’’புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. முற்றிலும் ஜனநாயக விரோதமாக நடைபெற்ற இந்த விழாவில், நாடாளுமன்றத்தின் தலை வரான ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டது மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பிதாமகன் அண்ணல் அம்பேத்கரும் புறக்கணிக்கப்பட்டார்’’ என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார்.
தீக்கதிருக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி, அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணாக தானே திறந்து வைத்துள்ளார். இந்த விழா, ஏராளமான சர்ச்சைகளுக்கு இடையே, 20 எதிர்க் கட்சிகளின் புறக்கணிப்புக்கு இடையே நடந்து முடிந்துள்ளது. நாட்டின் தலைவரை வெளியில் நிறுத்தி, மடங்களின் தலை வர்களை உள்ளே அமர்த்தி விழா நடத்தி யிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி யிருக்கிறது.
‘ஜனாதிபதி வெளியே, மடாதி பதிகள் உள்ளே’ என்று, மோடி அரசின் செயல் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல, மக்களாட்சியில் மன்னராட்சியின் விழுமியங்களை முன்னிறுத்தும் நோக்கத்துடன் செங்கோல் என்ற பெயரில் மடாதிபதிகளிடமிருந்து பெற்று அதை நாடாளுமன்றத்தில் நிறுவியிருக் கிறார் மோடி. செங்கோல் என்பது நீதியும் நேர்மையும் தவறாத ஆட்சி என்றே உண்மையில் பொருள்படும்; ஆனால் மோடி உண்மையில் நடத்திக்கொண்டிருப்பது கொடுங்கோல் ஆட்சியே ஆகும்.
நாடாளுமன்ற புதிய கட்டடத்தில், அரசிய லமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் படத்தை மைய மாக வைத்து அதற்கு மரியாதை செலுத்தி யிருக்க வேண்டும். ஆனால் அம்பேத்கரைப் புறக்கணித்த பிரதமர் நரேந்திர மோடி, தேச விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த சாவர்க்கரின் உருவப்படத்தை நாடாளுமன்றத்தில் வைத்து வழிபாடு செய்கிறார். அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் மதரீதியான சிந்தனைகளையும் புராணங்களையும் மையமாகக் கொண்டு வரையப்பட்டுள்ளன. இந்திய மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்பதன் அடையாளங்களை புறந்தள்ளி, பாற்கடல் உள்ளிட்ட ஓவியங்களை இடம்பெறச் செய்திருப்பது முற்றிலும் மோசமான செயல்.
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பல அம்சங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்றாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வருகிற நாட்களில் அதிகரிக்கப்பட உள்ளது என்றும் எனவே புதிய நாடாளுமன்றம் உடனடியாக கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது என்றும் அவர் பேசினார். இந்தப் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண் ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும் அதற்காகவே புதிய நாடாளுமன்றம் கட்டி னோம் என்றும் நாடாளுமன்றம் உட்பட எங்குமே மோடி அரசு அதிகாரப்பூர்வமாக விவாதிக்கவில்லை. தற்போது நாடாளுமன்ற மக்களவை யில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான விபரங்கள் முழுமையாக வெளியானால் அநேகமாக உலகிலே யே மக்கள்தொகை அதிகமாக உள்ள முதல் நாடாக இந்தியா இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று கருதப்படுகிறது. எனவே மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் எந்தவிதமான தரவுகளும் இல்லாமல், எந்த அடிப்படையும் இல்லாமல், எந்த விவாதமும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது என்று பிரதமர் மோடி மிக முக்கியமான விழாவில், முற்றிலும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள விழாவில் அறிவிக்கிறார் என்றால் அதன் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதிகரிக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் தற்போதைய எண்ணிக்கையைவிட மிகக்கூடுதலாக, 1280 உறுப்பினர்கள் என்ற அளவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
கடந்த காலங்களில் மக்கள் தொகை விகிதத்திற்கேற்ப, அரசியல் சாசன விதிகளின்படி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 1952ல் மக்களவையில் 497 உறுப்பினர்கள் இருந்தார்கள். அது படிப்படியாக அதி கரிக்கப்பட்டு 1973-ல் 525 ஆக மாறியது. பின்னர் 543 ஆனது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் மொத்தமாக 22 இடங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கும்; அதேவேளையில் தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தமாக 17 இடங்கள் குறைந்திருக்கும். அரசியல் சாசன விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததால், இந்த மாற்றம் இல்லாமல் அதே எண்ணிக்கை நீடிக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு உட்பட தேசிய குடும்ப நலத்திட்டங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமலாக்கப்பட்டன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்தக் காலக் கட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்தது; அல்லது அதிகரிக்கவில்லை. இதற்கு காரணம், தென்னிந்திய மாநிலங்களில் ஓரளவிற்கு கல்வி, சுகாதார திட்டங்கள் சிறப்பான முறையில் அமலாகியுள்ளன.
குடும்பநலம், சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்களில் மக்களிடை யே விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது. இது மக்கள்தொகை வளர்ச்சிவிகிதத்திலும் பிரதிபலித்திருக்கிறது என்றால் மிகையல்ல. ஆனால் பல வடமாநிலங்களில் இந்தத் திட்டங்கள் முறையாக அமலாகவில்லை. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக வாழ்வியல் குறியீடுகளில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இது அங்கு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகரிக்கவும் காரணமாக உள்ளது. எனவே, மக்கள்தொகை எண்ணிக்கை யில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பதில், தென்மாநிலங்களில் ஏற்பட்ட மக்கள்தொகை குறைவுக்கும் வடமாநிலங்களில் ஏற்பட்ட அதிகரிப்புக்கும் இடையிலான இடைவெளி முக்கியப் பங்கு வகிக்கும் என்றால் அது மோசமானதாகவே இருக்கும்.
அதுமட்டுமல்ல, அரசியல் ரீதியாக தென் மாநிலங்களில் ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கும் அதன் இந்துத்துவா சித்தாந்தத்திற்கும் வலுவான பிடிமானம் இல்லை. மாறாக குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் தற்போதைய தனது செல்வாக்கு தளங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும், அந்த மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடங்களை அதிகரிக்க வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் நாடாளுமன்றத்தில் அதிகமான எண்ணிக்கையை தொடர்ந்து பெறவும் பாஜக மேற்கொள்ளும் திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியாகவே இது தெரிகிறது.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது சாதாரண விசயமல்ல. இதை முறையாகவும் அறிவியல் பூர்வமாகவும் விவாதித்தே மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம், அனைத்துக் கட்சிகள், நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் விரிவாக விவாதித்தே இதற்கான வரையறைகளை உருவாக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் விசயத்தில், சமூக வாழ்வியல் குறியீடுகளில் மேம்பட்ட இடத்தில் உள்ள, மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் குறைந்துள்ள மாநிலங்கள் தண்டிக்கப்படுவதாக ஆகிவிடக் கூடாது.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறி னார்.