கதிரவன், மாலைமுரசு நாளிதழ்களின் முன்னாள் ஆசிரியர் கே.கே.ஆர். அதித்தன் என்று அழைக்கப்படும் கே.குமார் ராமசாமி ஆதித்தன், தனது முகநூல் பக்கத்தில், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவு குறித்து ஓர் கட்டுரை எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
கேரளாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி (ஜுலை 18) மறைந்து விட்டார். கேரளா அரசியல்வாதிகள் பொதுவாகவே எளிமையாக இருப்பார்கள். அரசியல்வாதி என்ற பந்தா இருக்காது. பாமரர்களும் அவர்களை எளிதில் அணுகலாம். அந்த வகையில் உம்மன் சாண்டியும் அப்படி இருந்தவர்தான்.
அவர் முதல்வராக இருக்கும் போது தான் தனது அறையை கண்ணாடி அறை போல் மாற்றினார். தன்னை யார் பார்க்க வருகிறார்கள்; பேசுகிறார்கள் என்பதை வெளியாட்ககள் பார்க்கும் வகையில் முழு நேரமும் நேரலையாகவே காண்பித்தார்.
உள்ளே என்ன பேசுகிறார்கள் என்று வெளியே கேட்காவிட்டாலும், யார் வருகிறார்கள்; போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் வகையில் தன்னுடன் நடக்கும் சந்திப்பை வெளிப்படையாக காண ஏற்பாடு செய்தார்.
கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் அடிக்கடி மோதல் ஏற்படும். அணையின் உயரத்தை அதிகரிக்க கூடாது. தண்ணீர் மட்டத்தை அதிகரிக்க கூடாது என்று போர்க்கொடி தூக்குவார்கள் .
காவிரி பிரச்சனை போல இதுவும் ஒரு தீராத தலைவலியாகவே இருந்து வருகிறது.
காரணம் அவர்கள் மாநிலத்து தண்ணீரை திருவிதாங்கூர் மன்னர் காலத்து ஒப்பந்தத்தை பயன்படுத்தி நாம் அணைகட்டி பயன்படுத்தி வருகிறோம். அவர்கள் தண்ணீராக இருந்தாலும் இதன் மூலம் தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் நெல், பயறுகள் மற்றும் ஏராளமான உணவுப் பொருட்கள் கேரளாவுக்கு தான் போகின்றன.
இப்போது விஷயத்திற்கு வருவோம்;
பல ஆண்டுகளுக்கு முன்பு முல்லை பெரியாறு இருக்கும் பகுதியில் உள்ள சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் வர இருந்தது. உடனே காங்கிரஸ்காரர்கள் அதை ஒரு பெரிய பிரச்சனையாக எழுப்பினார்கள். மூச்சுக்கு மூச்சு முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவுக்கு ஆபத்து என்று உம்மன் சாண்டியும் குரல் கொடுக்க ஆரம்பித்தார். இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது.
அந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகை ஆசிரியர்கள் 10 பேரை விமான கட்டணம் கொடுத்து திருவனந்தபுரத்திற்கு அழைத்து அரசு விருந்தினராக மதித்து தங்க வைத்தார். அங்குள்ள அதிகாரிகளை வைத்துக்கொண்டு பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் முதல்வருக்கு அருகே தலைமைச் செயலாளர் அந்தப் பகுதியின் வருவாய் அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி போன்றவர்கள் முதல்வருடன் நெருக்கமாக அமர்ந்து இருந்தனர்.
எதிர்ப்பக்கம் தமிழக பத்திரிகை ஆசிரியர்கள். அப்போது இந்த அணையை உடைத்து விட்டு கேரளா சார்பில் அவர்கள் பகுதியில் அணை கட்டி கொள்வதாக கூறினார் முதலவர் உம்மன் சாண்டி. அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அவர் திரும்பத் திரும்ப இந்த அணையால் கேரள மக்களுக்கு ஆபத்து. எனவே, அணையை உடைத்து விட்டு புதிய அணையை கேரள பகுதியில் நாங்களே கட்டிக் கொள்கிறோம். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவோம் என்று கூறிக்கொண்டே இருந்தார். அப்போது நான், ‘’உங்களுக்கு அணை பலவீனமானது என்பதால் தானே புதிய அணை கட்டுவதாக கூறுகிறீர்கள். ஏன் இதை தமிழக அரசே எங்கள் பகுதியில் கட்டிக்கொள்ள அனுமதிப்பீர்களா..?’’ என்று கேட்டேன். அதுவும் பழைய ஒப்பந்த சரத்துகளின்படியே இந்த அணை கட்ட வேண்டும் என்றும் கூறினேன்.
அப்போது அவர் அருகில் இருந்த கூடுதல் தலைமைச் செயலாளர், கொள்கை அளவில் இதை வரவேற்கலாம் என்று முதல்வர் முன்பே தைரியமாக கூறினார். உம்மன் சாண்டியோ என் கேள்விக்கு பதில் கூறாமல் வேறு பக்கம் முகத்தைதை திருப்பிக் கொண்டார். அந்த சூழ்நிலையிலும் சந்திப்பு முடிந்த பிறகு தமிழக பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம், ‘’ஏன் நாம் கேரளா கூறியபடியே அவர்களை அணைக்கட்ட அனுமதித்தால் தான் என்ன..?’’ என்று கேட்டார். நான், ‘’ஏற்கனவே காவிரியில் அவர்கள் பகுதியில் அணை இருப்பதால் படாத பாடு பட்டு கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒரு பிரச்சனை தேவையா..?’’ என்று வினா எழுப்பினேன். அவர் பதில் கூற வில்லை.