உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான பெர்னார்ட் அர்னால்ட்டின் LVMH நிறுவன பங்குகள் 2.6 சதவீதம் சரிந்ததை அடுத்து எலான் மஸ்க் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். எலான் மஸ்க், அர்னால்ட் ஆகியோர் உலகின் 500 பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்துள்ளனர் என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், போரிங் கம்பெனி, ட்விட்டர் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்தே வந்தது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களில் அடுத்தடுத்து இவருக்குக் கிடைத்த வெற்றியே இதற்குக் காரணமாகும்.ஆனால் ட்விட்டர் நிறுவனம் இவருக்கு கைக்கொடுக்கவில்லை.
அர்னால்ட் நிறுவனங்களின் பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவரது பங்குகள் சுமார் “10 சதவீதம் சரிந்தன”. இதன் மூலம் ஒரே நாளில் அர்னால்ட் தனது சொத்து மதிப்பில் 11 பில்லியன் டாலரை ஒரே நாளில் இழந்தார். மறுபுறம் எலான் மஸ்க் இந்த ஒரே ஆண்டில் மட்டும் 55.3 பில்லியன் டாலரை சேர்த்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணமாக அவரது டெஸ்லா தான். டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 66 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், எலான் மஸ்கின் சொத்து மதிப்பும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. எலான் மஸ்கின் சொத்து மதிப்பு இப்போது 192.3 பில்லியன் டாலராக உள்ளது. அதேநேரம் அர்னால்டின் சொத்து மதிப்பு இ்ப்போது 186.6 பில்லியன் டாலராக உள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய இவருக்கு லாபம் கிடைத்ததா என்றால் இல்லை. மாறாக கடும் நஷ்டத்தை அவருக்கு கொடுத்துள்ளது. ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் எலான் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக ஒப்பந்தம் உறுதியானது.
ஒப்பந்தம் போட்ட சில வாரங்களில், ட்விட்டரை வாங்கவில்லை என்று அறிவித்தார். அப்புறம் ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் இல்லை, இல்லை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். இப்படி ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் போதே பல பிரச்சனைகளை ஏற்படுத்தி கடைசியில் தான் அதனை வாங்கினார்.
பின்னர் ட்விட்டரை கையகப்படுத்தியதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் இருந்த வந்த நிலையில், அதில் பல்வேறு நிறங்களை மாற்றி அமைத்தார். அதன்படி தனிநபர் அதிகாரப்பூர்வ கணக்குக்கு நீல நிறமும், வணிக கணக்குகளுக்கு தங்க நிறமும், அரசு சார்ந்த கணக்குகளுக்கு க்ரே நிறமும் என டிக்குகள் மாற்றப்பட்டது.
இதன் பின்னர் சந்தா செலுத்தி பல்வேறு வசதிகள் மற்றும் அம்சங்களுடன் கூடிய டுவிட்டர் ப்ளூ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படி பல்வேறு முயற்சிகளை அவர் முன்னெடுத்தாலும் கடைசியில் அவருக்கு நஷ்டமே மிஞ்சியது.
இந்தியர்களை பொறுத்தவரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 13-ஆம் இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 84.7 பில்லியன் டாலராக உள்ளது. அதானி குழும தலைவர் கவுதம் அதானி 19-ஆம் இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 61.3 பில்லியன் டாலராக உள்ளது.