“அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மக்களுக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும்” என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மக்களுக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
உலகப் பெருங்கடல் தினத்தையொட்டி சென்னையிலுள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நிலத்தில் வாழும் நமக்கு கடல்வாழ் உயிரினங்களுடன் நேரடித் தொடர்பு உள்ளது என்றார்.
அரசு மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் அதன் பயன்கள் அனைத்தும் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், அப்போது தான் அரசு என்ன செய்கிறது என்பது மக்களுக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார். நமது நடவடிக்கைகள் நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல், கடல்சார் உயிரினங்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கடல்சார் தொழில்நுட்பத்தில் நாட்டை முன்னிலைப்படுத்துவதற்காக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் சீரிய பங்களிப்பிற்கு அவர் நன்றி தெரிவித்தார். நமது ஆராய்ச்சிகள் அனைத்தும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். புவி அறிவியல் துறை மேற்கொள்ளும் நிலம், கடல், வான் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் அறிய வகை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஒரு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் செய்தி அனைவரையும் எளிதில் சென்றடைவதைபோல், அண்டார்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளிலும், கடலுக்கு அடியிலும் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் எளிதில் சென்றடைய வேண்டும் என்ற தமது விருப்பத்தை அவர் வெளியிட்டார்.
எதிர்காலத்தில் ஆழ்கடல் பகுதியில் மேலும் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்றும், இதில் இந்த நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நமது ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்று உறுதியளித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, நமது நாட்டின் கண்டுபிடிப்புகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி, மொத்த உலகத்திற்கும் பயனுள்ளதாக அமையும் என்றார்.
இயற்கையை மதித்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று கூறிய அமைச்சர், இந்தியப் பெருங்கடல் பகுதி மட்டுமின்றி சுமத்ரா, ஜாவா தீவுகள் பகுதியிலும், ஆழ்கடல் ஆராய்ச்சியில் நமது விஞ்ஞானிகள் நன்கு செயல்பட்டு வருகிறார்கள் என்றார்.
பின்னர் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுக் கப்பல்களான சாகர் அன்வேஷிகா மற்றும் ஓஆர்வி சாகர்நிதி ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஓஆர்வி சாகர்நிதி கப்பலில் அமைச்சர் சிறிது தூரம் பயணித்தார்.
கப்பல் தடமறியும் அமைப்பு’ (Ship Tracking System) செயலியையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் கடலில் பயணிக்கும் கப்பல் குறித்து அறிந்து கொள்ள முடியும். இந்த செயலியை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமே தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.