உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான கூட்டாண்மை (பிஜிஐஐ) மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் நடைபாதை (ஐஎம்இசி) குறித்த ஒப்பந்தம் ஜி20 மாநாட்டில் கையெழுத்தானது.
புதுதில்லியில் செப்டம்பர் 9, 2023 அன்று நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது, உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான கூட்டாண்மை (பிஜிஐஐ) மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இசி) குறித்த சிறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.
இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான பல்வேறு பரிமாணங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், இணைப்பை வலுப்படுத்தவும் அதிக முதலீட்டை ஈர்ப்பதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டது.
ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்களும், உலக வங்கியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றன.
பி.ஜி.ஐ.ஐ என்பது வளரும் நாடுகளில் உள்கட்டமைப்பு இடைவெளியைக் குறைப்பதையும், உலகளவில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்த உதவுவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு வளர்ச்சி முன்முயற்சியாகும்.
ஐ.எம்.இ.சி இந்தியாவை வளைகுடா பிராந்தியத்துடன் இணைக்கும் கிழக்கு வழித்தடம், வளைகுடா பிராந்தியத்தை ஐரோப்பாவுடன் இணைக்கும் வடக்கு வழித்தடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் ரயில் மற்றும் கப்பல்-ரயில் போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் சாலை போக்குவரத்து பாதைகள் அடங்கும்.
பிரதமர் தனது உரையில், பௌதீக, டிஜிட்டல் மற்றும் நிதி இணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்த ஐ.எம்.இ.சி உதவும் என்று அவர் கூறினார்.
இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய யூனியன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐ.எம்.இ.சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.