இந்தியில் தயாராகி சமீபத்தில் திரைக்கு வந்த தி கேரளா ஸ்டோரி படம் சர்ச்சையில் சிக்கியது. படத்துக்கு மேற்கு வங்காள அரசு தடை விதித்தது. தமிழ்நாட்டிலும் படத்தை திரையிடுவதை நிறுத்தினர். தி கேரளா ஸ்டோரி படத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.
சித்தி இத்னானி தமிழில் ஏற்கனவே வெந்து தணிந்தது காடு மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்தது குறித்து சித்தி இத்னானி அளித்த பேட்டியில், ”இந்த படத்தின் கதையை என்னிடம் சொல்லும்போது இது வழக்கமான கமர்ஷியல் படம் இல்லை என்பது புரிந்தது. படம் வெளியாகும்போது எந்த மாதிரி பிரச்சினைகள் வரும் என்ற கேள்விகளும் மனதில் இருந்தது.
இதே உணர்வில் மற்றவர்களும் இருந்தார்கள். இதையும் தாண்டி படத்தின் மையக்கரு பார்வையாளர்களை சேர்ந்தால் படத்தை எடுத்த நோக்கத்தை நிறைவேற்றும். இதனை ஆலோசித்தே படத்தில் நடிக்க சம்மதம் சொன்னேன்” என்றார்