தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் வரும் 7-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்த ஆண்டு முழுவதும் பிறந்தநாள் விழா பல்வேறு தலைப்புகளில் நலவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இரு படங்களையும் வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:
தமிழ்மொழி வளர்ச்சி குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்குடன் மூன்றாவது மொழிப்போர் நடத்துவதென நான் நிறுவிய தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தீர்மானம் செய்யப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக 26.03.2005 அன்று திருச்சி பொன்மலைத் திடலில் மாநாடு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

அந்த மாநாட்டுக்காக 22.03.2005 அன்று சென்னையிலிருந்து எனது தலைமையில் திருச்சிக்கு தமிழ்ப் பாதுகாப்பு ஊர்திப் பயணம் புறப்பட்டது. எனது பயணத்தை தொடங்கி வைப்பதற்காக பூந்தமல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனது நண்பரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சிக்கு வந்த அவரை நான் கைப்பிடித்து அழைத்து வந்த காட்சி இது. கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்கியுள்ள நேரத்தில் இதை பகிர்வதில் நான் மகிழ்கிறேன்.
இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

