உண்மையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எப்படி நடத்தப்படுகிறது? இதற்கு ஏன் இத்தனை ஏன் முக்கியத்துவம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் என்பது உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தைப்போல. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பை இறுதி ஆட்டம். 2002 முதல் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ஆண்டுதோறும் கோப்பை வழங்கி வந்தது ஐசிசி.
2019 முதல் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் 9 அணிகள் விளையாடும் டெஸ்ட் ஆட்டங்கள் கணக்கில் கொள்ளப்படும். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் புள்ளிகள் மதிப்பீடு உண்டு. இறுதியில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நடைபெறும்.
டெஸ்ட் கிரிக்கெட் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வம் மந்தமாகி வருவதை உணர்ந்த ஐசிசி, இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தியது.
“ஐபிஎல்.. ஐபிஎல்.. என ஒலித்துக்கொண்டிருந்த முழக்கங்கள், தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. என ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஐபிஎல் அளவுக்குப் பெரிய ஆரவாரம் இல்லை என்ற நிதர்சனத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. ஐபிஎல் போட்டியை மட்டும் பார்க்கும் ரசிகர்களைப் பார்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி என்ன தெரியும் என்பது போன்ற மீம்கள் அதிகளவில் பரவி வருகின்றன. இவர்களும் இந்தியா நீல நிற சீருடையில் தானே விளையாடுகிறது என பதிலுக்கு கிண்டலாக மீம்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.”
இது முதன்முறையாக நடக்கிறதா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நடைபெறுவது இது இரண்டாவது முறை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் இறுதி ஆட்டம் 2021-ல் நடைபெற்றது. முந்தைய சுற்றுகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்த இந்தியா, நியூசிலாந்து அணிகள் சௌதாம்ப்டனில் மோதின. நியூசிலாந்து வென்றது.

இந்த முறை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதி ஆட்டத்தில் விளையாடுவது எதன் அடிப்படையில்?
2021-23 காலகட்டத்தில் 19 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி 11 வெற்றிகளைப் பெற்று 152 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 18 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 10 வெற்றிகளைப் பெற்று 127 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இறுதி ஆட்டம் எந்த பந்தில் விளையாடப்படுகிறது?
இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் முதன்மையாகப் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்துதான் இறுதி ஆட்டத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
ஆட்டம் சமனில் முடிந்தாலோ அல்லது டிரா ஆனாலோ யாருக்குக் கோப்பை?
இரண்டில் எது நடந்தாலும் 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பகிர்ந்துகொள்ளும்.
லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடாமல் ஓவலில் விளையாடுவது ஏன்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை ஹோம் ஆஃப் கிரிக்கெட் என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாட வேண்டும் என்பதுதான் திட்டம்.
கடந்த இறுதி ஆட்டம் கொரோனா தொற்று காரணமாக சௌதாம்ப்டனுக்கு மாற்றப்பட்டது.
லார்ட்ஸ் மைதானத்தில் சில ஒப்பந்தங்கள் இருக்கின்றன. விளம்பரதாரர்கள் விஷயத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் ஒரு இடத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்பதால், ஓவலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஓவலின் சிறப்பம்சம்:
ஓவல் மைதானம் 1880-ல் உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று ஓவல் மைதானத்தில் ஒரு டெஸ்ட் ஆட்டம்கூட ஜூன் மாதம் நடைபெற்றதில்லை. 1982-ல் ஜூலை 8-ம் தேதி இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதின. இதில் இயான் போத்தம் இரட்டை சதம் அடிக்க, இங்கிலாந்து ஆட்டத்தை டிரா செய்தது. ஜூலை 8-க்கு முன்பு ஓவலில் எந்தவொரு காலத்திலும் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றதே இல்லை.
கூடுதல் நாள் உள்ளதா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு கூடுதல் நாள் வழங்கப்பட்டுள்ளது. ஆட்டம் நடைபெறும் ஐந்து நாள்களில் வானிலை காரணமாக ஆட்டத்தில் இடையூறு ஏற்பட்டால், குறிப்பிட்ட ஐந்து நாள்களுக்குள் பாதிக்கப்பட்ட ஓவர்களை வீச முடியவில்லையெனில், ஐந்து நாள்களில் முடிவு எட்டப்படவில்லையெனில் ஆறாவது நாளில் ஆட்டம் நடைபெறும்.
கடந்த இறுதி ஆட்டத்தின் முதல் முழுக்க மழையால் பாதிக்கப்பட்டது. இதன்பிறகு, ஆறாவது நாள் வரை ஆட்டம் நீட்டிக்கப்பட்டது.
வானிலை எப்படி இருக்கிறது..?
லண்டனில் ஐந்து நாள்களில் நான்கு நாள்களுக்கு வெயில்தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாள் பிற்பகலில் மழையை எதிர்பார்க்கலாம். கூடுதல் நாளில் ஆட்டம் நடைபெற்றால், அன்றைய தினத்தில் மழை இருக்காது எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பரிசுத்தொகை எவ்வளவு?
வெற்றி பெறும் அணிக்குக் கோப்பையுடன் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படவுள்ளது. தோல்வியடையும் அணி 8 லட்சம் அமெரிக்க டாலரைப் பெறவுள்ளது.
ஜாம்பவான்களின் கருத்து:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வீரர்கள் இடையிலும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளதாக பாகிஸ்தான் ஜாம்பவான் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறுகிறார்.
அவர் கூறுகையில், “மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு ஆட்டங்களில் முடிவு வந்துவிட்டால், மூன்றாவது ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லாமல் வீரர்கள் சோர்வடைந்துவிடுகிறார்கள். இதுவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதி ஆட்டத்துக்குள் நுழைய ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம் என்பதால் வீரர்கள் உற்சாகம் பெறுகிறார்கள்.”
ராஸ் டெய்லர் பேசுகையில், “2019 உலகக் கோப்பையில் இறுதி ஆட்டத்தில் நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டபோது, இதுவே எனது கடைசி உலகக் கோப்பை. அடுத்த உலகக் கோப்பை நம்மால் விளையாட முடியாது என நினைத்தேன். எனவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தோன்றியது.” என்றார் அவர். 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை நியூசிலாந்து வென்றபோது, வெற்றிக்கான கடைசி ரன்னை அடித்தவர் ராஸ் டெய்லர்.

