தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்தனர். அமைச்சரின் இல்லத்திற்கு வழக்கறிஞர்கள், திமுக தொண்டர்கள் வந்திருப்பதால் பரபரப்பான சூழல் நிலவியது. விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் அமலாக்கத்துறையினர் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு சிறுபாண்மை ஆணையத்தின் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸ் சமூக வலைத்தள பதிவு:
தமிழக அரசின் தலைமை செயலகத்தில் வருவாய் புலனாய்வு துறையினர் ஒன்றிய அரசின் ஆயுதம் தாங்கிய காவலர்களோடு வந்து சோதனை செய்வது பல எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும்.
அதைப்போல ஒன்றிய அரசின் ஆளுகைக்குள் இருக்கும் வளாகங்களில் மாநில அரசின் காவல்துறையும் சோதனைகளை நடத்த முடியும்.
வரும் ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் நடக்க இருக்கும் எதிர்கட்சி தலைவர்களது கூட்டத்தை நினைத்து அரண்டுபோயிருக்கும் டெல்லி பாதுஷாக்கள் எதிர்கட்சித் தலைவர்களை மிரட்டி பயமுறுத்தும் திட்டத்தின் ஒருபகுதிதான் இந்த சோதனை என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பயப்படுவார் என சங்கிகள் நினைத்தால், அய்யோ பாவம் அவர்கள் ஏமாந்துபோவது நிச்சயம்.
வில்லின் நாண் முறுக்கேற முறுக்கேற அம்பின் வேகமும், வீச்சும் அதிகரிக்கும் என்பதை விரைவில் அறிவார்கள்.
அழிவின் காலம் முன் வருவது மதிகேடு.

