‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு கழகத்தினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து திமுக இளைஞர் அணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
டிசம்பர் 17-ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில் வருவாய் மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது, கழக மூத்த முன்னோடிகளுக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் பொற்கிழி வழங்குவது, மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அரசின் நலத்திட்டப் பணிகள் குறித்து, ஆய்வுக் கூட்டத்தை நடத்துவது… இந்த மூன்று விஷயங்களை மையமாகக் கொண்டே என் சமீபகால மாவட்டச் சுற்றுப்பயணங்களை அமைத்துக்கொள்கிறேன்.
அந்த வகையில், இந்த மாதம் 4-ஆம் தேதி மதியத்துக்கு மேல் தூத்துக்குடி, 5-ஆம் தேதி தென்காசி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்ல முடிவு செய்தோம். 4-ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கடந்த ஆண்டு சாதனை படைத்த வீரர்-வீராங்கனையர்கள் 134 பேருக்கு உயரிய ஊக்கத்தொகையாக 2 கோடியே 24 லட்சம் ரூபாயை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.
அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வீரர்-வீராங்கனையர் 52 பேருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினோம். ‘தேசிய அளவில் சாதனை படைக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உயரிய ஊக்கத் தொகைகளை வழங்க வேண்டும்’ என்பது, அவர்களின் 20 ஆண்டுகாலக் கோரிக்கை. அதன் தீர்வாக, ‘சீனியர்-ஜூனியர் பிரிவுகளில் தேசிய அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெறுபவர்களுக்கு முறையே தலா 5, 3, 2 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படும்’ என்று வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு, சென்னையில் இருந்து தூத்துக்குடி பயணமானோம். தூத்துக்குடி விமான நிலையத்தில் கழகத்தினரின் வரவேற்பை பெற்றுக்கொண்டு வெளியே வரும்போது சகோதரர் ஜஸ்டின் என்னை சந்தித்து இளைஞர் அணி மாநாட்டு நிதியாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். ஜஸ்டினைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது அவசியம். ஜஸ்டின் ஒரு மாற்றுத்திறனாளி. தன்னுடைய வாழ்க்கையைத் தானே மாற்றும் வல்லமை படைத்த ஒரு திறனாளி. அவருக்குத் தேவை ஓர் உந்துதல். அதற்காக என்னைக் காண இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். அவருக்கு தூத்துக்குடி மாநகரில் பழச்சாறு விற்கும் கடையை இளைஞர் அணியின் சார்பில் அமைத்துத் தந்தோம். இன்று அவர் பிறருக்கு உதவி செய்யும் இடத்துக்கு வந்ததில் மகிழ்ந்தேன்.
விமான நிலையம் அருகிலேயே புதுக்கோட்டை நல்லமலைப் பகுதியில் அமைந்துள்ள கழக இளைஞர் அணியின் துணைச் செயலாளர் ஜோயல் அவர்களின் இல்லத்தில் கழகக் கொடியை ஏற்றிவைத்தோம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சூழ்ந்து நின்று வரவேற்றனர். அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றோம். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினோம். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் ஆய்வுக் கூட்டம்.
ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் மக்கள் நலப் பணிகள், அதன் தற்போதைய நிலை… எனத் தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு துறையாகப் பார்த்து அதற்கான விளக்கங்களை அதிகாரிகளிடம் பெறுவது, என மிக விரிவாக மூன்று மணி நேரம் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்படும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீட்டும் மக்கள் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரவேண்டும் என்றால், இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் அவசியம்.
அதை முடித்துக்கொண்டு, `மாணிக்கம் மஹால்’ திருமண மண்டபத்தில் நடைபெற்ற கழக மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோம். இந்தப் பொற்கிழி நிகழ்ச்சி என் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. நம் கழக முன்னோடிகள் என்னைப் பார்த்ததும் கைகளைப் பிடித்துக்கொண்டு தங்களின் கழகப் பணிகள் அத்தனையையும் என்னிடம் சொல்லிவிடவேண்டும் என்ற தவிப்பு, அவர்களிடம் தெரியும். அப்படி அன்று தூத்துக்குடி வடக்கு-தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில், மொத்தம் 1,000 கழக முன்னோடிகளுக்குத் தலா ரூ.10 ஆயிரம் வழங்கி வாழ்த்து பெற்றோம்.
“இந்தக் கழகத்தின் அச்சாணியே நீங்கள்தான். பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியர் ஆகியோரின் மறு உருவாகத்தான் உங்களைப் பார்க்கிறேன். உங்களுக்குப் பொற்கிழி வழங்குவது என்பது எங்கள் கடமை” என்று அவர்களின் மீதான என் அன்பை உரையாகப் பேசி முடித்தேன்.
அடுத்து தூத்துக்குடியில் புதுக்கோட்டைப் பகுதியில் நடைபெற்ற இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம். பிரம்மாண்டமான ஏற்பாடு. கூட்டம் நடந்த இடத்தின் வாசலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வரவேற்றனர். “கடந்த மாதம் 20-ஆம் தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அக்கட்சியின் கொள்கை குறித்தோ, தமிழ்நாட்டின் நலன் குறித்தோ ஏதாவது பேசப்பட்டதா? விவாதிக்கப்பட்டதா? ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கான உதாரணம்தான் அந்த மாநாடு. ஆனால், நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு இயக்கத்தின் இளைஞர் அணி நடத்தக்கூடிய நம் மாநாடு, ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்க வேண்டும். அதற்கு உங்களின் வருகையை உறுதி செய்வது அவசியம்” என்று உரையாற்றி அவர்களை மாநாட்டுக்கு அழைத்தேன்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்ததுடன் மாநாட்டுக்கு நிதியும் வழங்கிய மாண்புமிகு அமைச்சர்கள் அக்கா கீதாஜீவன், அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் துணைச் செயலாளர்கள் ஜோயல், இன்பா ரகு-வுக்கும், நிதியளித்த மாவட்ட இளைஞர் அணியினருக்கும் என் அன்பும் வாழ்த்தும்.
மறுநாள், தென்காசி மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்துச் செல்ல மாண்புமிகு அமைச்சர்கள் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களும் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களும் தூத்துக்குடி வந்திருந்தனர். இரவு 10.30 மணி ஆனபோதும் ஆலங்குளத்தில் ஆயிரக்கணக்கானோருடன் காத்திருந்து, என்னை வரவேற்ற தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் ஜெயபாலன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்த நாள் 5-ம் தேதி காலை தென்காசி மாவட்டத் தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம். நோயாளிகளைக் கனிவுடன் நடத்தி, அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதையும், மருத்துவமனையைச் சுகாதாரமாகப் பராமரிப்பதையும் உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தினோம்.
அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினோம். அதன்பிறகு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். கூட்டத்தின் நிறைவாக, “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்தத் திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பலன்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களுக்குச் சென்று சேரும் வகையில் உழைத்து, இந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து, அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தரவேண்டும்” என்று அரசு அலுவலர்களைக் கேட்டுக்கொண்டேன்.
அதைத்தொடர்ந்து, சிவந்தி நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தென்காசி தெற்கு மாவட்டக் கழகத்துக்கான அலுவலக வாசலில் அமைக்கப்பட்டுள்ள கழகக் கொடியை ஏற்றிவைத்து மகிழ்ந்தேன். மதிய உணவுக்குப் பிறகு, தென்காசி, `இசக்கி மஹால்’வளாகத்தில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி. தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகங்களில் உள்ள முன்னோடிகளில் ஆயிரத்து 500 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழியாக வழங்கி மகிழ்ந்தோம். இதுவரை தமிழ்நாடு முழுவதும் கழக முன்னோடிகளுக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் பொற்கிழியாக வழங்கப்பட்டுள்ளதைத் தெரிவித்து, இளைஞர் அணி அறக்கட்டளை சார்பிலும் உதவக் காத்திருக்கிறோம். கோரிக்கைகளை அன்பகத்துக்கு அனுப்பலாம் என்பதையும் சொல்லி விடைபெற்றோம்.
அடுத்து இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம். திரும்பிய திசையெங்கும் எழுச்சி என்று சொல்லும் அளவுக்குக் கட்டுக்கடங்காத இளைஞர்கள் கூட்டம். “9 ஆண்டுகளாக நாங்கள் இதெல்லாம் சாதனைகளைச் செய்துள்ளோம் என்று சொல்வதற்குக்கூட எதுவும் செய்யாத ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் பேசியதைத் திரித்து அரசியல் செய்கிறது. 28 எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்குப் பயந்து நாட்டின் பெயரையே ‘பாரத்’ என்று மாற்றி, தான் செய்த ஊழலையும், மணிப்பூரில் செய்த இனக்கலவரத்தையும் மறைக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க.வையும், மோடியையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓடஓட விரட்ட வேண்டும். அதற்கான முதல் படியாக நம் இளைஞர் அணி மாநில மாநாடு அமையவேண்டும். அதற்கு, உங்கள் ஒவ்வொருவரின் வருகையும் அவசியம்” என்பதை எடுத்துரைத்து உரையாற்றினேன்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த மாவட்டச் செயலாளர் சகோதரர் ராஜா, மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் ஜெயபாலன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இளைஞர் அணி துணைச் செயலாளர் சகோதரர் ஜி.பி.ராஜா, கூட்டத்துக்கு இளைஞர்களைத் திரட்டி, நிதி வழங்கிய மாவட்ட அமைப்பாளர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும். மாவட்ட ஆய்வுப் பணிகளை ஒருங்கிணைத்த சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் செயலாளர் மருத்துவர் தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் நன்றி.
தூத்துக்குடி, தென்காசியையும் சேர்த்து, இதுவரை 23 மாவட்டக் கழகங்களுக்கான இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம். தென்காசியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதுரைக்கு வந்து, விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தோம்.
அடுத்தடுத்த சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும். இந்த நேரத்தில் கழகத்தினருக்கும், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கும் ஒரு வேண்டுகோள். கழக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது, சால்வை – பொன்னாடை அணிவிப்பதை அறவே தவிர்க்கவும். இவற்றுக்குப் பதிலாக புத்தகங்களையோ, கழகத்தின் கருப்பு-சிவப்பு கரை வேட்டிகளையோ, இளைஞர் அணி வளர்ச்சி நிதியோ தாருங்கள். அவை மற்றவர்களுக்குப் பயன்படும்.
இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’கடந்த 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.
‘கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார்யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்.
தந்தை பெரியாரிடம் இருந்து வந்த பேரறிஞர் அண்ணாவால் நிறுவப்பட்ட தி.மு.கழகத்தின் இரண்டு கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.
மதங்களைப் பற்றி அண்ணா அவர்கள் கூறியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் அதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “எப்போது ஒரு மதம் மக்களை சமத்துவத்தை நோக்கி வழிநடத்துகிறதோ, அவர்களுக்கு சகோதரத்துவத்தை கற்பிக்கிறதோ, அப்போது நானும் ஆன்மிகவாதிதான். எப்போது ஒரு மதம் சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறதோ, அவர்களுக்கு தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் கற்பிக்கிறதோ, அப்போது அந்த மதத்தை எதிர்த்து நிற்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்றார் அண்ணா.
`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோவை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. ‘சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’ என திரைப்பட நடிகர் அண்ணன் வடிவேலு அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு மோடி அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார். இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது… என வடிவேலு அண்ணனின் `23-ஆம் புலிகேசி’ கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு நகைச்சுவை செய்துகொண்டுள்ளார்.
திரையில் வடிவேலு அண்ணனை ரசிக்க முடிந்தது. நிஜத்தில் இவர்களை… மக்களின் வாக்குகளைப் பெற எந்தளவுக்கும் சென்று, இவர்கள் நாடக அரசியலைச் செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
நான் இதை நகைச்சுவைக்காக மட்டும் சொல்லவில்லை, ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தும் ‘புதுமைப்பெண்’ திட்டம் போன்றோ, முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் போன்றோ, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றோ ஏதாவது ஒரு முற்போக்குத் திட்டம் கடந்த 9 ஆண்டுகால ஒன்றிய அரசிடம் இருந்து வந்திருக்கிறதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா? கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் போன்று ஏதாவது அறிவியக்கத்தை முன்னெடுத்தார்களா?
‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
‘என்ன வாய் மட்டும் வேலை செய்யுது’ என்பது போல, மீடியாவை சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர் நான் பேசாததைப் பேசியதாகத் திரிக்கும் அவதூறுகளை வைத்து, வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களின் பிழைப்பில் நான் மண் அள்ளிப்போட விரும்பவில்லை, பிழைத்துப்போகட்டும்.
நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா காலத்தில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்க வீடு வீடாக ஏறிக்கொண்டிருந்தோமே அப்போது அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் என்ன செய்தன? மணி அடித்தபடியும், விளக்கு பிடித்தபடியும் கொரோனா கிருமியை ஒழிக்கப் போராடிக் கொண்டு இருந்தன.
இன்று நாம் ஆளுங்கட்சி. இன்றும் நாம் கலைஞரின் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாட, நலத்திட்ட உதவிகளை வழங்க வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க.வோ ஆடலும் பாடலும் பின்னணியில், புளி சாத மாநாடுகளை நடத்திக்கொண்டு, விழுவதற்குக் கால்கள் கிடைக்காதா, ஊர்ந்து போக ஏதாவது ஃபர்னிச்சர் கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய பிரதமர் மோடியோ கொரோனா நிதியாகத் திரட்டிய ‘பி.எம். கேர்ஸ்’க்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றபடி, 7.5 லட்சம் கோடி ரூபாய் என்ன ஆனது என்ற சி.ஏ.ஜி. கேள்விக்குப் பதிலளிக்காமல், ஊரில் இருந்தால், மணிப்பூர் பற்றிக் கேள்வி கேட்பார்களே என்று பயந்து நண்பர் அதானியை அழைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருக்கிறார். உண்மையைச் சொல்வது என்றால், மக்களின் அறியாமைதான் இவர்களின் நாடக அரசியலுக்கான மூலதனம்.
மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல்… போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் கைகளில் தான் மொத்தமாக சிக்கியுள்ளதால், ‘ஒரே நாடு ஒரே தேர்தலா… நடத்திடுவோம் எஜமான்’, ‘பாரதம்னு மாத்துறீங்களா… மாத்திடுங்க ஓனர்’ என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.
சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட ‘முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி’ என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மாண்பமை நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ‘கொலை மிரட்டல் விடுத்த அந்தச் சாமியாரை கைது செய்ய வேண்டும்’ என்று கோரி நம் கழகத்தினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்தச் சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது.
நாம் பிறருக்கு நாகரிகம் கற்றுத் தருபவர்கள். நம் தலைவர்கள் நம்மை அப்படித்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எனவே, அதுபோன்ற காரியங்களை நம் இயக்கத் தோழர்கள் அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தவிர, நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன.
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் பல பணிகளை நம் மாண்புமிகு முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கான பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள்… என ஏராளமான பணிகள் நமக்கு முன் உள்ளன.
இவ்வளவு வேலைகள் இருக்கும்போது சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது.. போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் நம் கழகத்தினர் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலும், தலைமைக் கழகத்தின் ஆலோசனையைப் பெற்று சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்த தோழமை கட்சியின் தலைவர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ‘சனாதன தர்மம்’ எதை வலியுறுத்துகிறது, அதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது’ என்பதை நாடு தழுவிய அளவில் ஒரு பேசுபொருளாக மாற்ற காரணமாக அமைந்த ‘சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு’ம், அதை ஒருங்கிணைத்த த.மு.எ.க.ச தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அம்மாநாட்டுக்கு நான் செல்ல காரணமாக இருந்த அண்ணன் ‘புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரன் அவர்களுக்கு என் அன்பு.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் புகழ் ஓங்கட்டும். தொடர்ந்து அவர்களின் கொள்கை வழியில் நடக்க உறுதியேற்போம்.
நன்றி, வணக்கம்.
உங்கள்
உதயநிதி