ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே கூறியதாவது:
ஐசிசி போட்டிகளில் ஆண்களுக்கு நிகரான பரிசுத்தொகை மகளிர் அணிகளுக்கும் வழங்கப்படவுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க தருணம். சம அளவிலான பரிசுத்தொகை வழங்குவதை இலக்காகக் கொண்டு 2017 முதல் ஐசிசி போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஆண்டுதோறும் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பைப் போட்டியில் வழங்கப்படும் பரிசுத்தொகையே மகளிர் உலகக் கோப்பைப் போட்டிக்கும் வழங்கப்படும். இந்த நடைமுறை டி20 உலகக் கோப்பை, யு-19 உலகக் கோப்பைக்கும் பொருந்தும்.
கிரிக்கெட் அனைவருக்குமான விளையாட்டு. கிரிக்கெட்டில் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் சமமாகக் கொண்டாடி, மதிப்பளித்திடுவதற்கு ஐசிசியின் இந்த முடிவு வலுசேர்க்கிறது என்றார். சமீபத்தில் நடைபெற்ற ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ. 13 கோடியும் மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ. 8.20 கோடியும் பரிசுத்தொகையாகக் கிடைத்தன.
இதுதவிர டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசாதபோது விதிக்கப்படும் அபராதங்களிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி ஓவர் வீசும்போது, ஒவ்வொரு வீரருக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்து ஓவருக்கு 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக ஆட்ட ஊதியத்தில் 50 சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலிருந்தே அமலுக்கு வருகிறது.
80 ஓவர்களில் புதிய பந்தை மாற்றிக்கொள்ளும் நடைமுறை இருப்பதால், ஓர் அணி 80 ஓவர்களுக்குள் ஆட்டமிழக்கும்பட்சத்தில் இந்த அபராதம் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.