வாஷிங்டன்,
2023-ம் ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதனை முன்னிட்டு ஜி-20 நாடுகளின் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசின் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான செயலாளர் டொனால்ட் லூ செய்தியாளர்களிடம் கூறியதாவது;- “நிச்சயமாக 2023 ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும். இந்தியா ஜி-20 மாநாட்டை நடத்துகிறது. அமெரிக்கா ‘ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு’ மாநாட்டை நடத்துகிறது. அதே போல் ஜி-7 மாநாட்டை ஜப்பான் நடத்துகிறது. இது நம் அனைவருக்கும் நமது நாடுகளை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
செப்டம்பர் மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதை ஜனாதிபதி ஜோ பைடன் ஆவலுடன் எதிர்பார்க்கிறார். ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அவர் இந்தியாவுக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும். அடுத்த சில மாதங்களில் என்ன வரப்போகிறது என்பதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்தப் புத்தாண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், பல அற்புதமான விஷயங்கள் நடந்துள்ளன.” இவ்வாறு டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.