Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114
’’இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Madras Murasu
spot_img
More
    முகப்புஆசிரியரின் தேர்வு’’இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ’’இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ’’இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. இந்தியாவைக் காக்க இந்தியா கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நம்முடைய அரசியல் கடமை மட்டுமல்ல! கொள்கைக் கடமையும்தான்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கி, முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    இந்தியாவின் முதல் விடுதலைப் போர் நடப்பதற்கு 50 ஆண்டுக்கு முன்பே, இங்கு நம்முடைய பொதுச்செயலாளரும், பொருளாளரும் குறிப்பிட்டதைப்போல, விடுதலைக் கனல் தெறித்த ஊர் இந்த வேலூர். இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் என்று 1857-இல் நடந்த சிப்பாய்க் கலகத்தைச் சொல்வார்கள். ஆனால், 1806-ஆம் ஆண்டு, ஜூலை 10-ஆம் நாள் வேலூர் கோட்டையில் நிகழ்ந்த புரட்சியின் தொடக்கம்தான் இந்தியர்கள் இனியும் அடிமையாக வாழத் தயாராக இல்லை என்பதை பிரிட்டிஷ் ஆட்சிக்கு உணர்த்தியது. அத்தகைய வீரம் விளைந்த ஊரில் இந்த ஆண்டுக்கான கழக முப்பெரும் விழா நடைபெறுகிறது.

    இங்கு சிப்பாய்க் கலகத்தின் நினைவுத் தூணைக் கலைஞர் நிறுவினார். வேலூர் நகராட்சியை மாநகராட்சி ஆக்கினார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு மிகப் பெரிய கட்டடம் கட்டித் தந்ததும், வேலூர் மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்ததும் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்! அத்தகைய தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் வேலூரில் முப்பெரும் விழாவை நடத்துவது மிகமிக பொருத்தமானது.
    அதிலும் குறிப்பாக, நம்முடைய பொதுச் செயலாளர் – அருமை அண்ணன் துரைமுருகன் அவர்களின் சொந்த மாவட்டம் இந்த வேலூர்! காந்தி இருக்கிறார். ஜெகத்ரட்சகன் இருக்கிறார். அவர்களுக்கும் அந்த உரிமை உண்டு. அதேபோல பல முன்னோடிகளும் அந்த உரிமையை கொண்டாட முடியும். ஆனால் அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததுபோல அண்ணன் துரைமுருகன் அவர்கள் இந்த மாவட்டத்தோடு எவ்வாறு ஒன்றி, பிணைந்து, இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை எல்லோரும் அறிவார்கள். அவரே மேடைகளில் சொல்வார்… என்னைக் கால்சட்டைப் பையனாக பார்த்தேன்… இன்று தலைவராக பார்க்கிறேன் என்று சொல்வார். அப்படிப்பட்ட நான் இப்போது கழகத் தலைவராவும் – அவர் கழகத்தின் பொதுச் செயலாளராவும் இருப்பது பெருமைக்குரியது. இருவருமே தலைவர் கலைஞரால் வளர்க்கப்பட்டவர்கள் – வார்ப்பிக்கப்பட்டவர்கள் என்பதுதான் எங்களுக்குக் கிடைத்த பெருமை!

    தலைவர் கலைஞர் அவர்களும் – இனமானப் பேராசிரியர் அவர்களும் அடுத்தடுத்து நம்மை விட்டுப் பிரிந்த நேரத்தில் – இருவருமாக இருந்து எனக்கு அறிவுத் துணையாகவும் – அருமைத் துணையாகவும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டு இருக்கக் கூடியவர்தான் அண்ணன் துரைமுருகன் அவர்கள். அனுபவத்தைவிட சிறந்த பாடப்புத்தகம் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட அனுபவப் பாடத்தை அவர் எனக்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டு வருகிறார். மிக முக்கியமான பிரச்சினை எதுவாக இருந்தாலும் – பழைய செய்தி அல்லது பழைய நிகழ்ச்சியை அவர் நினைவூட்டி வழிநடத்துவார். அப்படிப்பட்ட கழகப் பொதுச்செயலாளரின் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா மாநாடுபோல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இதைச் சீரோடும் – சிறப்போடும் – எழுச்சியோடும் – பிரம்மாண்டமாகவும் ஏற்பாடு செய்திருக்கும் வேலூர் மாவட்டக் கழகச் செயலாளர் நம்முடைய அருமை நண்பர் நந்தகுமார் அவர்களையும் – அவருக்குத் துணை நின்றிருக்கும் மாவட்டக் கழக நிர்வாகிகளையும் நான் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். நந்தகுமார் சுறுசுறுப்பாகவும், துறுதுறு என்றும் பணியாற்றுபவர். சிரித்த முகத்தோடு சீரிய பணிகளை ஆற்றக் கூடியவர்.

    அதேபோல நம்முடைய மாநகரச் செயலாளர் கார்த்திகேயன் இல்லாமல் இங்கு மட்டுமில்லை, எங்கேயும் நாம் மாநாடு நடத்த முடியாது. அந்தளவுக்கு அவரது ஒலிபெருக்கிதான் கழகத்தின் குரலை கம்பீரமாக கொண்டு சேர்த்துக்கொண்டு இருக்கிறது. வேலூர் இரட்டையர்களாக இருந்து இருவண்ணக் கொடியைக் கட்டிக் காத்துக்கொண்டு வருகிற நந்தகுமார் – கார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் உங்கள் அனைவரின் சார்பில் கழகத் தலைவர் பொறுப்பை நான் ஏற்றிருக்கின்ற காரணத்தால் என்னுடைய நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
    பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் – காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா – ஆகியோர் பிறந்த நாளையும் – தமிழினத்தின் விடிவெள்ளியாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க நாளையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும் என்று 1985-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அறிவித்தார். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நாம் இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்திக்கொண்டு வருகிறோம்.

    இந்த ஆண்டுக்கு இன்னும் இரண்டு கூடுதல் சிறப்புகள் இருக்கிறது. நம்மையெல்லாம் ஆளாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். அதேபோல இந்த மாபெரும் இயக்கத்தின் பவளவிழா இன்றிலிருந்து தொடங்குகிறது.

    ”நான் சாமானியன் – மிகமிகச் சாமானியன். எனக்கடுத்த தளநாயகர்கள் எத்தனை பேர் வேண்டும்? இதோ எண்ணிக் கொள்!” – என்று சொல்லி தனது தம்பிமார்கள் பட்டாளத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். கொட்டும் மழையில் பிறந்ததால் என்னவோ, உடனே வளர்ந்தது கழகம். இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கும் கழகத்தின் பவளவிழாவை வரும் ஓராண்டுக்கு நாம் கொண்டாடப்போகிறோம். அந்த வகையில் பார்த்தால், இது ஐம்பெரும் விழா என்று சொல்லத்தக்க வகையில் சிறப்பாக இன்றைக்கு நடந்துக்கொண்டு இருக்கிறது.

    ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டு காலம் நின்று நிலைத்திருப்பது சாதாரணமானது இல்லை. பெரிய பெரிய தலைவர்கள் உருவாக்கிய இயக்கமெல்லாம் அவர்கள் மறைந்தபோது – அவர்களோடு சேர்ந்து மறைந்த எத்தனையோ வரலாறுகளை நாம் படித்திருக்கிறோம். ஆனால், தோன்றிய காலத்தில் எப்படி இருந்ததோ – அதே இளமையோடு – அதே வேகத்தோடு – அதே விவேகத்தோடு – அதே உழைப்போடு – அதே உணர்வோடு இன்று வரை – இந்த 75-ஆவது ஆண்டிலும் கழகம் செழிப்போடு இருக்கக் காரணம் – எதிரே அமர்ந்திருக்கும் நீங்களும், தமிழ்நாடெங்கும் இருக்கும் கோடிக்கணக்கான கழகத் தொண்டர்களும்தான்! இந்த வேலூர் கோட்டை முதல் – குமரிக் கடல் வரைக்கும் இந்தக் கழகத்தைக் கட்டி ஆள்பவர்கள் தொண்டர்கள்தான்.
    உங்கள் எல்லோரையும் ‘தம்பி‘ என்று அழைத்தார் பேரறிஞர் அண்ணா.

    ‘உடன்பிறப்பே‘ என்று அழைத்தார் கலைஞர். நான் உங்களில் ஒருவன். நான் வேறு – நீங்க வேறு இல்லை. உங்களால் உருவாக்கப்பட்டவன் நான். தொண்டர்களால் தலைவனாவும் – தொண்டர்களால் முதலமைச்சராவும் ஆக்கப்பட்டவன் நான். கழகத்தின் எந்தப் பொறுப்புக்கும் ஆசைப்படாமல் – அதிகாரத்தின் எந்தப் பதவியையும் அனுபவிக்காமல் – கருப்புச் சிவப்புக் கொடியைப் பிடித்திருந்தால் போதும் – கருப்பு சிவப்பு வேட்டியைக் கட்டியிருந்தால் போதும் – என்ற உணர்வோடு உயிர்வாழும் தொண்டர்கள் இருக்கும் திசைநோக்கி நான் வணங்குகிறேன்.

    இந்த இயக்கத்தை நீங்களும், உங்கள் குடும்பமும் சேர்ந்துதான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் நாம் கம்பீரத்தோடு இன்றைக்கு பவள விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சிறப்பாக நூற்றாண்டு விழாவையும் நாம் கொண்டாடுவோம். அதில் எந்த மாற்றம் இல்லை. எந்தக் கட்டடமும் கட்டுவதுக்கு முன்பு எடுத்து வைக்கப்படுவது செங்கல்தான். நான் சொல்லும் செங்கல் வேறு, நீங்கள் வேறு எதையும் நினைத்துவிடாதீர்கள். ஆனால், அது திறப்பு விழாவின்போது வெளியில் தெரியாது. மலர் மாலைகள்தான் தெரியும். அந்த மாலைகள் உதிர்ந்திடும். ஆனால், செங்கல்கள்தான் கடைசி வரையிலும் காப்பாற்றும். அத்தகைய அடித்தளம்தான் கழகத்தின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள். அடித்தளத்தை நானும் மறக்க மாட்டேன். யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால்தான் மூத்த முன்னோடிகளுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு செய்துகொண்டே இருக்கிறோம்.

    ஒரு குடும்பத்துக்குத் தாய் – தகப்பனைப் போன்றவர்கள்தான் இந்த இயக்கத்தின் மூத்த முன்னோடிகளும். அவர்களை இந்த பவள விழா ஆண்டில் போற்றுங்கள் – பாராட்டுங்கள் என்று எல்லா மாவட்டக் கழகச் செயலாளர்களையும் நான் இந்த விழாவின் மூலமாக கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களின் கடந்த காலத் தொண்டுக்கு இணையாக நாம் எதையும் கொடுத்துவிட முடியாது. அவர்களைப் பாராட்டுவது மூலமாக நாம் நன்றிக்குரியவர்களாக ஆகிறோம். அவர்களைப் பாராட்டுவது மூலமாக நம்முடைய மதிப்பு உயரும் என்பதை மறந்துவிடாதீர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன தளநாயகர்கள் அவர்கள்தான். தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன ரத்தநாளங்கள் அவர்கள்தான்.

    இவர்களைப் பார்த்துப் புதிய புதிய தளநாயகர்கள் உருவாக வேண்டும். உருவாக்க வேண்டும். இந்த பவளவிழா ஆண்டில் இயக்கத்தின் தலைவராக நான் இருக்கிறேன். இன்று இரண்டு கோடி உறுப்பினர்கள் இயக்கத்தில் இருக்கிறார்கள் என்றால், இரண்டு கோடிப் பேர் என்ற எண்ணிக்கை தேவையில்லை. இரண்டு கோடி கொள்கைவாதிகள் நிரம்பிய கோட்டை திராவிட முன்னேற்றக் கழகம். இதைவிட எனக்கு என்ன பெருமை வேண்டும்? இது கனவுகள் நிறைவேறும் காலம். அதனால்தான் நான் கம்பீரமாக நிற்கிறேன். மகிழ்ச்சியுடன் – மனநிறைவுடன் நிற்கிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகவரியாவும் – முகமாகவும் இருக்கிறவர்கள் தந்தை பெரியார்! பேரறிஞர் அண்ணா! தலைவர் கலைஞர்! இனமானப் பேராசிரியர்! பாவேந்தர் பாரதிதாசன்! ஆகிய ஐம்பெரும் ஆளுமைகள்! இவர்கள் தனிமனிதர்கள் இல்லை! தத்துவத்தின் அடையாளங்கள்! தந்தை பெரியாரின் சமூகநீதியும் – பேரறிஞர் அண்ணாவின் மாநில உரிமையும் – முத்தமிழறிஞர் கலைஞரின் ஒடுக்கப்பட்டோர் உரிமையும் – இனமானப் பேராசிரியரின் இனமானமும் – பாவேந்தரின் மொழிப்பற்றும்தான் நம்மை வழிநடத்துகிறது. அவர்கள் கொள்கையை நாம் பின்பற்றுவதும் – அவர்கள் வழிநடக்கும் தளகர்த்தர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவதும் நம்முடைய இயக்கத்தின் மாபெரும் கடமை!
    இந்த ஆண்டுக்கான பெரியார் விருது – கி.சத்தியசீலன் அவர்களுக்கும், அண்ணா விருது – முன்னாள் அமைச்சர் சுந்தரம் அவர்களுக்கும், கலைஞர் விருது – துணைப் பொதுச் செயலாளர், இந்நாள் அமைச்சர் மாண்புமிகு ஐ. பெரியசாமி அவர்களுக்கும், பேராசிரியர் விருது – ந.ராமசாமி அவர்களுக்கும், பாவேந்தர் விருது – திருமதி. மலிகா கதிரவன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. விருதுகள் பெற்ற ஐந்து பேரையும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், போற்றுகிறேன்!

    பெரியார் விருது பெற்றிருக்கும் மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்கள் 1956-ஆம் ஆண்டு முதல் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து இன்றுவரை பணியாற்றிக் கொண்டிருப்பவர். கிளைக் கழகச் செயலாளர் முதல் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வரை உயர்ந்தவர். இப்போது அவருக்கு 85 வயது. ஆனாலும் நெஞ்சுறுதியோடு காட்சி அளிக்கிறார் என்றால் கலைஞர் அவருக்கு அளித்த பாராட்டுப் பத்திரம்தான் காரணம். “சத்தியம் தவறாத சத்தியசீலன்” என்று கலைஞர் இவருக்கு மகுடம் சூட்டி இருக்கிறார். தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை உதட்டளவில் இல்லாமல், உள்ளார்ந்த ஈடுபாட்டோடு கடைப்பிடித்த சத்தியசீலன் இந்த ஆண்டுக்கான பெரியார் விருதை பெறுகிறார்.
    முன்னாள் அமைச்சர் மீஞ்சூர் க.சுந்தரம் அவர்கள் அண்ணா பெயரிலான விருதை பெற்றிருக்கிறார். அமைதியாக பணியாற்றுபவர்களுக்கு எடுத்துக்காட்டு வேண்டும் என்றால் அது க.சுந்தரம் அவர்கள்தான். எந்தப் பொறுப்பை வகித்தாலும் அதில் அமைதியாவும் – ஆக்கபூர்வமாவும் செயல்படக் கூடியவர் அவர். அவரை நான் பாராட்டுகிறேன்.

    கலைஞர் பெயரிலான விருதை தலைவர் கலைஞர் நூற்றாண்டில் பெற்றிருப்பவர் நம்முடைய அன்புக்குரிய அமைச்சர் – கழகத் துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி அவர்கள். 1980-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கருப்பு மீசையோடு கம்பீரமாக அவரை பார்த்தேன். இப்போது வெள்ளை மீசையோடு கம்பீரமாகப் பார்க்கிறேன். அன்று முதல் இன்று வரை உற்சாகம் குறையாமல் கழகத்துக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறவர் நம்முடைய ஐ.பி. அவர்கள். நானும் அவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். என்னைவிட இரண்டு மாதம் மூத்தவர் அவர். கல்லூரி மாணவராக இருந்தபோதே கழகச் செயல்வீரராக செயல்பட்டவர். 20 ஆண்டுகாலமாக மாவட்டச் செயலாளராக இருந்து திண்டுக்கல் மாவட்டத்தை மட்டுமல்ல, தென் மாவட்டங்களையே கழகக் கோட்டையாக மாற்றி அமைத்தவர் அமைச்சர் ஐ.பி. அவர்கள். 7 முறை சட்டமன்ற உறுப்பினர் – 3-ஆவது முறையாக அமைச்சர் என்று அசைக்க முடியாத சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் ஐ.பி. ‘லட்சியவாதி என் தம்பி ஐ.பி.’ என்று தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்டவர். கலைஞர் பெயரிலான விருது பெற்றிருக்க கூடிய இவரை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், ’இவர் கலைஞரின் வெறியர்’ என்பதுதான்.

    அடுத்து, பாவேந்தர் பெயரிலான விருதை திருமதி. மலிகா கதிரவன் அவர்கள் பெறுகிறார். கதிரவனும் – மலிகாவும் இணைந்து கழகப் பணியாற்றியவர்கள் என்று தென்காசி வட்டாரத்து மக்களுக்கு நன்றாக தெரியும். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டச் செயலாளராக பணியாற்றிய கதிரவன் அவர்கள் மறைந்த பிறகும் – தன்னுடைய கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றி, பாவேந்தர் வழிகாட்டிய புரட்சிப் பெண்ணாக திகழ்பவர்தான் மலிகா அவர்கள். கழக குடும்பத்து மகளிர்களுக்கு ஒரு எடுத்துகாட்டாய்ச் செயல்பட்டு வருகிறவர் தென்காசி மலிகா அவர்கள்.
    பேராசிரியர் அவர்கள் பெயரிலான விருதை பெங்களூரைச் சேர்ந்த ராமசாமி அவர்களுக்கு வழங்கி இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநாடு 1951-ஆம் ஆண்டு சென்னையில் நடந்தபோது அதில் கலந்து கொள்வதற்காக பெங்களூரில் இருந்து வந்தவர் என்ற பெருமைக்கு உரியவர் இவர். கர்நாடக மாநில தி.மு.க.வை வளர்த்தெடுக்க பாடுபட்டவர், பணியாற்றியவர். இன்னும் பணியாற்றிக் கொண்டிருப்பவர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரையும் அழைத்து கர்நாடக மாநிலத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தி, கழகப் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டவர். இன்னொரு மாநிலத்தில் கழகம் வளர்ப்பது எவ்வளவு சிரமம் என்று எல்லோருக்கும் தெரியும். அதை சிரமமாக நினைக்காமல் சிறப்பாக செய்து காட்டியவர் ராமசாமி அவர்கள்.

    விருதுகள் பெற்றுள்ள அனைவரையும் தலைமைக் கழகத்தின் சார்பில் மட்டுமில்ல, தனிப்பட்ட முறையிலும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், போற்றுகிறேன். உங்களது ரத்தத்தால், வியர்வையால், தியாகத்தால், தொண்டால் வளர்ந்த இயக்கம் இது. உங்களுக்கு விருதுகள் தருவது மூலமாக நாங்கள் எங்கள் நன்றியை காட்டுகிறோமே தவிர – உங்கள் தொண்டுக்கு பரிசு வழங்குகிறோம் என்று பொருள் இல்லை. உங்கள் உழைப்பு விலைமதிக்க முடியாதது. உங்கள் தொண்டு அளவிட முடியாதது. இத்தோடு உங்கள் பொறுப்பும், கடமையும் முடிந்துவிடவில்லை. எங்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டுங்கள். இன்றைய இளைஞர்களை வழிநடத்துங்கள் என்று விருதாளர்கள் அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
    ஏன் என்றால், மிக மிக முக்கியமான காலக்கட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தியாவில் ஜனநாயகத்தைக் காக்கின்ற போர்க்களத்தை நோக்கிய பயணத்திற்கிடையே இந்த முப்பெரும் விழாவை நாம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

    1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உதயம் ஆனது. 75 ஆண்டுகளாக தமிழ்ச் சமுதாயத்தின் காவல் அரணாக கழகம் செயல்பட்டு வருகிறது. 1967-ஆம் ஆண்டு முதன் முதலாக நாம் ஆட்சிக்கு வந்தோம். 1971, 1989, 1996, 2006, 2021-என்று மொத்தம் ஆறு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வருகிறோம்.

    ஒரு பக்கம் ஆட்சி – இன்னொரு பக்கம் கட்சி இரண்டின் மூலமாகவும் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களைவிட தலைசிறந்த மாநிலமாக மாற்றிக்கொண்டு வருகிறோம். அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம். இடையிடையே கொள்கையற்ற அ.தி.மு.க. கூட்டத்தின் ஆட்சி வந்து தமிழ்நாட்டைச் சீரழித்தாலும் – அதையும் திருத்தி – தமிழ்நாட்டை வளர்த்தெடுத்து வருகிறோம்.
    இன்றைக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி – தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி – தமிழினத்தின் வளர்ச்சி – பலருக்கும் பொறாமை ஏற்படுத்தும் வளர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு என்ற மாநிலத்தை – அதற்கான உரிமைகளை சிதைப்பது மூலமாக, நம்முடைய மாநில மக்களின் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார்கள். அதைத்தான் பட்டவர்த்தனமாக பாரதீய ஜனதா கட்சி செய்துகொண்டு வருகிறது.

    ஜி.எஸ்.டி. மூலமாக மாநில உரிமையை பறித்தார்கள். ஒரு மாநில அரசை நடத்துவதற்கு மிக முக்கியமான நிதி ஆதாரம் என்பது வரி வருவாய்தான். அந்த வரி வருவாயைக் கபளீகரம் செய்ததன் மூலமாக மாநில அரசை செயல்பட விடாமல் முடக்குகிறார்கள். மக்களுடன் நேரடியான தொடர்பைக் கொண்டது மாநில அரசுகள்தான். மக்களுக்கு தேவையான கல்வி – சுகாதாரம் – குடிநீர் – சாலை வசதிகள் – கடன்கள் – மானியங்கள் – பெண்கள் முன்னேற்றம் – விளிம்புநிலை மக்களுக்கான உதவிகள் – இவை எல்லாவற்றையும் வழங்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. இதை செய்து தருவதற்கு நிதி வேண்டாமா? அப்படிப்பட்ட நிதி ஆதாரங்களை கிடைக்கவிடாமல் செய்வதற்காகவே ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து நிதி வருவாய் வாசல்களை அடைத்தார்கள். நான் கேட்பது, நிதியை வசூல் செய்கிறீர்களே, அதை முறையாகப் பிரித்துக் கொடுக்கிறீர்களா அதுவும் இல்லை.

    அதேபோல கல்வி மிக முக்கியமான ஒரு துறை. ஒவ்வொரு மாநில அரசும் – அங்கு வாழும் பெரும்பான்மை மக்களின் பண்பாடு, அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியை வழங்கும். புதிய கல்விக் கொள்கை – என்று சொல்லி, பொதுவான கல்வி முறை என்ற பெயரில், நமது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள். ஒன்றிய அரசாங்கம் சொல்லும் கல்வி வளர்ச்சியை – தமிழ்நாடு எப்போதோ எட்டிவிட்டது. கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்குவதற்கான முயற்சிதான் அவர்கள் கொண்டு வரும் கல்விக் கொள்கை.

    நீட் தேர்வைப் பற்றி சொல்லவே அவசியமில்லை. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவைச் சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் நீட் தேர்வு. லட்சக்கணக்கில் செலவு செய்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். சில தனியார் கோச்சிங் செண்டர்களின் லாபத்துக்காகவே இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தகைய உயிரிழப்புகள் இப்போது வட மாநிலங்களிலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த 14-ஆம் தேதி ஜார்கண்டைச் சேர்ந்த மாணவி, ராஜஸ்தானில் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வுக்கு படிப்பதற்காக வந்தவர் அவர். ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் கடந்த ஆண்டு, 22 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இத்தனை தற்கொலைகள் நடக்கிறதே, இதற்கான காரணத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆராய்ந்ததா? இரக்கமற்ற அரசாகத்தானே மோடி அரசு இருக்கிறது.

    ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் எத்தளை வாக்குறுதி கொடுத்தார்கள்? நிறைவேற்றினார்களா? நேற்று ஒரு தாய்மார் கேட்கிற மாதிரி, போனில் மீம்ஸ் பார்த்தேன். ”எங்கள் முதல்வர் சொன்ன 1000 ரூபாய் வந்தாச்சு… பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு?” – இது வைரல் ஆகிவிட்டது.

    நாம் பிரதமரைப் பார்த்து என்ன கேட்கிறோம்? இதைச் செய்யுங்கள் என்று… அதைச் செய்யுங்கள் என்று புதிதாக எந்த வாக்குறுதியையும் கேட்கவில்லை. புதிதாக எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியிருக்கீர்களா? இல்லையா என்றுதான் கேட்கிறேன்.
    தமிழ்நாட்டுக்கு வந்து பல வாக்குறுதிகளை கொடுத்தார். அந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றினாரா? இல்லை. உதாரணத்துக்கு ஒன்று கேட்கிறேன். மதுரையில எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என்று 2015-ஆம் ஆண்டு சொன்னார்கள். இப்போதுதான் டெண்டரே விட்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் யாரும் நினைவுபடுத்திவிடக் கூடாது என்றுதான் மற்ற பிரச்சினைகளைக் கிளப்பிக் குளிர்காயப் பார்க்கிறார்கள்.

    சரி என்ன சாதனை இந்த ஒன்பது வருடத்தில் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டர் விலை 420 ரூபாய். இதை 1100 ரூபாய்க்கு உயர்த்தியதுதான் மோடியின் சாதனை. மூன்று மடங்கு உயர்த்தினார்கள். தேர்தல் வருவதால் கண்துடைப்பு நாடகமாக இப்போது 200 ரூபாயை மட்டும் குறைத்திருக்கிறார்கள். இதை மக்கள் நம்புவார்களா? 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும்போது பெட்ரோல் ஒரு லிட்டர் 71 ரூபாய். இப்போது ஒரு லிட்டர் 102 ரூபாய். ஒன்றிய அரசின் வரியை மூன்று மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வரும்போது டீசல் ஒரு லிட்டர் 55 ரூபாய். இப்போது ஒரு லிட்டர் 94 ரூபாய். ஒன்றிய அரசின் வரியை ஏழு மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது பா.ஜ.க. அரசு. இவர்கள் ஆட்சிக்கு வரும்போது இந்தியாவுக்கு இருந்த கடன் 55 லட்சம் கோடி ரூபாய்தான். அது, இந்த 9 ஆண்டுகாலத்தில் 155 லட்சம் கோடி ரூபாய் ஆகிவிட்டது. பெரிய நிறுவனங்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் பணத்தை வாராக் கடன் என்று சொல்லி தள்ளுபடி செய்திருக்கிறது பா.ஜ.க. அரசு. பணவீக்கம் அதிகமாகி இருக்கிறது. இப்படி வேதனையை மட்டுமே மக்களுக்குத் தந்த பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

    அண்மையில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கையின்படி மட்டும் 7.50 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் சிக்கி இருப்பது சி.பி.ஐ. அதிகாரிகள்தான் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமே புள்ளிவிவரம் கொடுத்திருக்கிறது. இத்தகைய ஊழல் முகத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த ஊழல் முகத்தைக் கிழித்தெறிய வேண்டும். இதுதான் நம் முன் இருக்கும் முக்கியக் கடமை. பா.ஜ.க.வின் ஊழல் முகத்தைப் பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி ஆக வேண்டும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நமது கூட்டணிதான் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் சந்தேகமே இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் நாம் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுமைக்கும் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் 15 மாதத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி எழுப்ப முடியுமா? முடியாதா? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா? தமிழ்நாட்டுக்குத் தேவையான ரயில்வே திட்டங்களை ஏராளமாகக் கொண்டு வர நம்மால் முடியும். புதிய விமான நிலையங்கள் – மெட்ரோ ரயில்களை இயக்க முடியும். இவை எல்லாமே நம்முடைய இந்தியா கூட்டணி ஆட்சி அமையுமானால் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியும். இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தர நம்மால் முடியும்.
    இங்கு நாம் அமல்படுத்தி வரும் திராவிட மாடல் திட்டங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. இந்தியாவைக் காக்க இந்தியா கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நம்முடைய அரசியல் கடமை மட்டுமல்ல! கொள்கைக் கடமையும்தான்!

    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி என்பது நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்களையும் வெற்றி பெற்றே தீருவோம் என்பதுதான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி என்பது இந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை செலுத்தும் கூட்டணிக் கட்சியாக நம்முடைய இயக்கத்தை உயர்த்துவோம் என்பதுதான்.

    அன்பு உடன்பிறப்புகளே! உங்களின் ஒருவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதுக்கு நாற்பது வெல்வோம்! இந்தியாவைக் காப்போம்! இந்தியா கூட்டணி வெற்றிக்கு முழுமையாகப் பாடுபடுவோம்! என்று இந்த வேலூர் மண்ணில் நடைபெறும் முப்பெரும் விழாவில் உறுதியேற்போம்… உறுதியேற்போம்… உறுதியேற்போம்… நன்றி, வணக்கம்!

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments