’’உலக அஞ்சல் தினத்தில், ஒரு கடிதம் எழுதுவோமே! அதில் நம் உணர்வை அனுப்புவோமே..!’’ என்று உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கடிதம் ஆர்வலரும் சேலம் மாநகராட்சி 34 வது கோட்டம் கவுன்சிலருமான ஈசன் இளங்கோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
“அக்டோபர் 9 உலக அஞ்சல் தின வாழ்த்துக்கள்”
என் மதிப்பிற்குரிய உங்களுக்கு வணக்கம்.
உங்களிடம் பேச மனசு நினைக்கும் போதே, கைபேசியில் விரல் வேலை செய்கிறது, காது கூர்மையாகிறது, வாய் வார்தைகளை கொட்டி கொண்டாடுகின்றது.
ஆனால் கடிதம் எழுத நினைத்தால் மட்டும் உடனே ஏன் முடியவில்லை?.
பேச்சு காற்றில் கரைந்து விடும்
கையால் எழுதப்படும் கடிதங்கள் பதிவு செய்யப்படாத பத்திரங்கள்
அதில் உள்ள எழுத்துக்கள் அழியாது
அவை பேசும் உயிர்கள்.
ஒளிவு மறைவற்ற தகவல் பரிமாற்ற காலங்களில் இருந்த உண்மையும் நேர்மையும் ஒழுக்கமும் இன்றைய பாஸ்வோர்டு காலத்தில் உள்ளதா என்பது கேள்விக்குறியே?
ஒரு மொழியின் வளர்ச்சி என்பது அம் மொழி அதிகம் பேசப்படுவதோடு, அதிகம் எழுதப்படவும் வேண்டும்.
இன்று தொட்டதற்க்கு எல்லாம் தொலைபேசி. எடுத்ததற்கு எல்லாம் இ-மெயில். வாட்ஸ் ஆப் மட்டுமே வாழ்க்கை என இப்போதைய வாழ்வு சுருங்கி விட்டது.
இதனால், எண்ணங்களை எழுத்து வடிவாக்கி அன்பொழுக அடுத்தவர்களுக்கு கையினால் கடிதம் எழுதி அனுப்பும் வழக்கம் மிக, மிக குறைந்து விட்டது.
வளரும் தலைமுறையினர் கடிதங்கள் எழுதும் முறையை மறந்து விட கூடாது என்பதாலும், அஞ்சல் சேவையில் உலகில் முதலிடம் வகிக்கும் நம் நாட்டில், கடிதப் போக்குவரத்தில் மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதாலும், என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சிகள் வந்தாலும், எண்ண ஓட்டத்தை, உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும், அழுத்தமாகவும், பிரதிபலிக்கும் கையெழுத்து வடிவ தகவல் பரிமாற்றம் அழிந்து விடாமல், எழுத்து வழி தகவல் தொடர்புகள் மக்கள் மத்தியில் வளர வேண்டும், என்பதாலும், மலிவான விலையில் தகவல்களை தாங்கி செல்லும் தபால் அட்டைகள் மூலம் மக்கள் அதிகமாய் தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும்.
நம் நாட்டின் மிகப்பெரிய சேவை நிறுவனமான அஞ்சல் துறை செழித்தோங்க வேண்டும் என்பதாலும், கடித ஆர்வலராக உருவான எனது கடந்தகால சில கடித நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
எனது 12 வயது முதல், எல்லோரும் 50 காசுக்கு அச்சிட்ட பொங்கல் வாழ்த்துக்களை வாங்கி அனுப்பும் போதே நான் 15 காசுக்கு அஞ்சல் அட்டை வாங்கி அதில் கையால் படம் வரைந்தும் வாழ்த்து எழுதியும் அனுப்பினேன்.
இதனாலும் நண்பர்களுக்கு நான் எழுதி போடும் கடிதங்களாலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் எனக்கொரு நல்ல மதிப்பையும், பல பாராட்டுக்களையும் என் கடிதங்கள் எனக்கு பெற்று தந்தது.
இதனால் மேலும் உற்சாகமடைந்த நான் தொடர்ந்து, எனது எந்த ஒரு தகவல் பரிமாற்றங்களையும் கையெழுத்து வடிவத்தில், அஞ்சல் அட்டையிலோ அல்லது என் நோட்டு காகிதத்திலோ நடத்த ஆரம்பித்தேன்.
இப்படி பல அனுபவங்கள். கடிதம் என்பது ஒரு கருவி மட்டுமல்ல, அது ஒரு உணர்வு பகிர்வு ஆயுதம் என்பதை எனக்கு உணர்த்தியது. நான் எழுதிய பல கடிதங்கள் மூலமாக ஏற்பட்ட பல நல்ல விளைவுகள், என் வாழ்வில் தொடர்கிறது.
என் பள்ளி காலம் தொட்டு, ’வணிகம் – அரசியல்’ என என் வாழ்வின் அனைத்து தருணங்களிலும் என் கடிதங்கள் என் வெற்றிகளுக்கான இரகசியமாய் இன்று வரை பயணித்துக்கொண்டுதான் உள்ளது.
இந்த நிலையில் 2003 அக்டோபர் 9 ஆம் தேதி அன்று உலக தபால் தினத்தில் நான் கைப்பட எழுதிய பத்து ஆயிரம் அஞ்சல் அட்டைகளை ஒரே நேரத்தில் நான் அஞ்சல் செய்த போது கிடைத்த பெரும் வரவேற்ப்பு.
தொடர்ந்தது; அரசியல் விழிப்புணர்வு, சுற்றுச்சுழல் மேம்பாடுகள் குறித்து நான் எழுதி அனுப்பும் கடிதங்களுக்கு கிடைத்தது பெரும் பலன்கள். இதை தொடர்ந்து,
இது வரை முறியடிக்கப்படாத ஒரு உலக சாதனையாக 2007 டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியில் ஒரே நேரத்தில் கையால் எழுதப்பட்ட ஒரு இலட்சம் அஞ்சல் அட்டைகளை சேலத்தில் அஞ்சல் செய்தேன்.
ஆசிஸ்ட் உலக சாதனைகள் ஆராய்ச்சி நிறுவனம் என்னுடைய இந்த சாதனையை இது வரை யாரும் செய்திடாத உலக சாதனையாக அங்கீகரித்து எனக்கு சான்று வழங்கி உள்ளது.
இதை தொடர்ந்து பள்ளிகள் பலவற்றிற்கு சென்று கடிதங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வரும் எனக்கு 2019- உலக அஞ்சல் தினத்தில் இந்திய அஞ்சல் துறை எனது உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டு என்னை பாராட்டி விருது ஒன்றை வழங்கியது.
தொடர்ந்து; கடந்த ஆண்டு உலக அஞ்சல் தினத்தில் சேலம் மாநகரத்தில் நான் மாமன்ற உறுப்பினராக உள்ள 34- வது கோட்டத்தில் உள்ள 5000 வீடுகளுக்கும் நகர தூய்மைக்கான வேண்டுகோளாக மக்கும் மக்காத என குப்பைகளை தரம் பிரித்து குப்பை வாகனங்களில் மட்டும் வழங்குங்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டாதீர்கள் என கையால் எழுதப்பட்ட கடிதங்களை அனுப்பிய நிகழ்வு பெரும் பலனைத் தந்தது.
இதனை தொடர்ந்து, எதிர் வரும் 09-10-2023 திங்கள்கிழமை அன்று உலக அஞ்சல் தினத்தில் பள்ளி மாணவர்கள் 6500 பேருக்கு அஞ்சல் அட்டையை வழங்கப்படுகிறது.
அதில் அவர்கள் உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ என யாருக்கு வேண்டுமானாலும் தன் உணர்வுகளை எண்ணங்களை கருத்துக்களை கடிதமாக எழுதலாம். அந்தக் கடிதங்களை அவர்களே அஞ்சல் பெட்டியில் போட வைக்கும் ஒரு உற்சாக விழிப்புணர்வு நிகழ்வை சான்றோர் மற்றும் அஞ்சல்துறையினர் முன்னிலையில் வரும் 09-10-2023 திங்கள்கிழமை உலக அஞ்சல் தினத்தன்று சேலத்தில் நடத்திட உள்ளோம்.
அதற்கு உங்களின் பேராதரவை நல்கிட அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம்.
அன்போடு..
ஈசன் இளங்கோ
கடித ஆர்வலர்
சேலம்
5-10-23