’ செய்கிறோம்.
எவ்வளவு பெரிய ஆட்களின் பிள்ளைகளையும் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில்தான் நாங்கள் பணிபுரிகிறோம். அதுதான் எங்கள் சாதனையாகவும் பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.