தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறை வேற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுமென்றே காலதாமதம் செய்துவரும் நிலையில் தமிழ்நாடு அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அதில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான மசோதாக்களை தாமதப்படுத்துவது, பரிசீலிக்கத் தவறுவது, ஒப்புதல் அளிக்கத் தவறுவது போன்ற நட வடிக்கைகளில் ஆளுநர் ஈடுபடுகிறார். மாநில ஆளுநர், சட்டப்பூர்வமாக தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு ஒரு அரசியல் போட்டியாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களை பரிசீலிப்பதில் அநியாயமாகவும் மிகையாகவும் தாமதப்படுத்துவதன் மூலம் சட்டமன்ற கடமைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறார். அரசியல் உள்நோக்கத்துடன் நடந்து கொள்கிறார்.
அரசியலமைப்பின் அடிப்படையில் செயல்படாமல், குடி மக்களின் ஆணையை அவர் தூக்கி எறிகிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளது. மேலும், “அரசியலமைப்புச் சட்டம் 123, 213, 311(2) விதிகள் (உ) 317, 352(1), 356 மற்றும் 360 குறிப்பிடும் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரின் திருப்தி என்பது, அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் செயல் படக்கூடியது அல்ல. மாறாக, குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் பொதுவாக அவர்களது அனைத்து அதிகாரங்களையும் செயல்பாடுகளையும் யாருடைய உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்படுத்துகிறார்களோ, அந்த அமைச்சர்கள் குழுவின் திருப்தியையே குறிப்பதாகும்.
அதன்படி அமைச்சரவைக் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் அடிப்படை யில் மட்டுமே அவர்களின் செயல் இருக்க வேண்டும். அமைச்சர் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்பட மறுப்பது அரசியலமைப் பின் அடிப்படை கட்டமைப்பையும் மீறுவதாகும்” என்று குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு, “ஆளுநர் மாநில நிர் வாகத்தின் தலைவர் பதவியை வகித்தாலும், அவர் ஒரு பெயரளவு தலைவரே. நடைமுறையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அமைச்சர்கள் குழுதான் நிர்வாக அரசாங்கத்தை நடத்துகிறது. அவ்வா றிருக்கையில் ஆளுநரின் நடவடிக்கை கள் சட்டமன்றத்தின் உரிமைகளை அப கரிப்பதாக உள்ளது” என்று தெரி வித்துள்ளது.
“அரசியலமைப்பின் 200-ஆவது பிரிவு, ஆளுநர்கள் ஒப்புதல் வழங்குவதற்கும் அல்லது நிறுத்துவதற்கும் அதிகாரம் அளிப்பதுடன், அவ்வாறு ஒப்புதல் அளிப்பதற்கும், நிறுத்து வதற்கும் காலக்கெடு எதையும் குறிப்பாக நிர்ணயிக்கவில்லை. அதேநேரம் கூடிய விரைவில் (“as soon as possible”) முடிவெடுக்க வேண்டும் என் பதைக் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே, தமிழ்நாடு ஆளுநரின் செயலற்ற தன்மை, புறக்கணிப்பு, தாமதம் மற்றும் ஒப்புதல் அளிக்கத் தவறியது ஆகிய தன்னிச்சையான செயல்கள் சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவிப்பதுடன் ஆளுநர் ஆர்.என். ரவி, நிலுவையில் வைத்துள்ள மசோதாக்கள் மற்றும் அரசாங்க உத்தரவுகளை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் கால வரம்பு நிர்ணயித்து உத்தரவிட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்த மனு வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.