அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளியில் அசோக் ராய் பயிற்சி சிமுலேட்டர் வளாகத்தின் தொடக்கத்தை நினைவுகூரும் வகையில் அஞ்சல்துறையின் தமிழ்நாடு சரகத்தின் கீழ் உள்ள சென்னை நகர் மண்டலம் சிறப்பு அஞ்சல் உறையை 2023 ஏப்ரல் 25 அன்று வெளியிட்டது.
இந்த சிறப்பு உறையை அஞ்சல்துறையின் சென்னை நகர் மண்டலத்தின் போஸ்ட்மாஸ்டர் ஜென்ரல் திரு ஜி நடராஜன் வெளியிட பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே பெற்றுகொண்டார். கிழக்கு மண்டல கப்பற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ் குப்தா, ஐஎன்எஸ் ராஜாளியைச் சேர்ந்த அதிகாரி திரு கபில் மேதா உள்ளிட்டோர் இந்த சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அசோக் ராய் பயிற்சி சிமுலேட்டர் வளாகம் என்பது பி81 போர் விமானத்தின் விமானப் பணியாளர்களுக்கும், நிலப்பகுதி பணியாளர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கான நவீன சிமுலேட்டர் ஆகும். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தவகையில் நான்காவதாக செயல்பாட்டுக்கு தயாரான திட்டமாகும் இது.
மேம்பட்ட பயிற்சி தரங்களை இது கொண்டுள்ளது. 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது முக்கிய பங்களிப்பு செய்த இந்திய கப்பற்படை கப்பலின் விமானியாக இருந்த லெப்டினென்ட் கமாண்டர் அசோக் ராயின் பெயர் இந்த சிமுலேட்டருக்கு சூட்டப்பட்டுள்ளது. இவர் வீர் சக்ரா விருதும், கப்பற்படை பதக்கமும் பெற்றவர்.