தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் தனது முகநூல் பக்கத்தில், ‘’பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 600-க்கு 591 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்த ஆணையூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மாணவி ரித்யுஷாவைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் வாயிலாகத் தெரிந்துக் கொண்டேன்.
அம்மாணவியை இல்லத்திற்கு அழைத்து வாழ்த்தும்போது “படிக்க வசதியில்லை; ஆன்லைன் மூலம் கல்வி கற்க உள்ளேன்”, என அம்மாணவி தெரிவித்ததால், நேரடியாகக் கல்லூரியில் சேர்ந்து கற்பதன் அவசியத்தைக் எடுத்துக் கூறியதோடு, மதுரை லேடி டோக் (Lady Doak) கல்லூரி முதல்வரிடம் அம்மாணவியின் மேற்படிப்பு செலவு முழுவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவே அவர் படிக்க விரும்பும் துறையில் இடம் தர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டேன். தற்பொழுது லேடி டோக்(Lady Doak) கல்லூரி முதல்வர் அம்மாணவிக்குச் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் இடம் ஒதுக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்தச் செய்தியை பார்த்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மதுரை மாவட்டம், ஆனையூர் ஈழத்தமிழர் முகாமில் வசித்துவரும் அன்புமகள் ரித்யுஷா 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் பெற்றும், மேற்படிப்பு படிக்க வசதியற்ற ஏழ்மைநிலையில் இருக்கும் செய்தியறிந்தவுடன், ரித்யுஷாவின் உயர்கல்வி செலவை முழுமையாக ஏற்றதுடன், கல்லூரியிலும் இடம் பெற்றுக்கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர், அன்பிற்கினிய சகோதரர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடிப்படை வசதிகள் ஏதுமற்று, குறைந்தபட்ச கற்கும் வாய்ப்புகள் கூடக் கிடைக்கப்பெறாத, தமிழ்நாட்டின் வதை முகாமில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். அந்த வகையில் தனிப்பட்ட முறையில் தாங்கள் செய்த பேருதவி ஒரு குழந்தையின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த போதிலும், அதனை தமிழ்நாடு அரசே முன்னெடுக்கும்போதுதான் நம்மையே நம்பி வந்துள்ள ஈழச்சொந்தங்கள் அனைவரின் வாழ்விலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஆகவே, மாண்புமிகு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டுச்சென்று, ஈழத்தமிழர் முகாம்களில் வசிக்கும் அனைத்து குழந்தைகளின் உயர்கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

